இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு Print
Monday, 05 December 2011 22:32

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு

   அமீருல் அன்சார் மக்கி    

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.

ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள பெற்றோரின் கண்காணிப்பு இன்றியமையாததாகும்.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் இளமைப் பருவம் மிகமுக்கியமானது. இந்தப்பருவத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது தூதரின் வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பது என்பது இஸ்லாத்;தில் மகத்தான நன்மையைப் பெற்றுத்தரும் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.

அர்ஷில் நிழல் பெறும் ஏழு கூட்டத்தினரில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வளர்ந்த இளைஞரும் ஒருவர் என நபியவர்கள் அடையாளப் படுத்துவது இந்தப் பருவத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.

இந்தப் பருவம் எல்லோராலும் மதிக்கப் பட்டு எல்லோரும் வாழ்கையின் யதார்தத்தைப் புரிந்து அடியெடுத்து வைக்கவேண்டிய காலப் பகுதியாகும். இதனால்தான் இஸ்லாம் இதற்க்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இளைஞர்கள் தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு ஷைத்தானிய சக்திகளால்; வழிகெடுக்கப் பட்டு இஸ்லாமிய வழி முறைகளை மீறி செயல்படுகின்றனர்.

இதிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்பது மிக முக்கியமானதாகும். பருவமடைந்த வயதிலிருந்து 19வயது வரை "ரீனேஜ்" பராயத்தினர் என அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் இளமைப்பருவம் பற்றிய விடயத்தை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் .

இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்)" (அல்குர்ஆன் 40:67)

இதில் குழந்தைப் பருவத்திற்க்கும் முதுமைப் பருவத்திற்க்கும் இடைப்பட்ட காலப் பகுதியை இளமைப்பருவமாக இஸ்லாம் கூறுகிறது. என்றாலும் இதில் திருமணத்திற்கு முந்திய காலப் பகுதி மிக முக்கியமான பகுதியாகும்.

இவ்வயது பராயத்தினர் எதிர் கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பெற்றோர்கள் இவற்றைப் பற்றி சிந்திக்காது வாழ்கையின் வேறு பல விடயங்களுக்கும் தமது முன்னேற்றத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திடீரென தமது பக்குவமற்ற வயதில் உள்ள பிள்ளைகள் ;விடுவிக்கப்பட முடியாத அல்லது இழப்பீடு செய்ய முடியாத சிக்கலில் சிக்கிய பின்னர்தான் திரும்பிப் பார்க்கின்றனர் என்ற விஷயம், தினசரி சந்திக்கும் சம்பவங்கள் அனுபவங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இதனால் இஸ்லாம் இந்த வயதினர் விடயத்தில் பாரிய பொறுப்பை பெற்றோரிடம் பொறுப்புச்சாட்டுகிறது. அவ்வாறான பொறுப்பை சுருக்கமாக பார்ப்போம்.

01 நல்லமுறையில் உபதேசம் செய்தல் :

பக்குவமற்ற இளம் வயதினர் நல்லது கெட்டது தொடர்பாக சீர்தூக்கி வேறுபடுத்தி தீர்மானங்கள் எடுக்க முடியாத வயதினர்.

இவர்களின் அனுபவமற்ற தன்மையும் அறியாமையும் இவர்கள் தவறுகளில் சிக்குவதற்;க்கும் காரணமாக இருக்கின்றன.

இதனால் இவர்களது நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் கண்காணிப்பாக இருப்பதுடன் அவர்களது மனநிலைகளைப் புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர்களுடன் நட்பாகவும் அதேநேரம் கட்டுக்கோப்பாகவும் வழிநடாத்த வேண்டும்.

இதனை ஸூரத்து லுக்மானில் லுக்மான் அலை அவர்கள் தனது மகனுக்கு செய்த உபதேசத்தின் மூலம் அல்லாஹ் அழகாக பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

"இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)". (அல்குர்ஆன் 31:13)

"(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும்,

அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்". (அல்குர்ஆன் 31:16)

''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே உறுதியான செயல்களில் உள்ளதாகும்" (அல்குர்ஆன் 31:17)

''(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்." (அல்குர்ஆன் 31:18)

''உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்." (அல்குர்ஆன் 31:19)

நாமும் எமது பிள்ளைகள் விடயத்தில் இது போன்ற நல்ல உபதேசங்களை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எடுத்துக் கூறுகிறான்.

02 எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்பு அவசியம் பெற்றோர்களாகிய நாம் எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஆனால் பெற்றோர்களில் பலர் பொருளாதாரம், தமதுமுன்னேற்றங்கள், மேலும் தமதுபதவி உயர்வு, உயர்கல்வி, அவற்றில் போட்டிகள், பொருள் தேடுதல், மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமூச்சாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கையிலேயே முற்றுமுழுதாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு வீடுகளில் தனிமையே துணையாகின்றது. இவர்களுக்கு தனிமை என்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை எவரும் உணர்வதில்லை. இதனால்தான் நபியவர்கள் கூறுகிறார்கள்.

"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் ஒரு குடும்பத் தலைவன் அந்தக் குடும்பத்தின் மீது பொறுப்புதாரியாவான் " (ஆதாரம புகாரி, முஸ்லிம்;)

எனவே குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவன் குறிப்பாக குடும்பம் பற்றிய கண்காணிப்பில் இருக்க வேண்டும் .அதனால்தான் அல்லாஹ் மேலும் ஒரு வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவியதற்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள் (அல்குர்ஆன் 66:6)

source: http://www.srilankamoors.com/files/_57.pdf