நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை Print
Monday, 01 June 2015 07:52

நிகாஹ்: ஒரு பாடநெறி தேவை

ஈஜாப், கபூல், அக்துன் நிகாஹ் என்றால் என்ன?

வலியுடைய நிலைப்பாடு என்ன?

அவருடைய கடப்பாடு என்ன?

நிகாஹ் செல்லுபடியாவதற்குரிய நிபந்தனைகள் எவை?

தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் இவையெல்லம் (இபாதத்) கட்டாயக் கடமை என்பது எமக்குத் தெரியும். ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது, தொழுவிப்பது, நல்லடக்கம் செய்வதும் இபாதத் என்பதை புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், திருமணமும் ஓர் இபாதத் என்பதை நாம் எந்தளவு தூரம் புரிந்து வைத்திருக்கின்றோம்? என்ற கேள்வியை நாம் அடிக்கடி எழுப்புவதுண்டு.

பலபோது திருமணத்தை, திருமணத்தோடு தொடர்புபட்ட விடயங்களை, குடும்ப வாழ்க்கையை, குடும்ப வாழ்க்கையோடு தொடர்புபட்ட விடயங்களை இபாதத்தாக பார்க்கத் தவறி விடுகின்றோம். ஆனால், உண்மை என்னவெனில், திருமணம் என்பதும் ஓர் அமல், இபாதத்ளூ குடும்ப வாழ்க்கை என்பதும் ஓர் அமல், இபாதத்.

கணவன் மனைவிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, மனைவி கணவனுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது, பிள்ளைகள் பெற்றோருக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவது... இவ்வாறு குடும்ப வாழ்க்கையோடு தொடர்பான அனைத்தும் அம்சங்களும் இபாதத்களாக, நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களாக எமது மார்க்கத்தில் கொள்ளப்படுகின்றன என்ற செய்தியை எமது சமூகத்துக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.

நிகாஹைப் பொறுத்தவரை இரு தரப்பினர் சம்பந்தப்படுகின்றனர். மணமகன் தரப்பு, மணமகள் தரப்பு. ஆண் தரப்பு,பெண் தரப்பு என்றும் சொல்லலாம். ஆனால், எல்லா விடயங்களிலும் போல் இங்கும் ஆண் தரப்பினரே செல்வாக்குச் செலுத்துவதை பார்க்கிறோம்.

நிகாஹ் மஜ்லிஸிலே கலந்து கொள்பவர்கள் ஆண்கள்ளூ ஈஜாப்-கபூலிலே வலி, ஷாஹித் என ஆண்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதையே பார்க்கிறோம். இதில் பெண்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

ஈஜாப், கபூல், அக்துன் நிகாஹ் என்றால் என்ன?

வலியுடைய நிலைப்பாடு என்ன?

அவருடைய கடப்பாடு என்ன?

நிகாஹ் செல்லுபடியாவதற்குரிய நிபந்தனைகள் எவை?

இது எவ்வளவு உறுதியான ஓர் உடன்படிக்கை என்பன குறித்து பலபோது பெண்கள் தரப்பினருக்கு தெரியாமல் இருக்கின்றது. அவர்கள் நிகாஹ் என்று வந்துவிட்டால் மணவறை, ஆடை அணிகலன்கள், எப்படிப்பட்ட உணவு வகைள், தீன்பண்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியே சிந்திப்பார்கள். ஆண்கள் ஏனைய விடயங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த வலியும் இல்லைளூ ஈஜாபும் இல்லைளூ கபூலும் இல்லைளூ ஷாஹிதும் இல்லை. இது கவலைக்குரிய நிலைமையாகும்.

குத்பாவுக்கும் ஆண்கள், பயானுக்கும் ஆண்கள், ஹதீஸ் மஜ்லிஸுக்கும் நிகாஹுக்கும் ஆண்கள். சில பெண்ணிலைவாதிகளின் குற்றச்சாட்டை வைத்துச் சொல்வதானால் ஆணாதிக்க மார்க்கமாக மாறியிருக்கிறது. இந்த மார்க்கத்தில் பெண்களுக்கு எந்த இடமுமில்லை என்பது போன்ற அவர்களது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில்தான் நிலைமை அமைந்திருக்கின்றது.

