அமெரிக்க கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம் Print
Thursday, 09 May 2013 13:23

அமெரிக்க கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம்

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப் பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என்பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து. இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான். டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். "அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன்.

இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை. குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன். இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்.... "இறைவா நீ இருந்தால்..." அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன்.

இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன். என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது. பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர். என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை. பிறகு ஒருநாள் குர்ஆனும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.

நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈசா அலைஹிஸ்ஸலாம் போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்? பைபிளில் ஏசுஅலைஹிஸ்ஸலாம் அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.
ஆக, குர்ஆனைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense).

நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது. இஸ்லாத்தை ஏற்று கொண்டேன். நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர். நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம். "தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குர்ஆன் 42:13 "...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குர்ஆன் 24:46. அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான்.
அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..." அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன. "நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார். நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும். என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர்

ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.

என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.

என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான். தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ். என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான். அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன்.

எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது. இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான்.

நான் இழந்ததை விட பெற்றவை அதிகம். என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள்
அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.

என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....." சுப்ஹானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம் நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது. டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட.

இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது. பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்... இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது.

யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு.

இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின்பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது.

பிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது.

யூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார்.

கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ் தனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது முழுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது.

நண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா?
எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம்.
நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா?
(பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்)
மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம்?

தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது. பைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament) ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன.

பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குடிகாரர், லூத் அலைஹிஸ்ஸலாம், தாவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

Old Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை.

எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது. 'இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்க்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது.

அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார். அது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார்.
எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார். மக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா? என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament -ல் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார். மீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட'லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார்.

பாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா? என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார்.

அறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார்.

அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண்டவில்லை.

பைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை? என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா? என்ற எச்சரிக்கையுடன் படித்தார். ஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை.

காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. தான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. "முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்." என்று அதிலிருந்தது.

அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ்.

இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான்?

இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ்.

ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார்.

நண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?

எவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது? நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான்.

நண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்?

எவன்ஸ் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம் என்றாலே அரபியர் தானே? (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்)

நண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

என்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ? என்று உள்ளுக்குள் பயமுற்றிருந்தார்.
இஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும்.


இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார். அப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும்.

ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே! பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது.

தொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன்றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஈஸா (அலை) அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது. குர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின.

யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்.

ஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா?