Home செய்திகள் முக்கிய நிகழ்வுகள் பேச்சாற்றலால் சபையோரை கட்டிப்போட்ட டாக்டர் ஸாகிர் நாயக்
பேச்சாற்றலால் சபையோரை கட்டிப்போட்ட டாக்டர் ஸாகிர் நாயக் PDF Print E-mail
Sunday, 30 May 2010 21:17
Share

கொழும்பு : இலங்கை, கொழும்பிலுள்ள சுகததாஸ விளையாட்டரங்கம் (ஸ்டேடியம்) பொது மக்களால் நிரம்பி வழிகிறது என்றால் அங்கே கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.... அல்லது இசைக்கச்சேரி - அரசியல் கட்சியொன்றின் மாநாடு ஏதும் நடைபெறுகிறது என்றுதான் அர்த்தம்.

சிலவேளை பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள் ஏதேனும் நடைபெற்றால்கூட, ஸ்டேடியம் நிரம்பி வழியாது. அங்கும் இங்குமாக மாணவர்களும் - பெற்றோர்களும் இருப்பர். அவ்வளவுதான்!

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2010) மாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் முஸ்லிம்கள் சுகததாஸ ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்துள்ளனர். ஏன்? எதற்காக? என்றறிய மனம் அவாவுறுகின்றதா? இதோ விளக்கம் வருமாறு

இந்தியாவில் மிகவும் சிறப்பான ஆன்மிகக் குருக்களாக தெரிவு செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவர் சமகாலத்தில் ஏறத்தாழ சர்வதேச டி.வி 200 செனல்களில் இஸ்லாமிய பிரசாரம் புரிந்துவரும் இஸ்லாமிய மார்க்கறிஞர் 2006ல் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் கெம்பல் என்பவரோடு விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் - பைபிளும் எனும் தலைப்பில் இவர் நடத்திய பகிரங்க கலந்துரையாடலும், புனித வேத நூல்களின் ஒளியில் இந்து மதத்திலும் - இஸ்லாத்திலும் கடவுள் கொள்கை எனும் தலைப்பில் பிரபல இந்து மத குருவான  ரவிசங்கரோடு நடத்தப்பட்ட கலந்துரையாடலும் இரு மதத்தவர்களினதும் பெரு வரவேற்பைப் பெறும் வண்ணம் கருத்தாழத்தோடு கலந்துரையாடிய கண்ணித்திற்குரிய பெரும் பேச்சாளர் முதற் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்து பிரஸ்தாப நாளில் சுகததாஸ விளையாட்டரங்கிற்கு வந்து சமயங்களுக்கூடாக சமாதானம்எனும் மகுடத்தின் கீழ் மடை திறந்த வெள்ளமென சொல் மாரிப் பொழிந்து சொற்பெருக்காற்ற வருகின்றார் என்ற செய்தியே ஸ்டேடியம் நிரம்பிட முஸ்லிம்களை கூடச் செய்தது.

அந்த மார்க்க அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயக் ஆவார்.

இலங்கையில் - தலைநகர் கொழும்பில் இவரது முதற் பேச்சை - அதுவும் ஆங்கிலத்தில் கேட்டின்புற ஸ்டேடியம் நிரம்பிட வழியக் கூடிய முஸ்லிம்களின் அந்த வைபவம், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய சம்பவமாகும் எனத் துணிந்துரைக்கலாம். இவ்விடத்தில் என் நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன.

முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கூடும் கூட்டம் என்றாலே அது குழப்பத்தில்தான் முடியும் என்றதோர் அபிப்பிராயத்தை சுமார் 25 – 35 வருடங்களுக்கு முன்னம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி முன்றலில் இடம்பெற்ற அல் அக்ஸா கூட்டம் ஏற்படுத்தி விட்டது. 1986ல் தமிழகத்தின் பிரபல இஸ்லாமிய மார்க்கப் பிரசாரகர் பழனி பாவா என்பவர், இலங்கைக்கு முதல் முறையாக மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்திற்கு வந்தபோது சமாளிக்க முடியாத கூட்டம் அலைமோதியதில் பழனி பாவாவை பேசவே விடவில்லை. எதுவும் செய்ய முடியாத நிலையில் பேச்சாளர் பேசாமலே கூட்டம் ஏமாற்றத்தோடு கலைந்தது. இதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என சமாதானம் கூறினர்.