எந்த நல்ல செய்தியும் அவர்களது செவியை அடைய முடியாத வகையில் இரும்புத் திரைகளை, தடுப்புச் சுவர்களை எழுப்பி வைத்திருக்கிறோம். பெண்கள் சுதந்திரமாக ஷொப்பிங் போகிறார்கள்ளூ விழாக்கள், விருந்துகளுக்குப் போகிறார்கள், சுதந்திரமாக பாடசாலைக்குப் போகிறார்கள், கல்லூரிக்குப் போகிறார்கள், பல்கலைக்கழகம் போகிறார்கள். சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் போகிறார்கள். ஆனால், மார்க்கம் என்று வந்துவிட்டால் மாத்திரம், நல்ல விடயங்களை கேட்டு விடக் கூடாது, பார்த்து விடக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறோம்.

ஷைத்தானிய சூழல் இருக்கின்ற இடங்களிலெல்லாம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், மலக்கானியத்தான சூழலுக்கு மாத்திரம் நாம் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தி விடுகிறோம்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆலிமிடம் 'பள்ளிவாசல் பெண்களுக்கு தடைசெய்யப்பட்ட இடமாக இருக்கின்றதே ஏன்? பெண்கள் வேறு இடங்களுக்கு வந்துட்டு போகிறார்கள்தானே! பள்ளிவாசலுக்கும் வந்து விட்டுப் போகட்டுமே!' என்றேன். இதற்கு அந்த ஆலிம் ஓர் அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார். 'பஸார் கெட்டு விட்டது; பாடசாலை, பல்கலைக்கழகம் எல்லாம் அழிவுக்குள்ளாகி விட்டன. இந்தப் பள்ளிவாசலொன்றுதான் எஞ்சியிருக்கிறது. அதையும் அழித்துவிடப் போகிறீர்களா?' என்று கேட்டார்.

அதை மறுக்க முடியாது. ஆனால், இப்படிச் சொல்லி, இந்த நியாயத்தைச் சொல்லி பெண்கள் சமூகத்தை, சமூகத்தின் அரைவாசியை, சரிபாதியை, சமபாதியை தூரமாகத் தள்ளிவைத்ததனால் ஏற்பட்ட நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா? பிரதிகூலங்கள் அதிகமா, அனுகூலங்கள் அதிகமா? என்பது பற்றி கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஒரு காலமிது.

அஜ்னபி- மஹ்ரமி முதலான ஷரீஆவின் எல்லா வரையறைகளையும் பேணியவாறு பெண்கள் எப்படி ரமழான் காலங்களில் தராவீஹ் தொழுகைகளுக்கு சமுகமளிக்கிறார்களோ அல்லது ஏனைய ஹதீஸ் மஜ்லிஸுகளுக்கு சமுகமளிக்கிறார்களோ அந்தக் கட்டுப்பாடுகளோடு, வரையறைகளோடு குறைந்தபட்சம் நிகாஹ் மஜ்லிஸ்களிலாவது பெண் தரப்பும் கலந்து கொள்வதற்கு வழிசெய்வது மிகவும் பொருத்தமானதுளூ ஆரோக்கியமானதுளூ காலத்தின் தேவையும்கூட. இது ஒரு சன்மார்க்கக் கடமை என்று சொன்னாலும் அது பிழையாகாது என நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் கொழும்பில் முதற்தடவையாக பரீட்சார்த்தமாக இப்படி ஒரு நிகாஹ் மஜ்லிஸை நடத்தினோம். மேல் தட்டில் பெண்கள் கீழ்தட்டில் ஆண்கள். அல்லாஹ்வின் உதவினால் ஆலிம்;களின் ஆதரவோடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. எனவே, எதிர்காலத்தில் மிகக் கவனமாக, மிக விழிப்போடு எல்லா கட்டுப்பாடுகளையும் பேணிய வகையில் பெண்கள் தரப்புக்கும் செய்திகள் சென்றடைவதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழச்சிகள் பற்றிய மதிப்பீடுகள் எப்படி இருந்தாலும், பல விமர்சனங்கள் காணப்பட்டாலும் இன்று இலங்கை முஸ்லிம் பெண்கள் சமூகத்துக்கு ஓர் அருளாக இருப்பது முஸ்லிம் நிகழ்ச்சிகள்தான் என்றால் அதில் மிகையில்லை. அந்த வாய்ப்பும் இல்லையென்றிருந்தால் பெண்களுக்கு தமது ஈமானை வளர்த்துக் கொள்ள, உரமூட்ட வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே கிடைத்திருக்கும். அண்மைக் காலமாக பெண்களுக்கான பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது.

