மகளிர் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு! Print
Tuesday, 11 February 2014 06:55

மகளிர் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு

secure women secure nation

சம உரிமை கோரியும், பாரபட்சத்திற்கு எதிராகவும் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியையும், அவர்களின் திட உறுதியையும் நினைவுக் கூறுவதே இத்தினத்தின் நோக்கமாகும். தேச எல்லைகளுக்கும், நிலப்பரப்புகளின் கலாச்சாரங்களுக்கும் அப்பால் மொழி, தேச, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஏராளமான வரலாற்று நிமிடங்களின் நினைவுகள் இத்தினத்தில் பின்னணியில் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சியில் காலூன்றிய பல நாடுகளும் குறைந்த சம்பளம் மற்றும் மோசமான தொழில் சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்களின் உயிர்த்தெழல் குறித்த செய்தியையும் அளிப்பதுதான் மகளிர் தினம்.

ஆனால், சமூகத்தில் பாதியான பெண்களை சக்திப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒரு நூற்றாண்டு முடிவடையும் வேளையில் அவர்களின் வேதனைகளின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கலவரங்களும், போர்களும் நடக்கும்பொழுது அதில் கூடுதல் பாதிப்பை சந்திப்பவர்கள் பெண்கள் ஆவர்.

குஜராத் மற்றும் சூரத்தில் முன்னரே நிச்சயித்த ஹிந்துத்துவா அரசியல் அஜண்டாவின் ஒரு பகுதியாக பெண்களுக்கு எதிரான கொடிய வன்முறைகள் அரங்கேறின. ஆனால், இன்று கஷ்மீர், மணிப்பூர் உள்ளிட்ட வட-கிழக்கு மாநிலங்களில் அரங்கேறுவது அரசு ஏற்பாடுச் செய்துக்கொடுத்த சட்டப்பாதுகாப்பின் (AFPSA-ஆயுதப் படை சிறப்பு அதிகாரச்சட்டம்) அதிகாரமாகும்.

வீடு, சமூகம், பொது இடங்கள், கல்வி நிலையங்கள்,வாகனங்களில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் மீதான வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கும் சமூக மோசமான சூழல்கள் மறுபுறம் நிலவுகிறது.

1961-ஆம் ஆண்டில் இருந்தே வரதட்சணை கொடுமைச் சட்டம் அமலில் இருந்தாலும், இந்த மாபாதக குற்றத்தை தடுக்க அரசால் முடியவில்லை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் கருக்கொலைகள் இன்று அதிகமாகியுள்ளது. திருமணச் சந்தையில் நடக்கும் பேரங்களும், திருமணத்தின் பெயரால் நடக்கும் வீண்விரயங்களும் சமூக சீரழிவுக்கு ஊக்கமளிக்கின்றன.

சந்தைக் கலாச்சாரத்தின் ஆதிக்கம் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. பெரும் நிறுவனங்கள் தயாரிக்கும் காஸ்மெடிக்(அழகு சாதனங்கள்) பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது. தவறான அழகு குறித்த சிந்தனைகளை உருவாக்கி ஏகபோக நிறுவனங்கள் நிற பாரபட்சத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. அழகின் அடையாளமே வெண்மைதான் என்று அவர்கள் நமக்கு போதிக்கின்றார்கள். அழகு சாதனப் பொருட்களின் மார்க்கெட்டிங் தந்திரமே இங்கே அடிக்கடி நடக்கும் அழகு போட்டிகளும், ஃபேஷன் ஷோக்களும் ஆகும்.

இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் தாம் கலாச்சாரத்தை தீர்மானிக்கின்றனர். இதில் விளம்பரங்கள் தாம் நமது வாழ்க்கைப் பாணியை தீர்மானிக்கின்றன. உலகமயமாக்கல் மூலம் மனிதநேய விழுமியங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஒழுக்கம் குறித்து பேசிவிட்டு பெண்களை வைத்து சதை வியாபாரம் நடத்துவோர் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஒழுக்கச் சீரழிவுகளுக்கும் ஏற்ற சூழல்களை உருவாக்கி விட்டு அவை நடக்கும்பொழுது எதிர்ப்பதன் மூலம் இரட்டை வேடம் போடுகின்றனர்.

