Home கட்டுரைகள் சமூக அக்கரை 7 வயது மகன் 77 வயது தந்தை!
7 வயது மகன் 77 வயது தந்தை! PDF Print E-mail
Monday, 27 January 2014 10:40
Share

7 வயது மகன் 77 வயது தந்தை!

1980-கள் வரை சுகப்பிரசவம் என்னும் சொல் தவிர வேறு சொல் தெரியாதிருந்தது, கிராமப் புறத்திலும். நகர்ப்புறத்திலும் கத்தி கீறிய சிசேரியன் வயிறுகள் மிகக் குறைவு.

கத்தியைக் கண்ட வயிறுகள் மூன்றுக்கு மேல் பெற வியலாது என்றால், கத்தி காணாத கிராமப்புற வயிறுகள் எட்டுப் பிள்ளைகள், பன்னிரெண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தன.

கர்ப்பத்திற்கு இன்று வயது வரம்பு நிர்ணயிக்கின்றனர்.

1960, 70-களில் 50,55 வயதுகளில் கர்ப்பமாகி இயல்பாகப் பிரசவித்த பல பெண்கள் கிராமங்களில் இருந்தனர்.

ஒருவரது மகளுக்கும், அவர் தங்கைக்கும் ஒரே வயதாக இருக்கும். ஒருவரது கடைசி மகனை விட பெயரன் வயதில் மூத்தவராக இருப்பார்.

70, 77 வயதினில் குழந்தை பெற்று கொஞ்சிய ஆண்கள் இருந்தனர். இந்த இயல்பை, உண்மையை தமது கதைகளில் திறன்பட உவமையாக பாத்திரங்களாக்கி இருப்பார் கே. பாலச்சந்தர்.

மருந்துக் குவியல் உட்கொள்ளாத பிரசவம். பல பத்தாயிரங்கள் இழக்காத பிரசவம். பக்க விளைவு இல்லாது கைக்கு எட்டும் தொலைவில் கிராமங்களில் கிடைத்த ‘‘குழிமுண்டான், நல்ல சங்கு, பினாரிச் சங்கு, செந்த வண்டி வேர் செடிகள், பெருமரத்துப்பட்டை’’ இவைகளை இடித்து சாறு எடுத்து ஐந்து மாதக் கர்ப்பத்தில் மூன்று நாள் குடித்து பத்தியம் காப்பர்.

கர்ப்ப வேதனை எடுத்தவுடன் ஊரிலுள்ள மருத்துவப் பெண்மணியை அழைப்பர். அழகாக குழந்தையை வெளியே எடுத்து தொப்புள் கொடி, நஞ்சுக்கொடி அறுத்து, துடைத்து கைகளில் தருவர். இதற்கு பெறும் ஊதியம் 10/& ரூபாய். 1965, 70கள் நிலை. குழந்தையின் முடியை 40 நாட்களுக்குப் பின் எடுக்கும் போது ஒரு சீலை அவருக்குத் தரப்படும். சில இடங்களில் முடி‘களை’யும் பணியை பிள்ளைப்பேறு பார்த்த பெண்மணியே மேற்கொள்வார்.

குழந்தை பெற்ற மூன்றாம் நாளே எழுந்து கூட்டுக்குடும்ப வேலைகளைச் செய்யத் துவங்கிவிடுவர். வயல் வேலைகளுக்குச் செல்வர். வயிறு சரியாது அமைய நல்லெண்ணை வயிற்றில் தடவி துணியை வயிற்றில் கட்டுவர். உடல் நலிவடையாதிருக்க, ‘‘சட்டிக்காயம்’’ என்ற மருந்து செய்ய மருத்துவ குணம் கொண்ட 21 பொருட்கள் கடைகளில் பெற்று வந்து இடித்து பொடியாக்கி சலித்து தேங்காய்பால், நல்லெண்ணையில் கிளறி 40 நாட்களுக்கு காலை மட்டும் சிறிய கிண்ணத்தின் அளவு உண்பர்.