உலகத்தில் எல்லா விடயங்களுக்கும் பயற்சிநெறி, பாடநெறி உள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி, சமையல், சிகை அலங்காரம், தோட்டம் செய்வதற்கு என்று எல்லாவற்றுக்கும் பயிற்சி நெறிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், குடும்ப வாழ்க்கை தொடர்பாக எங்காவது பாடநெறி; நடக்கிறதா? கணவன்- மனைவி இணைந்து வாழ்வது எப்படி? கணவனுக்குள்ள கடமைகள், உரிமைகள் என்ன? மனைவிக்குள்ள கடமைகள், உரிமைகள் யாவை? பெற்றோர்- பிள்ளைகளுக்கிடையிலான உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும்? குடும்ப வாழ்வில் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வுகள் என்ன? இவற்றை உள்ளடக்கி எங்காவது பாடநெறி நடைபெறுகின்றதா?

எமது நாட்டில் இறப்பர் ஆய்வு நிலையம், நெல் ஆராய்ச்சி நிலையம், தேயிலை ஆராய்ச்சி நிலையம் என எல்லாவற்றுக்கும் ஆராய்ச்சி நிலையங்கள், நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதனுக்கு வழிகாட்ட எத்தனை ஆய்வு நிலையங்கள் இருக்கின்றன?

முஸ்லிம்கள் மிகவும் சொற்ப அளிவல் வாழ்கின்ற சிங்கப்பூரில் 'முஇஸ்' என்ற சன்மார்க்க விவகாரங்களுக்கான அமைப்பு திருமண பந்தத்தில் இணையவிருப்பவர்களுக்கான திருமண வழிகாட்டல் பயிற்சிநெறியை நடத்தி வருகின்றமை ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாகும். ஷரீஆவின் வழிகாட்டல்களுக்கமைய குர்ஆன், ஸுன்னா, ஸீராவின் ஒளியில் அப்பயிற்சிநெறிக்கான பாடநெறி தயாரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகில் பொதுவாகவும் எமது நாட்டில் குறிப்பாகவும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைதான் குடும்ப வாழ்வோடு தொடர்பான பிரச்சினை. இன்று உலகளவில் பேசப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று குடும்ப வன்முறை. அதிலும் பெண்கள் ஆண்களால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சர்வதேச ரீதியில் இதற்காக குரலெழுப்பும் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனாலும், குடும்ப வன்முறை குறைந்ததாகத் தெரியவில்லை. பாமர குடும்பங்களை விட நன்கு படித்த குடும்பங்களில்தான் குடும்ப வன்முறை அதிகம்.

ஆண்கள்தான் பெண்களுக்கு அநியாயமிழைப்பதாக பலர் குற்றம் சுமத்துகிறார்கள். பெண்கள் ஆண்களுக்குச் செய்யும் அநியாயத்தை அவர்கள் வெட்கத்தால் வெளியில் சொல்வதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, இளைஞர்-யுவதிகளுக்கு இது தொடர்பான ஒரு பாடநெறி அவசியம். எதிர்காலத்தில அத்தகைய ஒரு பாடநெறி ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இப்படிச் சொல்கின்றபோது 'எமது தாய்- தந்தையரெல்லாம் பாடநெறி செய்துதானா குடும்ப வாழ்க்கை நடத்தினார்கள்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

நாம் இப்போது சிக்கலான ஒரு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு வகையான சிந்தனா ரீதியான சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்கிறோம். நாம் சிறுவர்களாக இருந்தபோது எமது எம்மிடம் கையடக்கத் தொலைபேசி கிடையாது. ஒரு ஊரில் ஒரு சிலரின் வீடுகளில் மாத்திரமே தொலைபேசி இருந்தது. மரணச் செய்தி ஒன்று வந்து சேர்வதற்கே நான்கு நாட்கள் ஆகும். இலங்கையிலும் அப்படியான ஒரு நிலைமை இருந்தது. என்னை வளர்த்த உம்மம்மாவின் மையத்துச் செய்தி கிடைத்து நான் போய் சேர்வதற்குள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு விட்டது. ஒரு முப்பது, நாற்பது வருடத்துக்கு முன்னுள்ள நிலைமை இது.

