Home இஸ்லாம் ஹஸீனா அம்மா பக்கங்கள் ஹஸீனா அம்மா பக்கங்கள் (7)
ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) PDF Print E-mail
Wednesday, 28 September 2016 07:29
Share

    ஹஸீனா அம்மா பக்கங்கள் (7)     

சொர்க்கத்தில் சிறை!

நாங்கள்
சிறுபான்மையினர்தாம்
ஆனால்,
எங்களுக்குத் தலைவர் என்று
இயம்பிக்கொள்வோரோ
எண்ணிக்கையில்
பெரும்பான்மையினர்!

ஆறுமுகங்கொண்டவர் கூட
ஒருமுகமாகப் பேசுகின்றனர்!
ஆனால்,
ஒருமுகமாகப் பேசவேண்டிய
எங்கள் தலைவர்களோ,
ஆறு விதமாகப் பேசுகின்றனரே

நாங்கள்
ஜமாஅத்துகளில் 
தோளுரசுவது
"சுன்னத்" எனக் கருதினாலும்
வாளுரசுவதற்கே
வழிதேடிக் கொண்டிருக்கிறோம்!

ஊருக்கொரு ஜமாஅத்
என்பதைவிட
ஆளுக்கொரு ஜமாஅத்
என்பதே எங்களின்
இன்றைய இலக்கணம்;
இன்றைய இலக்கணம்
இல்லை, தலைக்கணம்!

நாங்கள் 
சபைகளில் அரைப்பதோ
சந்தனம் - ஆனால்
ஒருவருக் கொருவர்
தினசரிப் பூசிக்கொள்வதோ
சேறு!

அவ்வப்போது 
எங்கள் பள்ளிவாசல்களில்
காணாமற் போவது
புதுச்செருப்பு மட்டுமன்று
பொறுமையும் தான்!

எங்களில்
ஹாஜிகளானோர்
நிய்யத்துக்குப்பின்
ஆனோரைவிடப்
பணஞ் சேர்த்துவிட்ட
நிர்பந்தத்தில்
ஆனோரே அதிகம்!

கட்சிகளில் இடம்பிடிக்கவும்
சினிமாக் 
காட்சிகளில் படம்பிடிக்கவும்
எங்களின்
பெயர்தாங்கிகள் செய்யும்
செலவுகளில்-
ஆயிரங் "குமர்"களை
அக்கரை சேர்த்துவிடலாம்!

"ஏழையாய் வாழச் செய்
ஏழையாகவே இறக்கச் செய்!
மறுமையிலும்-
ஏழைகளுடனேயே எழுப்பு!
இது
அண்ணல் நபி 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
அவர்களின்
அன்றைய துஆ!

பணக்காரர்களாக வாழச் செய்
பணக்காரனாகவே இறக்கச் செய்
மறுமையிலும் 
பணக்காரர்களுடனேயே எழுப்பு!
இது எங்களின்
இன்றைய அவா!

இறைவா
சிறைகளில் 
சொர்க்கத்தைத் தேடும்
எங்களுக்கு உன்
சொர்க்கத்தில் 
சிறையேனும் கிடைக்கச்செய்!

-இ. பதுருத்தீன்


நன்றி மறவாதீர்!

இறைவன், மற்றவர்களின் உதவி ஒத்தாசையைப் பெற்று வாழ்பவனாக மனிதனைப் படைத்துள்ளான்.

எந்த மனிதனும், தான் தனித்து இயங்க முடியும், யாருடைய உதவியும் எனக்குத் தேவையில்லை எனக் கூறி உலகில் வாழ்ந்துவிட முடியாது.

யாராக இருந்தாலும் மற்றவர்களின் உதவியின்றி வாழமுடியாது.

யாரிடமிருந்தெல்லாம் உதவி பெறுகிறானோ அவர்களுக்கும், அவனை படைத்து, அவனுக்குத் தேவையானதை எல்லாம் உலகில் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்ல, செய்ய கடமைப்பட்டுள்ளான், மனிதன்.

காரியம் ஆவதற்காக காலைப் பிடிப்பதும், காரியம் கைக்கூடியதும் உதறித்தள்ளுவதும் மனிதனின் இயல்பாக ஆகிவிட்டது.