அவரவர் பொருளாதார வசதிக்குத்தக்க வைத்திருக்கும் ஆட்டும் உரலில் ஊரவைத்த அரிசி, இடுப்பளவு, முழங்கால் அளவு உயரமுள்ள உளுந்து போட்டு ஒருவர் தள்ளிவிட மற்றொருவர் உரலை ஆட்டுவார். இருபதுபேர் திண்ணக்கூடிய தோசை, இட்லி மாவை இருவரும் கைகளால் ஆட்டி முடிப்பர்.

இதே பாணியில் திரிகைக் கல்லில் அரிசி, கேழ்வரகு அரைத்து உப்புமா, களி செய்வர். புட்டு, இடியாப்பத்திற்கு பச்சரிசியை உரலில் வைத்து உலக்கையால் குத்துவர். ஆணம், குழம்பு செய்யும் மசாலாக்களை அம்மியில் அரைத்தெடுப்பர். நெல்லை விறகு அடுப்பில் வேகவைப்பர். வெயிலில் உலர்த்துவர். அரவை இயந்திரத்தில் அரைத்து வந்து உமியை புடைப்பர். குடிக்கும் நீருக்கு நீண்ட தூரம் நடந்து சென்று தலையில், இடுப்பில் சுமந்து வருவர்.

புளிய மரத்தில் புளியை பறித்து காயவைத்து ஓடு தனியாக பிரித்தெடுப்பர், கொட்டையை நீக்குவர். மிளகாய் பறித்து வந்து காயவைத்து பானையுள் வைத்திருப்பர். கைகளால் அம்மியில் அரைப்பர். அரவை இயந்திரத்தில் அரைப்பது அன்று இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது. மாலை சிற்றுண்டிக்கு பானை ஓட்டில் அரிசியை அடுப்பில் வெறுமனே வறுத்து டப்பாவில் வைத்துக் கொள்வர் தேநீருடனான நொறுக்குத்தீனி.

இவையனைத்தும் இன்று நகரத்தில் இல்லை என்பது அதிசயமல்ல. கிராமங்களிலேயே இல்லை. நகரங்கள் போலவே கடைக்கோடி கிராமங்களும் ஆகிவிட்டன. வசதி வாய்ப்புப் பெறவியலாத கிராமங்கள் தவிர மற்ற கிராமங்கள் அனைத்திலும் தமிழகத்தின் நகரத்தின் வசதிகள் அனைத்தும் வந்தடைந்து விட்டன.

உணவு விளைவித்தல் நிகழ்த்திய மாற்றம். உணவு முறைப் பேணல். இயற்கை மருத்துவம் ஏற்காமை. பாரம்பர்ய மண்ணின் உணவு முறைகளை மறந்து நா ருசிக்கேற்ப தேடிய அன்னிய உணவுகளால் உடலின் நிலையில் தலைகீழ் மாற்றம். அலோபதி மருத்துவம் உடலுக்கு வழங்கிய பங்களிப்பால் மரபு தொலைந்தது. உடல் வலிமையற்றுப் போனது.

ஊட்டச்சத்து குறைவானது. தாய்ப்பால் ஊட்டாத போக்கு. தாய்ப்பால் இல்லாமல் போகுதல்களால் குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தியின்றி பிறக்கின்றன. நூற்றில் இருபது பெண்களுக்கு தைராய்டு இருக்கிறது. நூற்றில் எழுபத்தைந்து பேருக்கு நீரிழிவு நோய்.

நூற்றில் முப்பத்தைந்து பேர்களுக்கு கர்ப்பப்பை அகற்றுதல், கிழிறங்குதல் நடக்கிறது. கர்ப்பப்பை கட்டிகள். மாதவிடாய் தொடர்ச்சியாக வருதல், வராதிருத்தலில் ஏற்படும் பல கோளாறுகள். அதிக, குறைந்த இரத்த அழுத்தம் நோய்கள். நகர வாழக்கையில் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அவதிப்படுகிறது பெண்ணினம். மாத்திரைகளுடன் வாழ்வின் யாத்திரைகள் நடக்கிறது. 30 வயதுக்குள் குழந்தைப் பேறை முடிக்கும்படி மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். 40 வயதில் கர்ப்பம் தரித்தால், கலைத்துவிடு உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கின்றனர்.

