Home இஸ்லாம் ஹஜ் "குர்பானி" என்னும் திருப்பலி
"குர்பானி" என்னும் திருப்பலி PDF Print E-mail
Saturday, 02 September 2017 06:46
Share

 Related image

"குர்பானி" என்னும் திருப்பலி

      ரஹ்மத் ராஜகுமாரன்      


குர்பானி எப்போது ஆரம்பித்தது ?

ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் தம்பதிகளுக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறக்கும்.

முதல் பிரசவ ஆணுக்கும் இரண்டாம் பிரசவ பெண்ணுக்கும் திருமணம்.

முதல் பிரசவ பெண்ணுக்கும் இரண்டாம் பிரசவ ஆணுக்கும் திருமணம். .இது இறைச் சட்டம். காரணம் வேறு மக்கள் எவரும் இல்லை. இப்போது இச்சட்டம் உலகில் எங்குமே இல்லை.

முதல் சூலில் காபிலும் இக்லீமா என்ற பேரழகியும், இரண்டாம் சூலில் ஹாபிலும் லுபூதா என்ற குறைவான அழகியும் பிறந்தார்கள்.

காபில் இறைச் சட்டத்தை மீறி தன்னுடன் பிறந்த பேரழகி இக்லீமாவை மணப்பேன் என்று கூற, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் சம்மதம் பெற குர்பானி கொடுக்கச் சொல்லி  "யாருடைய குர்பானியை இறைவன் ஏற்றுக் கொள்கிறோனோ அவருக்கே பேரழகி  இக்லீமா"  என்கிறார்கள்.

காபில் விவசாயி. வேளாண் விவசாயப் பொருட்களை குர்பானி கொடுத்தார். அவர் நல்ல கதிர்களையும், பழங்களையும் தனக்கும் உம்மி தொலிகளுடன் கூடிய கதிர்களையும் பழுதான பழங்களையும் இறை குர்பானிக்கு வைத்தார்.

ஹாபில் ஆடு மேய்ப்பாளர் .நல்ல கொழுத்த ஆட்டையும் பாலடை கட்டி, வெண்ணெய் போன்றவற்றை இறை அச்சத்துடன் குர்பானிக்கு வைத்தார்.

வானில் இருந்து புகையில்லாத வெள்ளை நெருப்பு பறந்து வந்து ஹாபில் உடைய குர்பானியை கரித்துக் கொண்டு போனது .எனவே ஹாபில் குர்பானி இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இக்லீமாவை திருமணம் செய்தார்.

தங்களுடைய உழைப்பின் பொருளை ஒரு பெண்ணுக்காக கொடுப்பதிலிருந்து திருமணத்தின் போது பெண்ணுக்கு "மஹர்" என்னும் மண கொடை முடிவு செய்யப்பட்டது அன்றிலிருந்துதான்.

'விவசாய பொருட்களையும் குர்பானிக்கு பயன்படுத்தலாம் ' என்ற கோட்பாட்டின் கீழ் தமிழர் பொங்கல் தினத்தின் போது பச்சரிசியில் பொங்கல் விளைந்த கரும்பு புதைந்த மஞ்சள் என்று இறைவனுக்கு படைத்து "பொங்கலோ பொங்கல்" என்று சப்தமிட்டு வழிபடுகின்றனர். இதுவும் தமிழர்களைப் பொறுத்தவரை குர்பானிதான்.
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுக்கும் போது "அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்" என்ற தக்பீர் முழக்கத்துடன் திருப்பலி எனும் குர்பானி கொடுக்கப்படுகிறது.

"ஆகவே அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு , (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்" (அல்குர்ஆன் 37 : 103)

"ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்" (அல்குர்ஆன் 37 : 107)

என்று கூறிய இறைவன் அன்றொரு நாள் ஹாபில் இடமிருந்து குர்பானியாக பெறப்பட்ட அந்த கொழுத்த செம்மறியாட்டை ,இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பகரமாக இறக்கி அறுக்கச் செய்தான். பகரம் கணக்கு சரியானது.

இதுவே எனக்கும் உங்களுக்குமான குர்பானி சட்ட கடமையாகியது.