அதே வாரத்தில் இன்னொரு நாள் பழனி பாவா பேசும் கூட்டம் சுகததாஸ உள்ளரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்ததையும் இங்கு சொல்லியாகவே வேண்டும். இவ்வாறு சிறிய அமைப்புகளில் இடம்பெற்ற பல கூட்டங்கள் குழப்பத்தில் முடிந்த பல நிகழ்வுகள் மனசில் நிழலாடவே செய்கின்றன.

கசப்பான மேற்படி அனுபவங்களை எல்லாம் தூக்கி வீசும் விதமாக மிகமிக சிறப்பாக பென்னாம் பெரிய ஸ்டேடி யத்தில் இரவு 7.15 மணியளவில் ஆரம்பமான பிரஸ்தாப கூட்டம், நள்ளிரவு 11.10 மணியளவில் முடிவுற்றிருக்கிறது. என்பதை நினைக்கும்போது, ஒவ்வொரு இஸ்லாமிய இதயமும் பெருமையடையலாம். ‘ஜம்இய்யதுஷ் ஷபாப்என செல்லமாக அழைக்கப்படும் சைலான் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் என்ற அமைப்பே இந்த மாபெரும் வைபவத்தை வராத ஒரு பிரபலஸ்தரை வரவழைத்து நடத்தி சாதனை படைத்த பெருமைக்குரியது.

சென்ற வாரம் முழுக்க பேய்மழை பெய்து பெருவெள்ளம் கரைபுரண்டு கொழும்பு மாநகரை ஒரு புரட்டு புரட்டி எடுத்ததை இன்னும் மறந்திருக்க மாட்டோம். இந்த மழைக்காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மாபெரும் விழா நிச்சயம் அடைமழைக்கு மத்தியிலேயே நடக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பெரிய அதிசயமாக அன்றிரவு விழா முடியும் வரை சிறு தூரலோ சாரலோ இல்லவே இல்லை. விழா முடிந்து சாரி சாரியாக முஸ்லிம்கள் வெளியே வரும் வேளையில்தான் பன்னீர் தெளித்தாற்போல சிறு சிறு துளிகள் விழலாயின

இவ்விழாவின் இன்னொரு விசேட அம்சம் என்ன தெரியுமா? சமயங்களுக்கூடாக சமாதானம்எனப் பேச்சாளருக்குத் தலைப்பு தரப்பட்டிருந்தமையினால் அனைவருக்கும் சமாதானம்என சுவரொட்டியிலும் அழைப்பு விடப்பட்டிருந்மையால் முஸ்லிமல்லாத பிற சமய ஆர்வலர்களும் பெருவாரியாக வந்திருந்தமை சமாதானம் எல்லாருக்கும் தேவையானவொன்று என்ற அவசியத்தை உணர்த்தியது.

பிற சமய குருமார்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் என்று பல உயர்தர முக்கியஸ்தர்களும் வருகைதந்து விழாவை சிறப்பித்தனர்.

வட்ட வடிவமான ஸ்டேடியத்தில் கூட்டம் நடத்தினால் பேச்சாளர் ஒருபக்கமிருந்து பேச கேட்போர் தூரத்திலிருந்தால் எப்படி முகம் பார்கக் முடியும் விழா சோபிக்காமல் இடையில் எழுந்து போக ஆரம்பித்து விடுவரே என எண்ண இடமுண்டு அல்லவா இதற்கெல்லாம் துளிகூட இடம் வைக்காமல் எல்லாரும் பார்க்கும் வண்ணம் நவீன முறையில் இந்த பயான் நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் செய்திருந்ததை பாராட்டவே வேண்டும்.

முக்கியத்தவர்கள் அமர்த்திருந்த பால்கனி பெவிலியனை எதிர்நோக்கி மேடையை அமைத்திருந்தனர். ஆறு திரைகளை எல்லாப் பக்கங்களிலும் அமர்ந்திருப்போர் பார்க்கும்படி எழுப்பியிருந்தனர். ஒலிபெருக்கி வசதிகள், திருப்திகரமாக இருந்தது. இதன் மூலம் எல்லாப் பக்கத்து சபையோரும் மேடையை பேச்சாளரை பார்க்கும் விதத்திலும் பேசும் குரலை செவிமடுக்கும் விதத்திலும் விழா அமைந்திருந் தமை திருப்தியைத் தந்தது.

விழா சரியாக இரவு 7.15 மணிக்கு அழகான கிராத்துடன் ஆரம்பானது. மூன்று மொழிகளில் ஓதப்பட்ட மறை வரிகளுக்கு அர்த்தம் கூறப்பட்டது. கூட்டம் ஆரம்பமான சிறிது நேரத்தில் வெளியே மக்களின் ஆரவாரமும் கூச்சலும் இரந்தது ஆஹா... இந்தக் கூட்டத்தையும் குழப்பிடவிட ஒரு கும்பல் வெளியே முடுக்கிவிடப்பட்டு விட்டதோ என்ற கிலேசம் பலரிடையே ஏற்பட திரும்பித் திரும்பி பார்க்கலாயினர் சற்றைக்கெல்லாம் விசயம் தெளிவாகி விட்டது.

