Home கட்டுரைகள் சட்டங்கள் இஸ்லாமியச் சட்டம் (1)
இஸ்லாமியச் சட்டம் (1) PDF Print E-mail
Saturday, 21 February 2009 21:01
Share

இஸ்லாமியச் சட்டம் (1)

     நீடூர், A.M.ஸயீத் (ரஹ்)      

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229)

உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.

இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.

'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும்.

சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.

உருவான வரலாறு

இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு திருக்குர்ஆன், ஸுன்னா, இஜ்மா, கியாஸ் ஆகியன மூலாதாரக் கருவூலங்களாகும்.

கி.பி.570-ல் இறையருள் கொடையாகப் பிறந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். தாம் பிறந்த திருமக்கா நகரை விட்டு மதீனா நகருக்க அவர்கள் சென்ற நாள் தான் ஹிஜ்ரி ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இஸ்லாமிய ஆண்டு, சந்திரனின் தோற்றத்தையும் மறைவையும் கொண்டு நாள்களாகவும் மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின், கி.பி.632 முதல் 634 வரை ஹள்ரத் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், கி.பி.635 முதல் 644 வரை ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், கி.பி.645 முதல் 656 வரை ஹள்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் கலீபாக்களாக - ஜனாதிபதிகளாக மிகச் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு கலீபாக்களை வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களை 'அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து' என அழைக்கிறார்கள்.

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால், முதல் கலீபாவாக வரும் தகுதி அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் '´யா' முஸ்லிம்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் நடந்த முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இஸ்லாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று.

முஸ்லிம் மன்னர்களையே ஆன்மீக ஞானியாக விளங்கிய அவ்ரங்கஸீப் (1618-1707) இப்னுஷாஜஹான் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் நீதிபதிகளால் குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபதவா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது.இஸ்லாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மகத்தாருக்கும் தனித்தனியான சிவில் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப் (கிரிமினல் லா') பொருத்த வரையில், இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்தியாவில் பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின.ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம் (Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது.

மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது.பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் ரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப்படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன.

சமயச் சார்பற்ற நாடு எனப் பிரகடன்படத்தப்பட்டுள்ள பாரதத்தில் ஒருமைப்பாட்டுணர்வும், சகோதரத்துவமும் நிலை பெறவேண்டுமானால், தனியார் சட்டங்களில் அரசூசா, நீதிமன்றங்களோ தலையிடாமல் இருக்க வேண்டும். தனியார் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய அரசு விரும்பினால், சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளை-வரவேற்பவை, அல்லது எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஹிந்துச் சட்டத்தில் இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. வளர்ந்து வரும் சமுதாயத்தில் நீதி வழங்குவதில் ஆண்-பெண் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹிந்துச் சட்டத்தில் சில கட்டுபாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இதனால் திருமணங்களைப் பற்றிய புது எண்ணங்களும், விவாகரத்துக்களை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் ஹிந்துக்கள் இடையேயும் மேலோங்கி, 1955-ம் அண்டு ஹிந்து திருமணச் சட்டம் அமலாக்கப்பட்டது.

இதன்மூலம் விவாகரத்து உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, சீர்திருத்த திருமணத்திற்கான அங்கீகாரம் ஆகியவை ஹிந்துக்களுக்கும் கிடைத்தன. இது அந்த சமுதாய மக்களின் ஆதரவைக் கொண்டும், கோரிக்கைகள் பேரிலும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஷரீஅத் சட்டம் சில தகவல்கள்

இஸ்லாமிய ரீஅத் சட்டம் ஒன்றினால் மட்டுமே, மனித இனத்தை மாபெரும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். குழப்பமும் பீதியும் பரவி, அமைதி இழந்து தவிக்கின்ற இன்றைய உலகுக்கு ஷரீஅத் சட்டம் இறைவனால் அருளப்பெற்றது. என்றென்றும் மாறாதது. அனைத்துலக மக்களுக்கும் வழிகாட்டக் கூடியது.

