இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்! Print
Saturday, 06 May 2017 06:59

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைஞர்களிடம் காட்டிய அணுகுமுறையும், அவர்களிடம் பழகிய விதமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆற்றல் மிக்க இளைஞர்களை அண்ணலார் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றிக் காட்டினார்கள். அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் துடிக்கும் இள ரத்தத்தை சமூக நலன்களுக்கு பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒளிர்ந்து மின்னியவர்கள் பலர். அவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருந்தார்கள் என்பது இன்பமளிக்கிறது. அலீ இப்னு அபூதாலிப், ஜஅஃபர் இப்னு அபூதாலிப், உஸாமா பின் ஸைத், முஸ்அப் இப்னு உமைர், பர்ரா இப்னு ஆஜிப், ஸைத் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அம்ர் இப்னு அல் ஆஸ் போன்ற பிரபல நபித்தோழர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்.

திருக்குர்ஆனும் இளைஞர்களின் பங்களிப்பை சிலாகித்துச் சொல்கிறது. குகைத் தோழர்கள் சம்பவத்தில் அவர்களை இளைஞர்கள் என்று சொல்கிறது. அண்ணலார் தம் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவக்கிய ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இஸ்லாம் தழுவும்பொழுது வயது 37. அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாம் தழுவும்பொழுது அவர்களுக்கு வயது 33. இப்படி இளமைப் பருவத்தினரின் உதவியுடன்தான் இஸ்லாம் வளர்ந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதுமைப் பருவத்தை அடையும் முன் இளமைப் பருவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இளைஞர்களை திட்டமிட்ட முறையில் பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கின்றது. இன்று இளைஞர்களை திசை திருப்புவதற்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. நவீன தொடர்பு சாதனங்கள், மனோ இச்சை, அந்நியக் கலாசாரத் தாக்கம், மார்க்கத் தெளிவின்மை போன்ற சவால்கள்தாம் அவை.

வானொலி. தொலைக்காட்சி, அலைபேசி, இணையதளம் (வாட்ஸ்அப், முகநூல்) என நவீன தொடர்பு சாதனங்களின் பட்டியல் நீள்கிறது. இவை மூலம் காதல், கத்தரிக்காய் என்று இளைஞர்கள் தங்கள் நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் இரண்டு அருட்கொடைகளை அநீதம் செய்கின்றனர். ஒன்று – ஓய்வு நேரம், இரண்டு – ஆரோக்கியம்”.

இன்றைய நவீன தொடர்பு சாதனங்கள் இளைஞர்களின் பொன்னான ஓய்வு நேரங்களை பாழாக்கி, அவர்களை வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்கின்றன. இதனால் அவர்களின் உள்ளமும், உடலும் ஆரோக்கியமிழந்து கிடக்கின்றன.

“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களே அதில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த இளைஞர்கள்.

ஐந்து வருவதற்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறிய அண்ணலார், முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளப் பணித்தார்கள்.

மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாகத் திகழும் இளமையை வீணாக்கிவிடாது, மிகக் கவனமாகப் பயன்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பேரவா.

நன்றி தூது ஆன்லைன்