முக்காடும் முகத்திரையும்! Print
Thursday, 27 October 2016 07:58

முக்காடும் முகத்திரையும்!

MUST READ

“நான் மிகவும் காட்டுமிராண்டித் தனமாக இருந்ததாக நினைத்த என் தோழியின் கணவர், என் கையில் கனமான புத்தகம் ஒன்றைத் திணித்து, ‘இதைப் படி!’ என்றார்! அது ஒரு நல்ல துப்பறியும் நாவலாக இருக்கலாம் என்றெண்ணித் திறந்தேன். ஆனால், அது The Holy Qur’an என்றிருந்ததும், என் கைகள் நடுங்கின!” என்று தனது இளமைக் கால நிகழ்வை நினைவுகூர்கின்றார், ஐம்பத்தைந்து வயதுடைய அமத்துல்லாஹ்.

தனது இருபதாவது வயதில் நிகழ்ந்ததை நம் சிந்தைக்கு விருந்தாக்கும் இவர், ஷெரில் ரம்சே (Cheryl Rumsey) வாக ‘ஜமாய்க்கா’ என்ற மத்திய அமெரிக்கத் தீவில் பிறந்தவர்.

வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே என்ற காட்டுமிராண்டிக் கொள்கையில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த ஷெரில், இப்போது மேலை நாட்டு மோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூறுவது என்ன தெரியுமா?

“நீங்கள் ஒரு பனிப் புகைமூட்டத்திற்குள் இருக்கின்றீர்கள்! அது உங்களுக்கே தெரியாது! அது விலகிய பின், ‘அடே, இது எவ்வளவு தெளிவாயிருக்கிறது!’ என்று வியந்து கூறுவீர்கள்! இது, நான் கற்பனையாகக் கூறுவதென்று நினைக்காதீர்கள்! என் சொந்த வாழ்வின் பட்டறிவு!”

தனக்குத் தன் தோழியின் முஸ்லிம் கணவர் தந்த குர்ஆனைப் பெற்றுக்கொண்டு, அதனை ஒரு விதமான அலட்சியத்துடன் படிக்கத் தொடங்கினாள் ஷெரில். நிமிடங்கள் மணிகளாயின; மணிகள் நாட்களாயின! ஒரு பார்வை வாசிப்பு (Reading at a glance) என்ற நிலை மாறி, அல்-குர்ஆன் எனும் அற்புத வேதத்தின் ஈர்ப்பில் ஆழ்ந்து போனாள் ஷெரில். அத்தகைய ஆழ்ந்த சிந்தையில் ஐந்தாண்டுகள் கழிந்தது அவளுக்கே தெரியாது!

முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனில் மூழ்கிப் போவதற்கு முன்பே, அவள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள். “குர்ஆன் ஒரு தெய்வீக உண்மை” என்பதுவே அது!

பதினைந்தாம் நூற்றாண்டுவரை மேலை நாடுகளில் பேசப்படாத பெண்ணுரிமை, அரேபியாவில் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகளில் இவ்வற்புத வேதத்தின் மூலம் வழங்கப்பெற்றிருந்ததை எண்ணியெண்ணி வியந்தாள் ஷெரில். பிறகு என்ன?

நேர்வழியில் நடை பயிலத் தடையென்ன? தன் 25 ஆம் வயதில் இஸ்லாத்தைத் தழுவி, அமத்துல்லாஹ்வானார் இப்பெண்மணி.

“நான் கறுப்பு நிறத்தவள்தான். என் மனிதாபிமானத்தைப் பார்! என் பாசத்தைப் பார்! என் உள்ளத்திலிருந்து வரும் இறைப் பற்றைப் பார்! என் உடலைப் பார்க்காதே! நான் கூறும் வாழ்வு நெறியின் உண்மையைப் பார்! உனக்கு,

உன் மானமான வாழ்க்கைக்கு, உன் மறுவுலக வெற்றிக்கு இதில் தீர்வு உண்டா? இல்லையா? என்று பார்!” என்று அடுக்கடுக்காகப் பேசித் தன் தோழிகளை இஸ்லாத்தின்பால் ஈர்க்கும் இந்த ஐம்பத்தைந்து வயதையுடைய அற்புதப் பெண் தன் அன்றாடப் பணியினூடே, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று இஸ்லாமிய ‘தஅவா’வைத் தலையாய பணியாகக் கொண்டவர்.