முதுகுத் தண்டை வளைத்து ஊசியிட்டு வயிறு கீறி குழந்தை எடுக்காத பெண்களை எதிர்காலத்தில் காண இயலாமலே போய்விடும் நிலை இருக்கிறது. காரணம் வீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம். அனைத்து வகை குழம்புகளுக்கும் ரெடிமேடு முன் தயாரிப்பு மசாலா பொட்டலங்கள் கால்கள் எட்டும் தூரக் கடைகளில் தொங்குகின்றன. ஆட்டுரல், அம்மிக்கல் மறந்து மிக்ஸி, கிரைண்டருக்கு மாறினர். இன்று அதுவும் மறக்கும் நிலைக்கு மக்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன பாக்கெட் பொட்டலங்களின் அணிவகுப்பு.

வாசல் அருகே கிடைக்கும் 15/& ரூபாய் தோசை மாவு. 5/& ரூபாய் இட்லி மிளகாய் பொடியுடன் இரவு உணவை முடித்து விடுகின்றனர். மதிய உணவுக்கு பொட்டலத்தை கீறி வெந்நீரில் ஊற்றினால் குழம்பு தயார். உழைப்பை மிகச் சுருக்கி கேப்ஸல் போன்று ஆக்கிவிட்டனர். நடந்து செல்வதற்கும் வாய்ப்பில்லாத சிறிய அறை, ஹாலுக்குள் வாழ்வு நீண்டு முடிந்துவிடுகிறது. ஓய்வு நேரத்தை தொலைக்காட்சி ஈடுசெய்கிறது. தொலைந்தது மரபும் கலாச்சாரமும்.

குழந்தை பத்து பதினைந்து எனப் பெற்றெடுத்த பழங்காலத்திலும் அவர்களை ஆளுமையுடன் வளர்த்தெடுத்ததை கண்டபோதிலும் குழந்தையே வேண்டாம் என்று இருந்தோரும், கர்ப்பம் தரித்தலை தள்ளி வைத்தோரும், ஒரு கர்ப்பத்திற்குப் பிறகு மற்றொரு கர்ப்பம் வேண்டாம் என்றோரும் இருந்திருக்கின்றனர் என்பதை ஒளவைப் பாடல் ‘‘கொன்றை வேந்தன்’’ பதிவு செய்திருக்கிறது. ‘‘சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை’’ என்று ஒற்றை வரிக்குள் பழம் சமூகத்திலிருந்த சிலரது போக்கை உட்புதைத்து தந்திருக்கிறார் ஒளவை.

இன்றைய நகர வளர்ச்சி, பணியின் அழுத்தம் நகரப் பெண்கள் குழந்தை பிறப்பு தள்ளிப்போடலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒளவை எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே கவலைப்பட்டிருக்கிறார். ‘வந்தி’ என்று ஒளவை குறிப்பிட்ட சொல்லுக்குப் பொருள் ‘மலடு’.

உடல் கோளாறு, மரபுக் கோளாறு, செயல் வினையின் எதிர்வினை இவைகளால் மலடு ஆவது இறைவன் செயல். ஒளவை கூற வருவது அதுவல்ல ‘‘வந்தி செய்யாமை’’ மலடு செய்யாதே என்கிறார். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்து பெற்றெடுக்கலாம் என்று கர்ப்பம் தரித்தலை தள்ளி நிறுத்தும் சாதனங்கள் அணிதல், மாத்திரைகள் உட்கொள்ளுதல். ஒரு குழந்தைக்குப் பிறகு வேண்டாம் என்ற தொடர் பேணல் இன்று இருப்பது போன்று அன்றும் ஏதோ ஓர் வகைத் தடுத்தலைக் கையாண்டுள்ளது குறித்து கவலைப்பட்ட ஒளவை குறிப்பிடுகிறார் மனித மரபின் தொடர்ச்சிக்கு வமிச வளர்ச்சிக்கு சந்ததி குழந்தை அவசியம். சிறப்பானதும் கூட ஆகவே அதைத்தடுக்காதே. மலடு ஆகாதே. மலடு ஆக்காதே என்றுரைத்திருக்கிறார்.

-அமீர்கான்,

முஸ்லிம் முரசு நவம்பர் 2013

source: http://jahangeer.in/?paged=6