Home செய்திகள் முக்கிய நிகழ்வுகள் பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியாவுடன் P.J. சந்திப்பு
பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியாவுடன் P.J. சந்திப்பு PDF Print E-mail
Wednesday, 07 July 2010 07:31
Share

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் மாநாட்டுக்கு முன், மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் சோனியா காந்தியும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

பிரதமருடன் சந்திப்பு

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.
இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.

பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.

தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் பீஜேயிடம் கூறினார்.

ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.

பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்.

மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது, ''தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது'' என்று பிரதமர் தெரிவித்தார். ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் ஆகியோரும் ஆங்கிலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ராவின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.

சோனியா காந்தியடன் சந்திப்பு

 அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தியை சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது. எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள்.

இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் M.P. தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.

சோனியா காந்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் 'அந்த மாமனிதர்' ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.

அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

- புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்

Thanks regards: அப்துஸ் ஸலாம்