முப்பதாண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மாறி, இப்போது ஒரு பிரச்சாரப் போராளியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருமதி அமத்துல்லாஹ் ரம்சே, ‘வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே’ என்ற சாதாரண மனித நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, ‘இந்தச் சில நாள் வாழ்க்கையில் துன்பம் நுகர்ந்தாலும் பரவாயில்லை; நிலையான மறுமை வாழ்வே எனது குறிக்கோள்’ என்று கருதிப் புனித வாழ்வு வாழ்கின்றார்!

“முஸ்லிம் பெண்கள் முழுவதுமாக உடலை மறைப்பது, ஆணாதிக்கத்தின் அடையாளமா? யார் சொன்னது?” என்று கேட்டுப் போராட்டக் களத்தில் இறங்க முனைகின்றார் அமத்துல்லா.

“முக்காடும் முகத்திரையும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய பெண்ணுடலை முழுமையாக மறைக்கும் உன்னதமான உடைகள். ஆணாதிக்க அடக்குமுறையின் அடையாளமல்ல அவை. இஸ்லாம் எங்களுக்கு வழங்கிய உரிமை இது. மேலை நாடுகளில் பெண்கள் தமது உடலழகைக் காட்டுவது, ஆண்களின் இச்சைப் பொருள்களாகி அழித்தொதுக்கப்படுவதற்குக் காரணமாயுள்ளது! ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? அவர்களின் ( யூத-கிருஸ்தவ ) மதங்கள், அவர்களை ஆண்களுக்குச் சமமாகப் பாவிப்பதாகக் கூறுவதுதான்!” என்கிறார் இந்த HIV தடுப்பு இயக்கத் தலைவி.

புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்டிருக்கு அமத்துல்லா கூறும் அறிவுரை இதுதான்: “நீங்கள் சிறுகச் சிறுக இஸ்லாமிய வாழ்க்கையைப் பழகிக்கொண்டு, இறைவனை நினைந்து, நற்செயல்களைச் செய்து வந்தால், ஒரு சில நாட்களில், ‘மற்றவர்களைவிட நான் நன்றாய்ச் செய்வேன்’ என்ற தன்னம்பிக்கையை உடையவர்களாக மாறிவிடுவீர்கள்.”

‘செயிண்ட் ஆல்பன்ஸ்’ நகரில் தற்போது வசிக்கும் திருமதி அமத்துல்லா ரம்சே, இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம் செய்து, முஸ்லிமான கணவர்களிடமிருந்து மும்முறை ‘தலாக்’ பெற்றவர்! முதல் கணவர், சூடானி; இரண்டாமவர், எகிப்தியர்; மூன்றாமவர், இத்தாலி-அமெரிக்கன். மூவருமே முஸ்லிம்கள்!

“விவாக விலக்கு, அல்லாஹ் கொடுத்த உரிமை” என்று கூறும் இவர், விவாக விலக்கு உரிமையைத் தாமே பயன்படுத்தியதாகக் கூறுகின்றார்!

“பெண்கள் கல்வி கற்றுப் பணியாற்றுவதை இஸ்லாம் தடை செய்யாதிருப்பினும் கூட, பெண்களின் தலையாய பொறுப்பு, குழந்தை வளர்ப்புதான்” என்று கூறும் இந்த அல்லாஹ்வின் பெண்ணடிமை ( அமத்துல்லாஹ் ) நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

அமெரிக்காவில் 2001 இல் நடந்த செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி திருமதி அமத்துல்லாஹ் கூறுவது யாது?

“அப்பாவிகளைக் கொல்வது, இஸ்லாமியக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும்! பொதுவான மானிட இனத்திற்கே நாசம் விளைப்பதாகும்!”

- அதிரை அஹ்மது

source: http://adirainirubar.blogspot.in/2016/10/14.html