அன்பும், நேசமும், ஆரோக்கியமான ஆண்-பெண் உறவுகளும் உருவாவது குடும்பங்களில் இருந்தாகும். குடும்பம் என்பது இயற்கையான ஒரு சட்ட பாதுகாப்பு ஆகும். மனித குலத்தின் விழுமியங்களும், நற்குணங்களும் இங்கிருந்துதான் உருவாகவேண்டும். ஆரோக்கியமான பால்ய கால அனுபவங்களை கொண்டவர்களால் தங்களின் திறமைகளை அழகாக வெளிப்படுத்த இயலும். ஆனால், தனிக்குடும்பம் என்ற முறை வளர்ந்து வரும் சூழலில் கூட்டுக் குடும்பத்தின் மகிமை இழக்கப்பட்டுவிட்டது. தனிநபரைச் சுற்றிய வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம்.

இன்று குழந்தைகளின் ஆளுமை தொலைக்காட்சி சானல்களில் இருந்து உருவாகிறது. அவை நமது சிந்தனை சக்தியையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டு சந்தை பண்பாடுகளை வளர்த்துவதற்கு போட்டிப் போடுகின்றன. குடும்ப அமைப்பு முறையை சீர்குலைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

பெண்ணின் உடலை விற்று காசை சம்பாதிக்க தயாராகும் நபர்களுக்கு உற்சாகமூட்டும் சமூக சூழல் நிலவுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பிரபலமான நபர்கள் பெண்களின் உடலை விற்கும் சதை வியாபாரத்தில் பங்கேற்பது பீதிவயப்படுத்துகிறது.மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆக்கிரமிப்பும், புதிய சுற்றுலா கொள்கைகளும் பெண் சதை வியாபாரத்திற்கு வெளிப்படையாகவே ஊக்கமளிக்கின்றன.

பிற துறைகளில் உருவான நவீன முறைகளைக் குறித்து அறிந்துள்ள நவீன சமூகம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியலோடு தொடர்புடைய புதிய தந்திரங்களை புரிந்துகொள்ள தவறிவிட்டது. இது ஒரு வேளை இன்று பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக இருக்கலாம்.தனது மேனி அழகை வெளியில் காட்டும் ஆடைகளை அணிந்து பிற ஆண்களை திருப்திப்படுத்த பாடுபடும் மத்தியவர்க்க வாழ்க்கையின் பிரதிநிதிகளான பெண்கள் தாம் மகளிர் பாதுகாப்பாளர்களாக நாடகமாடுகின்றனர்.

லட்சியமும், நேர்மையும் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி அவர்களை பேராசை முற்றிய ஜந்துக்களாக மாற்றியெடுக்கும் துயர சம்பவங்களைத்தான் நாம் கண்டு வருகிறோம். பாதுகாப்பான, ஒழுக்கம் மிகுந்த சூழலை உருவாக்க நாம் தவறினால் அது நமது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும்.

பெண்களுக்கு பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிச் செய்யும் சமூகமே வலுவானதாக, கட்டமைக்கப்பட்டதாக மாறும்.தன்னைக் குறித்த உணர்வுப்பெற்ற பெண்ணால் மட்டுமே தனது அடையாளத்தை நிலைநிறுத்தி வாழ முடியும். பெண் என்பவள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும் பலம் பெறவேண்டும். சமூக நீதிக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெறவேண்டும். இத்தகைய முயற்சிகளில் இருந்து பெண்களை திசை திருப்ப முயலும் சில மோசடி சக்திகள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

பெண்களுக்காக புதிய சட்டங்களோ, புதிய தண்டனைகளோ அல்ல தேவை. சமூக மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான பங்கேற்புதான் தேவை. பெண்கள் பாதுகாப்பு இல்லாத எந்த தேசமும் பாதுகாப்பானதாக மாற முடியாது.

-A.S.Zainaba (NWF- தேசிய துணைத் தலைவர்) "secure women secure nation"

தமிழில்: அ.செய்யது அலீ.

- thoothu online.com