இன்றைய உலகில் அக்கிரமங்கள் மலிந்து காணப்படுவதற்குக் காரணம், இறைச் சட்டங்களை மனிதன் மறந்து விட்டது தான். 'அல்லாஹ் அருளிய (இவ்வேதத்) தைக் கொண்டு நீதி வழங்காதவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவர்' எனத் திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது. (5:45) பற்பல தத்தவங்கள் தோன்றிழியுள்ள விரிடைந்த உலகத்தில் புதுப்பித்துக் கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை நீதிபதிகள் நினைவு கூர வேண்டும்.

நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தது. (நூல்: தர்மிதீ, அபூதாவூது, தாரமீ)

இஜ்மா, கியாஸ்

திருக்குர் ஆனையும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழிகளையும் வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிற வழக்கங்களுக்கு (CUSTOM) இந்து மதச் சட்டத்தில் அதிகமான முக்கியத்துவம் உண்டு. ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன.

புதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். ´யா பிரிவினரும், ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குர்ஆன், ஹதீஸ் மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத வியங்களில் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரும்

முஸ்லிம்கள் யார்? முஸ்லிமல்லாதோர் யார்? என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்டால்தான் இஸ்லாமிய ரீஅத் சட்டத்தை முறையோடு பயன்படுத்த இயலும்.

இன்று கலப்புத் திருமணம் சமூக முன்னனேற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் காரணமாகிறது எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தைப் பொருத்த வரையில் கலப்புத் திருமணங்கள் மூலமாகச் சிக்கல்களும் குழப்பங்களும் விளைவதே உண்மை.

ஒரு முஸ்லிம் ஆண், ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து அவர்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் முஸ்லிம்களாகி விடுகின்றனர். மாற்று மதங்களை அவர்கள் பின்பற்றாத வரையில் முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிறப்பால் முஸ்லிமாக உள்ள ஒருவரை, சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர் முஸ்லிமாக வாழவில்லை என்பதற்காக 'அவர் முஸ்லிமல்ல' என்று ஒருவர் வழக்கானால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த வாதியையே சாரும்.

இந்தியாவை பொருத்த வரையில் முஸ்லிம்கள் அனைவரும் 'சுன்னத்து வல்ஜமாஅத்' முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, அந்தச் சட்ட அடிப்படையிலேயே நீதி வழங்கப்படுகிறது. ´யாமுஸ்லிம்களாக இருந்தால், வழக்கு மன்றத்தில் தம் எண்ணத்தை வெளிப்படுத்தி முறையிட்டுக் கொள்ளலாம். சுன்னத்து வல்ஜமா அத் முஸ்லிம்களிடையே ஹனபி, ஷாபி, மாலிகீ, ஹன்பலீ, ஆகிய சட்டப் பிரிவுகள் இருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எவ்விதக் கட்டுப்பாடும், தடையின்றி மாறிக் கொள்ளலாம்.

'அல்லாஹ் ஒருவனே இறைவன் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது திருத்தூதர்' என்னும் கலிமாவை மனத்தூய்மையோடு ஒருவர் கூறி, தன்னை முஸ்லிம் என்று வெளிப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியச் சட்டப்படி அவர் முஸ்லிமாவார். பிறசமயத்தாவர் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம், அந்த நாளிலிருந்தே முஸ்லிம் சட்டம் அவர்களுக்குப் பயன்படுத்தப்படும். ஒருவர் முஸ்லிமா, முஸ்லிமல்லாதவரா என்று சந்தேகம் எழுந்தால், அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறாரா? சமயக் கடமைகளைப் பின்பற்றுகிறாரா? அவருக்கு 'கத்னா (CIRCUMCISION) செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கருத்தில் கொண்டு அவர் முஸ்லிமாக என அறியப்படும்.