ஆனால், இன்றைய இளைஞர்களின் கையிலிருக்கும் கைத்தொலைபேசியில் இணைய வசதி, முகநூல் (பேஸ் புக்), வைபர், வட்ஸ்அப், டெலிகிராம்... என்று அனைத்து வகையான நவீன தொழிலுநுட்பங்களும் உள்ளன. ஒரு பெண் பிள்ளை வீட்டுக்குள் இருக்கிறார். பாதுகாப்பாக இருப்பதாக எண்ணுகிறோம். ஆனால், அவருக்கு ஆயிரக் கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள். அடுத்த வீட்டிலல்ல, ஊரிலல்ல, கிராமத்திலல்ல, வாழுகிற அந்தப் பகுதியில் அல்லளூ முகநூலில் இருக்கும் நண்பர்கள். அவர்கள் யார்? அவர்களது கொள்கை என்ன? போக்கென்ன? சிந்தனையென்ன? எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் நண்பர்களாக உள்ளர்.வீட்டிலிருந்தவாறே அவர்களது மூளைகள் சலவை செய்யப்படுகின்றன.

இப்படி ஒரு பயங்கரமான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த யூ டியூப், பேஸ்புக் முதலான சமூகவலைத் தளங்கள் தடை செய்யப்படுமானால் மிக நல்லது. புரட்சிகள், பிரச்சினைகள் உருவாவதற்கு இவை சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. மற்றும் சில நாடுகளில் தடைசெய்துள்ளன. ஏனெனில், இவற்றிலுள்ள நன்மைகளை விட தீமைகளே அதிகம்.

முன்னர் ஓர் அனாமதேயக் கடிதம் எழுதுவதென்றால் எவ்வளவு கடினம்? துண்டுப் பிரசுரமொன்றை வெளியிடுவதென்றால் எவ்வளவு சிரமம்?  அதை எழுதி, தட்டச்சு செய்து, வடிவமைப்பு செய்து, ஒப்புநோக்கிய பின்னரே அச்சிட வேண்டும். ஆனால், இப்போது அப்படியில்லை. 5 நிமிடத்துக்குள் முழு உலகத்துக்கே ஒரு செய்தியைச் சொல்லி விடலாம். மனித மானத்தை மரியாதையை, கௌரவத்தை சிதைத்து விடலாம். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலரது புகைப்படங்களின் உருவத்தை மாற்றி முகநூலில் பதிவிடுகிறார்கள். இலங்கையில் இதுவரை பேஸ்புக்கினால் ஏற்பட்ட அவமானத்தினால் இரண்டு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். மற்றும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மிரட்டப்படுகிறார்கள்.

எனவே, இக்காலத்தில் வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. இன்றைய இளைஞர்- யுவதிகளுக்கு வாழ்க்கை தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் இன்று பல்வேறு வகையான சிந்தனைத் தாக்கங்கள் ஏற்பட்டு விட்டன. சிலர் நிகாஹ் தேவையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ளது போல் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்துவிட்டுப் போகலாமே என்று சிந்திக்கிறார்கள். ஓரினச் சேர்க்கை அதிகரித்து விட்டது. ஒருபால் திருமணத்திற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லையென்பதால் வெளிநாடு சென்று அத்தகைய திருமணத்தைச் செய்கின்ற அளவுக்கு நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது.

எனவே, தற்போது இந்நிலைமையிலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இவர்கள் அறிவூட்டப்பட வேண்டும்; இவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் விதிவிலக்கில்லாமல் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர், யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பிருக்கிறது. இதற்காக பாடநெறி உருவாக்கப்பட வேண்டும். உரைகள் மாத்திரம் போதாது. தரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கூடாக இளைஞர், யுவதிகள் கட்டம் கட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

source: http://sheikhagar.org/component/content/article/21-short-articles/426-nikah-a-syllabus-needed