"உங்களில் கடலில் ஏதேனும் தீங்கு ஏற்படும்போது அல்லாஹ்வைத்தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக்கொண்டிருந்த யாவும் மறைந்து விடுகின்றன. (அவன்தான் உங்களைக் காப்பாற்றுகிறான்.) அவன் உங்களை கரையில் சேர்த்து காப்பாற்றிய பின்பு அவனை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றிகெட்டவன்." (அல்குர்ஆன் 17: 26)


நேரான பாதை

இம்மையிலும், மறுமையிலும் வெற்றி தரும் கொள்கைகளும், கோட்பாடுகளுமே நமக்குத்தேவை. இது எங்கே இருக்கிறது?

அல்லாஹ் நமக்களித்த மார்க்கத்தில் இருக்கிறது. அல்லாஹ் நமக்களித்த மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்து நல்வாழ்வை அமைத்துக் கொண்டோமென்றால், நாம் நேரான பாதையில் சென்று வெற்றியைப் பெற்றே தீருவோம் எனச் சொல்லத்தான் வேன்டுமா?

இதோ திருக்குர்ஆன் கூறுகிறது;
"எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) உறுதியாகப் பற்றிக்கொள்கிறாரோ அவர் நேரான பாதையை அடைந்துவிட்டார்." (அல்குர்ஆன் 3: 101)


அவை ஒழுக்கம்!

ஹளரத் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு வாயிலாக அறிவிக்கப்படுகிறது, "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், 'ஒரு மனிதனை அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தைவிட்டு இன்னொரு மனிதனை எழுந்திரிக்கச் சொல்லி அந்த இடத்தில் தான் அமர்ந்து கொள்வது என்பது வேண்டாம். என்றாலும் ஒருவருக்கொருவர் தள்ளி உட்கார்ந்து கொள்ளுங்கள். இட விசாலத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.."


இம்மையும், மறுமையும்

"எவனொருவன் இவ்வுலக வாழ்க்கையை பிரியம் வைத்தானோ அவன் தனது ஆகிரத்துக்கு (மறுமை சுகபோகங்களுக்கு) இடையூறு ஏற்படுத்திக் கொள்கிறான். எவன் மறுவுலக வாழ்க்கையை பிரியம் வைத்தானோ இவ்வுலக சுகபோகங்களுக்கு இடையூறு செய்து கொள்கிறான்.

எனினும், அவன் மறுமைக்காக இவ்வுலக சுகபோகங்களை விட்டுவிடுவது பாதகமில்லை. அறிவுப்பூர்வமாக யோசித்தால் அழிந்துபோகும் ஒன்றைக்காட்டிலும், நிலையாக இருக்கும்படியானதைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்."

இந்த ஹதீஸ் அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரியங்கள் என்றல்லாமல் பொதுவான காரியங்களிலும், சமுதாயம் சம்பந்தப்பட்ட காரியங்களிலும் கூட நிரந்தர அம்சத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவை இறைவனுக்குப் பொருத்தமானவைகளாகவும் அமையும்.

 

மன்னிப்பு மன்னிப்பு

தவறு செய்வது மனித இயல்பு; அதை மன்னிப்பது இறைவனின் இயல்பு

இறைவன் பாவங்களை மன்னிக்கிறான், இல்லாவிட்டால் சொர்க்கம் காலியாகவே இருக்கும்.

மறதியை மன்னிக்கவே முடியாது. ஆனால், ஒருவன் செய்த மன்னிப்பை மறக்கவே முடியாது.

மன்னிப்புக் கேட்பதைவிட குற்றம் புரியாமல் இருப்பது மேல்.

மன்னிப்புக் கேட்பது கேவலம்தான். மன்னிக்க மாட்டேன் என்பது அதைவிடக் கேவலம்.


மலக்குமார்களின் பெயர் என்ன?

ஹளரத் ஜிப்ரயீல் அவர்களின் பெயர் அப்துல் ஜலீல்.

மீகாயீல் அவர்களின் பெயர் அப்துர் ரஜ்ஜாக்,

இஸ்ராயீல் அவர்களின் பெயர் அப்துல் காலிக்,

இஸ்ராஃபீல் அவர்களின் பெயர் அப்துஜ் ஜப்பார்.

(ஷரஹ் புகாரீ)

www.nidur.info