ஸ்டேடியத்தினுள்ளே கூட்டம் இருப்பிட வசதி நிரம்பி நிறைவுகண்டதால் பிரதான வாயற் கதவுகள் மூடப்பட்டுவிடவே மேலும் உள்ளே வர எத்தனித்த கூட்டத்தின் கூச்சலே அது என்பது புரியலாயிற்று. இறுதியில் வாயில்கள் திறக்கப்பட்டு நின்று கொண்டேனும் நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கவும் - பேச்சை காதாற கேட்கவும் அனைவருக்கும் வழி செய்து கொடுக்கப்பட்டது.

முதலில் பேச்சாளரின் மகன் தாரிக் நாயக் பேசினார். தகப்பனின் வழியில் சிறப்பாகப் பேசி இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சிறந்த ஆன்மீகப் பேச்சாளராக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஏற்படும் விதமாக அழகாகவும் - அர்த்தபுஷ்டியோடும் பேசினார். அடுத்து எல்லோரும் எதிர்பார்த்த உலகப் புகழ்பெற்ற சமய ஒப்பீட்டுப் பேச்சாளரான டாக்டர் ஸாகிர் நாயக் பேசினார்.

ஆஹா... அழகான பேச்சு. ஆற்றொழுக்கான ஆங்கில சொற்துளிகள் வந்து விழும் வண்ணம் கம்பீரத் தொனியில் அருமையாகப் பேசினார். மழைக்கால பூங்காற்று அவரின் சொற்களை கூடியிருந்த எல்லோருடைய செவி சபாக்களுக்கும் கொண்டு சேர்த்தது. திருக்குர்ஆனிலிருந்தும் பைபிளிலிருந்தும் இதர வேத நூல்களிலிருந்தும் மேற்கோள்களை அடுத்தடுத்து எடுத்துரைத்து பெரும் கரகோஷத்தையும் அல்லாஹ் அக்பர்என்ற வாழ்த்தொழியையும் பெற்றார் டாக்டர் ஸாகிர் நாயக்.

இன்னொரு விசேடம் கவனிக்கக் கூடியதாகயிருந்தது. பேச்சாளர்கள் இருவரினதும் குரல் ஓசைகள் ஒலிக்கத் துவங்கியதும் எந்தவித சலசலப்பும் கசமுசாவும் இன்றி முழு ஸ்டேடியமும் அமைதி காத்த ஒழுங்கு மெச்சும்படியிருந்தது. பெண்களுக்கு ஒரு பகுதி பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. எலோருக்கும் புரியும்படியான ஆங்கிலம் முழு ஸ்டேடியத்தையும் கட்டிப் போட்டது எனலாம்.

பேச்சின் முடிவில் சந்தேக வினாக்களுக்கு பதிலும் விளக்கமும் தரும் நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டிருந்தது. நேரத்தின் நீட்சியை உத்தேசித்து முஸ்லிமல்லாத வேறு சமய சகோதரர்களின் கேள்விகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது. சுமார் 6 - 7 பிற சமயத்தாரின் கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது டாக்டர் ஸாகிர் நாயக் அனாயாசமாகத் துணிவோடு - ஆதாரங்களை அடுக்கியவாறு பதில் கூறி, கேள்வி கேட்டவர்க ளைத் திருப்தியுறச் செய்தார். அவ்வாறு திருப்தியுற்றோரில் இருவர் அந்த இடத்திலேயே இஸ்லாத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ஓருண்மை வெளிச்சமாகிறது. இந்நாட்டின் சமாதானம் நிலவ வேண்டும் என்ற உணர்வில் இந்நாட்டு முஸ்லிம்கள் சமாதானத் தேடலுக்கான பயணத்தில் பங்காளிகளாக இருக்கின்றனர் என்பதற்கு, அன்று ஸ்டேடியத்தில் குழுமிய சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்கள் சாட்சிகளாகிவிட்டனர்.

ஆங்கிலத்தில் பேசப்பட்ட உரை கேட்கவே இவ்வளவு கூட்டமென்றால் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டிருந்தால் முழு முஸ்லிம் சமூகமும் வந்திருக்குமோ?

எஸ்.. நாகூர்கனி.