Home கட்டுரைகள் சமூக அக்கரை மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு உணர்த்துவது என்ன?
மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு உணர்த்துவது என்ன? PDF Print E-mail
Friday, 29 April 2016 17:59
Share

மாலேகான் தீர்ப்பு உணர்த்துவது என்ன?

[  மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சில குண்டுவெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புள்ளவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான சுவாமி அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகுதான், பயங்கரவாத செயல்பாடுகளில் இந்துத்துவா குழுக்களும் செயல்படுகின்றன என்பது தெரியவந்தது. அந்தத் திசையிலும் புலனாய்வு அமைப்புகள் தங்களின் பணியைத் தொடங்கியதால்தான் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

ஆனால், நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டவர்களின் பாதிப்புகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது? இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடுநிலையுடன்தான் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்றன. அந்த நம்பிக்கையை எப்படி மக்களிடம் ஏற்படுத்துவது என்பது இந்தத் தீர்ப்புக்குப் பிறகான விவாதமாக இருக்க வேண்டும்.

அரசியல் தலையீடுகள் காரணமாகவே நமது நாட்டின் புலன் விசாரணை அமைப்புகள் அரசியல் சர்ச்சைக்குள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் விசாரணை அமைப்புகளின் நடுநிலைப் பண்பு குறித்து சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுவது நல்லதல்ல. இன்னமும்கூட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்துத்துவா அடிப்படையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்துவதுபோல் தெரியவில்லை.]

மாலேகான் தீர்ப்பு உணர்த்துவது என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை, மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 2006 செப்டம்பர் 8-ல் மாலேகானின் ஹமீதியா மசூதி அருகே வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் குண்டுகள் வெடித்தன. தொடக்கத்தில், இது பாகிஸ்தானின் சதி எனவும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாதச் செயல்கள் எனவும் பேசப்பட்டது.

ஆனால், இந்தக் குண்டுவெடிப்பில் இந்துத்துவா குழுக்களுக்கு இருந்த தொடர்பு தெரியவந்ததைத் தொடர்ந்து வழக்கின் போக்கே மாறியது. அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் 9 முஸ்லிம்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போது சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் விசாரணைக் காலத்திலேயே இறந்துவிட்டார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் மொத்தம் 37 பேர் இறந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்து - முஸ்லிம் கலவரம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தக் குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிந்தது. மகாராஷ்டிர மாநில அரசு ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்ட’த்தின் கீழ் வழக்கைப் பதிவுசெய்தது. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் நியமிக்கப்பட்டது. இந்த நீதிமன்றம்தான் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. நிரபராதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதுதான் என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடிய இவர்களுக்கு என்ன இழப்பீட்டை அரசு தரப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

மாலேகான் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பானிபட் என்ற இடத்தில் 2007 பிப்ரவரியில் குண்டு வெடித்தது. ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் 2007 மே மாதம் குண்டு வெடித்தது. ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபரில் குண்டு வெடித்தது. மாலேகான் நகரிலேயே மீண்டும் 2008 செப்டம்பரில் குண்டு வெடித்தது.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் பணியில் இருந்த புலனாய்வு அமைப்புகள் சரியான பாதையில் போகாமல், தவறான திசையிலேயே விசாரணையைக் கொண்டுசென்றன என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது. உண்மைக்குப் புறம்பான தகவல்களை வைத்து, அப்பாவிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது. இதே காலத்தில் சில நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் என்று கருதப்படும் இந்திய முஜாஹிதீன்களும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சில குண்டுவெடிப்புச் சம்பவங்களோடு தொடர்புள்ளவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான சுவாமி அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகுதான், பயங்கரவாத செயல்பாடுகளில் இந்துத்துவா குழுக்களும் செயல்படுகின்றன என்பது தெரியவந்தது. அந்தத் திசையிலும் புலனாய்வு அமைப்புகள் தங்களின் பணியைத் தொடங்கியதால்தான் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

ஆனால், நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டவர்களின் பாதிப்புகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது? இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடுநிலையுடன்தான் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்றன. அந்த நம்பிக்கையை எப்படி மக்களிடம் ஏற்படுத்துவது என்பது இந்தத் தீர்ப்புக்குப் பிறகான விவாதமாக இருக்க வேண்டும்.

அரசியல் தலையீடுகள் காரணமாகவே நமது நாட்டின் புலன் விசாரணை அமைப்புகள் அரசியல் சர்ச்சைக்குள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் விசாரணை அமைப்புகளின் நடுநிலைப் பண்பு குறித்து சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுவது நல்லதல்ல. இன்னமும்கூட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்துத்துவா அடிப்படையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் பற்றிய முழுமையான ஆய்வை நடத்துவதுபோல் தெரியவில்லை.

தவறான குற்றச்சாட்டுகளின்பேரில் வாழ்க்கையையே இழந்து நிற்கும் அப்பாவிகளின் நிலைகுறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும். இனி இப்படி நேராதிருக்க வழிகாணப்பட வேண்டும். காவல் துறையும் புலனாய்வு அமைப்புகளும் இவ்வகைக் குற்றங்களை மேலும் தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அரசியல் சூழலும் ஆட்சியாளர்களின் நெருக்குதலும் தவறான செயலுக்கு அவர்களை இட்டுச்செல்வதாக அமைந்துவிடக் கூடாது. காவல் துறையும் புலனாய்வு முகமைகளும் இன்னமும் பழைய காலத்துப் பாதையிலேயே பயணப்பட்டாலும் பயங்கரவாதிகள் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்த நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். புலனாய்வு அமைப்புகளும் தங்களை நவீனப்படுத்திக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகளின் தவறுகளால் ஒரு நிரபராதிகூட பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்!

source: - தி இந்து - தலையங்கம் - 29 04 2016