சொத்துரிமை இறக்கத்தைப் பொருத்த வரையில், சொத்துக்களை விட்டுச் சென்றவர் மரணிக்கும் போது எந்தச் சமயத்தை சார்ந்திருந்தார் என்று ஆராய்ந்து, அந்த அடிப்படையில் சொத்துகளை வாரிசுகளுக்குப் பங்கிட்டுத்தர வேண்டும்.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர், தன் உடன் பிறந்த சகோதரர்களையும், இறந்து போனதன் இந்து மனைவிக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெண்ணையும் மணந்தார். குழந்தையும் பிறந்தது. பின்னர், இறந்து விட்டார். அவருடைய சொத்துக்கள் இரண்டாவது மனைவியான முஸ்லிம் மனைவிக்கும், அவர் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஒரு முஸ்லிம் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயே பெண்ணை கிறிஸ்துவச் சட்டப்படி மணந்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் கணவனை, மனைவி கைவிட்டுச் சென்று விட்டாள். இந்தியா திரும்பிய முஸ்லிம், மனைவி தம்முடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என் ஆணையிடக் கோரி வழக்குத் தொடர்ந்தரார். அவர் விரும்பியபடி தீர்ப்பும் கிடைத்தது. இங்கிலாந்தில் உள்ள மனைவிக்கு அதைத் தெரிவிக்கவும் செய்தார். பதில் இல்லை. அதனால் இஸ்லாமியச் சட்டப்படி தன்னிச்சையாக விவாகரத்து செய்து விட்டதாக அவளுக்கு தெரிவித்தார்.

மீண்டும் இங்கிலாந்து சென்று வேறொரு ஆங்கிலேயப் பெண்ணை மணந்து திருமணச் சான்றிதழுக்கு மனுச் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார்கள். முதல் திருமணம் இங்கிலாந்து சட்டப்படி நடந்ததால், வழக்கு மன்றம் மூலம் விவாகரத்துப் பெறாமல், தன்னிச்சையாக திருமண முறிவு செய்தது செல்லாது. அதனால் திருமணச் சான்றிதழ் வழங்க மறுத்தது சரியானதே எனத் தீர்ப்பு வழங்கினர்.

இஸ்லாமிய திருமணச் சட்டம்

இந்து திருமணச் சட்டம் 1955லும், இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872-லும், சிறப்பு திருமணச் சட்டம் 1954லும், குழந்தை திருமணதடைச் சட்டம் 1929லும் நிறைவேற்றப்பட்டன.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாமுத பார்பான்மறை வழிகாட்டி, தீவலம் வந்து, ஏழடிகளை, இறைவன் சாட்சியாக நடத்தப்படும் திருமணங்கள் என்றே இந்து மதச் சம்பிரதாயங்கள் காட்டுகின்றன.

எனினும் 20ம் நூற்றாண்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் படுவேகமாக நடைபெற்ற போது மனு நீதி அறமானதோர் நாள் அதனை மாற்றும் நாளே 'தமிழர் திருநாள்' என்று கூறி இந்துமதச் சம்பிரதாயங்களையும், வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி துவக்கினார்.

இதன் விளைவாக மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றிக் கொள்ளுதல், வாழ்த்துரை வழங்குதல் எனப் பல்வேறு முறைகளைப் பின்பற்றி சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. இதையடுத்து 1967ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து திருமணச் சட்டத்துக்கு திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தம் 7-ஏ பிரிவாக இந்து திருமணச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமியத் திருமணங்கள் சீர்திருத்த திருமணங்களாகவே இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

விவாகரத்தும், விதவை மணமும்

'தலாக்' என்னும் விவாகரத்து என்பது காட்டு மிராண்டித் தனமானது; அநாகரிகத்தின் உச்சக் கட்டத்தை எட்டிவிட்டது; சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவை மனிதன் மீறக்கூடாது என்றெல்லாம் சொல்லி வந்த இந்து சமுதாயத்தினர், விவாகரத்தை அனுமதித்தாக வேண்டிய மாறிய சூழ்நிலையில் கல்வி வளர்ச்சியும், பெண்ணுரிமை போராட்டங்களும் விவாகரத்தின் அவசியத்தை வலியுறுத்தின.