அக்காலத்தில் அரபியர்கள் பலி பிராணிகளை கஃபாவில் வைத்து அறுத்து அதன் இரத்தத்தை கஃபாவில் தெளித்தும். அதன் இறைச்சியை கஃபாவை சுற்றியும் வீசி எறிவார்கள் இது இறைவனுக்குப் போய் சேரும் என்று நம்பினர்.

உடனே இறைவன்,

"குர்பானி மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடையது விடுவது இல்லை. உங்களுடைய இறை அச்சம்தான் அவனை அடையும்" (அல்குர்ஆன் 22 : 37) என்கிற இறை வசனம் இறங்கியது.

இந்து மதப்படி பலியிடப்படும் ஆடு மாடு போன்றவை ஆண் பாலினமாக இருக்க வேண்டும். கோழியாக இருந்தாலும் ஆண் பாலினமான சேவலாக இருக்க வேண்டும். பலியிடும் போது அதன் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்படும் போது அது மூன்று முறை தலையை குலுக்கும் போது அது தன்னை பலியிட சம்மதம் தெரிவித்து விட்டாகக் கருதி அதைப் பலி கொடுக்கின்றனர்.

"குர்பானி ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம்..... (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில) நிற்க வைத்தவாறே அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள்...... நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தி தந்தோம் " (அல்குர்ஆன் 22 : 36)

("ஸவாப்ப" - நின்றவைகளாக இருக்கிற நிலையில் என்ற வார்த்தையில் இருந்து தெரிகிறது)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலி ரளியல்லாஹு அன்ஹு   அவர்கள் அறுத்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம் 2137)

வேத காலத்தில் பசு மாமிசம் சாப்பிட்டதாக மஹாபாரத்தில்...

"பிராமண சுங்கிருதியின் மகனான சத்திரிய அரசன் ரந்தி தேவனுடைய விருந்தினர் சாலையில் நித்தம் 2000 பசுக்கள் அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது.

ஆதாரம் : ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்கா முதல் கங்கை வரை - 12வது அத்தியாயம்

"அக்கினித் தேயம்" என்னும் சடங்கு யாகத்தில் பசுதான் பலி கொடுக்கப்பட்டது.

பலி கொடுத்தல் வேத காலத்தில் மிக முக்கிய சடங்காக இருந்தது .காரணம் நம்மில் குறையும் மிருகக் குணங்கள் அழியச் செய்வதன் மூலமே இறைவனை நெருங்க முடியும் என்று அக்கால வேதக்காரர்கள் நம்பினர். அடுத்து வந்த பெளத்தம் , சமணம் சமயங்களின் எழுச்சியால் பலி கொடுத்தல் புறந்தள்ளப்பட்டு இப்போது இந்து சமயத் தின் ஓரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

பிக்கார்ட்ஸ் என்கிற பிரிட்டிஷ் விஞ்ஞானி: "மாமிசம் காய்கறிகள் இரண்டையும் உண்ணும் வகைச் சேர்ந்தவனே மனிதன். அசைவ உணவை தவிர்த்தல் நல்லதல்ல. காரணம் மனிதனின் குடற்பகுதியில் ஏராளமான பாக்ட்ரியாக்கள் படைக்கப்பட்டுள்ளன. இறைச்சி உட்கொள்ளும் போது அதனை எளிதாக செரிமானம் செய்து சக்தி ஆற்றலாக மாற்றவே பாக்ட் ரியாக்கள் உள்ளன. அசைவ உணவை உட்கொள்ளாத உடல் எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும் தளமாக மாறி விடுகிறது என்கிறார் விஞ்ஞானி,

அட, மனிதனுக்கு இரண்டு கோரைப் பல் இருப்பதே வெந்த அசைவ உணவை மென்று உட்கொள்ளத்தான் என்பதாக பரிணாம வளர்ச்சி ஆய்வார்கள் கூறிப்பிடுகின்றனர்.

குர்பானிக்கு தயாராகி விட்டீர்களா ?

- ரஹ்மத் ராஜகுமாரன்