Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா?
இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா? PDF Print E-mail
Tuesday, 03 September 2013 11:17
Share

இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா?

இஸ்லாமைப்பற்றிய பலரது எண்ணம் தவறாக உள்ளது. குர்ஆன் எந்த இடத்திலும் மனிதர்களை இன்பமாக இருக்க தடை சொல்லவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் மனிதர்கள் இன்பமாக இருக்க எந்த தடையையும் போடவில்லை. மாறாக இன்பங்களை அனுபவிக்க சொல்கிறது. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

முதலில் மனிதனை துறவறம் பூணுவதை இஸ்லாம் முற்றாக தவிர்க்க சொல்கிறது. மற்ற மார்க்கங்களில் துறவறம் பூண்ட மார்க்க அறிஞர்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து இன்று மக்களால் பாரக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவோம்..

ஒருமுறை ஒரு நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'நான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார். 'கன்னிப் பெண்ணா அல்லது விதவையா?' எனக் கேட்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அதற்கு அந்த நபித் தோழர் 'விதவை' என்கிறார். 'கன்னிப் பெண்ணை திருமணம் முடித்தால் அவளோடு அதிக சந்தோஷத்தோடு இருக்கலாமே?' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அதற்கு நபித் தோழர் 'வயதான எனது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள விதவைப் பெண்ணே ஏற்றவர் என்பதால் நான் விதவையை தேர்வு செய்துள்ளேன்' என்கிறார்.

இதிலிருந்து தனது மனைவியோடு இன்பமாக இருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புவதையே காட்டுகிறது.

மற்றொரு சந்தர்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது மனைவி ஆயிஷாவும் அபிசீனிய நாட்டு வீரர்களின் வீர விளையாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர். தனது மனைவி போதும் என்று சொல்லும் வரை அந்த விளையாட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பார்த்ததாக வரலாறு சொல்கிறது.

வேறொரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குள் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள். ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஜெயித்திருக்கிறார்கள். மற்றொரு முறை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெயித்துள்ளார்கள். இந்த சம்பவங்களெல்லாம் நாம் நமது வாழ்நாளில் அனுமதிக்கப்பட்ட துணைகளோடு சந்தோஷமாக இருக்கவே சொல்கின்றன.

மற்றொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டில் சிலர் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடலை பாடி ஆனந்தமாக இருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அபுபக்கர் அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்தில் இசைக் கச்சேரியா?' என்று கடிந்து கொள்கிறார்.

அதற்கு நபிகள் நாயகம் 'அவர்களை விட்டு விடும்' என்று பாடல் பாடியவர்களை கண்டிக்காது விட்டதை பார்க்கிறோம். அதே நேரம் 24 மணி நேரமும் இசையே கதி என்று அதில் தனது வாழ்நாளை வீணடிப்பவர்களை இஸ்லாம் கண்டிக்கிறது. எனவே எதற்கும் ஒரு அளவை நிர்ணயித்து நமது சுய சிந்தனையை மழுங்கடிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர் பார்க்கிறது.

எந்த நேரமும் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ இஸ்லாம் சொல்லவில்லை.

இதே போன்று சல்மான் ஃபார்ஸி என்ற நபி தோழருக்கும் அபு தர்தா (ரளியல்லாஹு அன்ஹு) என்ற நபி தோழருக்கும் ஏற்பட்ட பிரச்னையை நாம் அறிவோம். அதாவது எப்போதும் தொழுகை வணக்கம் என்று இருந்து தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து இறை வணக்கத்தில் ஈடு பட்டு பகலில் நோன்பும் வைக்கிறார் அபு தர்தா. இந்த பழக்கத்தை மாற்றி கடமையான தொழுகைகளை மட்டும் தொழச் செய்து பகல் காலத்தில் அவர் நோன்பையும் முறித்து விடுகிறார் சல்மான் பார்சி.

இந்த பிரச்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வசம் வருகிறது. விபரத்தைக் கேட்ட நபிகள் நாயகம் சல்மான் ஃபார்சி செய்ததுதான் சரி என்று தீர்ப்பு கூறுகிறார். 'கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை(தூங்குவது) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை(இல்லறத்தில் ஈடுபடுவது, அவரது சாப்பாட்டுக்காக உழைக்க செல்வது) போன்ற ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதற்கான கடமைகளை செவ்வனே செய்து விட வேண்டும்' என்று அபு தர்தாவுக்கு போதிக்கிறார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அதோடு அமைதியையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பார்க்கும் போது 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று தான் வாழ்த்தச் சொல்லி இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. ஒரு மனிதன் இன்பங்களை முறையாக அனுபவித்தால்தான் அவனால் நிம்மதியான வாழ்வையும் வாழ முடியும். கட்டுப்பாடற்ற இன்பங்கள் அந்த மனிதனை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுவதையும் தினமும் நாம் பத்திரிக்கையில் பார்க்கிறோம்.

எனவே மனம் அமைதியுற வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு இன்பங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மூலமாகத்தான் மனிதன் அமைதியான வாழ்வையும் பெற்றுக் கொள்கிறான். இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது ஒருவர் மற்றவருக்கு இன்ப துன்பத்தில் சம பங்கு வகித்து வாழ்வை அமைதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே! இந்த அறிவுரைகளை கூறுவதற்காகத்தான் உலகின் அனைத்து பிரதேசங்களுக்கும் அனைத்து மொழி பேசும் நபர்களுக்கும் வேதத்தையும் தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.

எனவே அந்த இறைவன் தந்த வேதத்தை பலமாக பற்றி பிடித்து இந்த பூமியில் இன்பங்களை அனுபவித்து அமைதியான வாழ்வு வாழ வாய்ப்புகளை தர அந்த இறைவனை இறைஞ்சுவோம்.

கீழ்க்காணும் திருக்குர்ஆனின் வசனங்களை சிந்தித்துப்பாருங்கள்...

'தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை' (குர்ஆன் 57:27)

இறைவன் விதியாக்காமல் ஏசு நாதரும் சொல்லாமல் கிறித்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் தாங்களாகவே துறவறத்தை வலிந்து ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அதைக் கூட பேண வேண்டிய முறையில் பேணவில்லை என கண்டிக்கிறது குர்ஆன். பாதிரிகளும், கன்னியாஸ்த்ரிகளும், சாமியார்களும் பண்ணும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் இறைவன் அனுமதிக்காத துறவறத்தை மேற்கொண்டதால் வந்தவை.

'இப்போது முதல் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபடுங்கள். இறைவன் உங்களுக்கு விதித்த சந்ததிகளைத் தேடுங்கள்' (குர்ஆன் 2:187)

ரமலான் மாதங்களிலும் இரவு நேரங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருந்து நம்முடைய சந்ததிகளை தேடிக் கொள்ளச் சொல்கிறான் இறைவன்.

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்' (குர்ஆன் 30:21)

மனித வாழ்வு அமைதியாக செல்ல வேண்டுமானால் இல்லற இன்பம் மிக அவசியமானதாகும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரியலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பையும் பாசத்தையும் இதனாலேயே இறைவன் உண்டாக்கியிருப்பதாக குர்ஆன் கூறுகிறது. எனவே அன்பு மனைவியோடு இல்லறத்தை இன்பமாக அனுபவித்து அழகிய குணமுடைய குழந்தைகளை பெற்று இறைவன் காட்டிய வழியில் பயணித்து உலக வாழ்வை இன்பமாக்குவோம். அதன் பலனாக மறுஉலக இன்ப வாழ்வையும் பெற்றுக் கொள்வோம்.

source: http://suvanappiriyan.blogspot.in/