வடநாட்டில் ராஜாராம் மோகன்ராய், பாலகங்காதர திலகர் ஆகியோரும், தென்னாட்டில் பெரியார் ஈ.வெ.ரா, அறிஞர் அண்ணா போன்றவர்களும் இஸ்லாத்தில் உள்ளது போலவே அவசியம் ஏற்படும் போது இந்துக்களுக்கும் திருமண ரத்துரிமை இருக்க வேண்டும் என வாதிட்டனர்.

இதே போல இந்து மதத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது. பண்டைய காலத்தில் கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் இந்துக்களிடம் இருந்தது. இறந்த கணவனை ஈமக்காட்டில் படுக்க வைத்து கட்டைகளை அடுக்கி, உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து, கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான இந்து மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.

'தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால்

பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.

வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்

மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!'

இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.

இஸ்லாமியத் திருமணங்கள்

இஸ்லாத்தில் துறவறம் இல்லை. மணம் செய்து கொள்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். திருக்குர்ஆனும் இதை வலியுறுத்துகின்றது.

'உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், உங்களுடைய ஆண் - பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவற்களாக இருந்தால், அல்லாஹ் தன் அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.' (24:32)இஸ்லாமியத் திருமணம்

'நிக்காஹ்' என அழைக்கப்படும். நிக்காஹ் நடக்கும் போது இருமுஸ்லிம் ஆண்கள், அல்லது ஒரு முஸ்லிம் ஆண், இரு முஸ்லிம் பெண்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் இசைவு தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் பர்தா முறை பின்பற்றப்படுவதால் மணமகள் மணமன்றத்திற்கு வந்து இசைவு தெரிவிப்பதில்லை. மணமகளின் தந்தையோ, நெருங்கிய உறவினரோ இரு சாட்சிகளுடன் மணமகள் இருக்கும் இடத்திற்குச் சென்று 'மணமகன் இவ்வளவு மஹர் தொகை கொடுத்து, உன்னை மணம் செய்து கொள்ள விரும்புகிறார், உனக்கு சம்மதமா?' என்று கேட்பார். மணமகள் தன்னுடைய ஒப்புதலை எழுத்து மூலமோ, வாய்மொழியாலோ, ஒப்புதலுக்கு அறிகுறியாக மெளனத்தைக் கொண்டோ, தலையை அசைத்தோ தெரிவிக்கலாம். இதே போல மணமகளிடமும் ஒப்புதல் பெறப்படும்.இஸ்லாமியத் திருமணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், மனைவிக்கு கணவன் வாக்குறுதி அளித்தபடி

'மஹர்' என்னும் விவாக கட்டணத்தைச் செலுத்துவதாகும். நிர்ணயிக்கப்படும் மஹர் தொகை, கணவன் மனைவிக்கு கொடுக்க

வேண்டிய கடனாகும். எனவே மனைவி இறந்த பிறகும், அவளது சொத்துக்கு வாரிசாக வருபவர்கள் அந்தத் தொகைக்கு உரிமை கொண்டாட முடியும். மஹர் விவாக கட்டணம் பணமாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வீடு, நிலம் அல்லது விலைமதிப்புள்ள ஒரு பொருள், அல்லது கடனிலிருந்து நிவாரணம் அளிக்கக் கூடிய எதுவாகவும் மஹர் இருக்கலாம்.

இதே போல மஹர் தொகைக்கு உச்ச வரம்பு இல்லை. திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது: 'நீங்கள் ஒரு மனைவியின் இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றிக் கொள்ள விரும்பினால், முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலையே அளித்திருந்தாலும், அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.'(4:20)

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" "கிளிக்" செய்யவும்.

www.nidur.info