விவாகரத்தும் குழந்தைகளும் Print
Sunday, 27 June 2010 09:05
 

விவாகரத்தும் குழந்தைகளும்

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும்.

இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம்.

உண்மையில் பெற்றோரைவிட, குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம்.

எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பாவோ துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு.

விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகிவிட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.

ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும், ''உன்னால்தான் இதை விட்டேன்" என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள்.

இப்போதெல்லாம் என் மகன் ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் நான் ஆராய்ச்சியை விட்டுவிட்டு மேலே படிக்க சென்றபோது யாராவது உனக்காகத்தானே என்று சொல்லி விட்டால் முகம் வாடிப் போவான். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் குழந்தைகள் காரணம் இல்லை.

அதேபோல சில சமயம் கணவன் மீது உள்ள கோபத்தை குழந்தைகளிடம் காட்டுவதும் தவறு. அவர்கள் செய்யாத குற்றத்திற்கு கோபம் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கிறது.

சமீபத்தில் விலகிவிட நினைத்து வெளியேறிய பெண்ணின் 4 வயது குழந்தையை பரீசீலித்த மன நல மருத்துவர் அவன் விவாகரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற தெரிவித்தார்.

சிலர் மறுமணம் செய்துகொள்ளும் போது புதிய துணைவனை வருத்திவிட கூடாது என்று இன்னும் அதிக கவனத்துடன் இருக்கும் போது குழந்தைகளிடம் அதிகம் பழகுவதோ நேரம் செலவழிப்பதோ இல்லை. விவாகரத்தால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதால், அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவும் அன்பும் தேவை.

வளர்ப்பு தந்தையோ தாயோ குழந்தைகளிடம் அன்பை பெற இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும். மாறாக எடுத்த உடனே குழந்தைகள் அனபு செலுத்த வில்லை என்றால் அதை கண்டிப்பது, வெறுப்பை வளர்த்துவிடும். குழந்தைகள் அம்மா அல்லது அப்பா தன் புதிய துணைவன்/வியிடம் செலுத்தும் அன்பை கண்டு, அவர்கள் மேல் தான் குற்றம் சொல்வது அவர்கள் உறவை பாதிக்குமா என்றும் சொல்வதை நம்புவார்களா என்ற பயமும், அதைவிட தன்னை துன்புறுத்துவார்களா என்ற அச்சமும் சொல்லவிடுவதில்லை.

இதை தவிர பாலியல் துன்பங்கள் ஏற்படும் போது தன் மீது குற்றம் என்ற எண்ணமும், புரியாத வயதில் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் நம்ப மறுப்பதும் காரணம்.

குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். சரியாக சாப்பிடாமல் இருந்தால், மதிப்பெண்கள் குறைந்தால், உடலில் காயங்கள் வருவது அதிகமானால் அவர்களுடன் பேசுவது மிக நல்லது. சொல்வதை கவனமாக கேட்காமல் உடனே அவர்கள் மீது கோபப்படாதீர்கள்.

நல்லதும் அல்லதையும் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்வது மிக அவசியம்.

குழந்தைகள், வளரும் வயதினருக்கு நட்பு அளவிலும் துன்பங்கள் நேரிடலாம். என் மகன் 6 வயதாக இருக்கும் போது பஷீர் என்ற நண்பன் இருந்தான். அவனை நாங்கள் வீட்டிற்கு இரவு தங்கி விளையாட அழைத்திருந்தபோது பஷீருக்கு விருப்பம் இல்லாத விளையாட்டுகளை விளையாட அழைத்தால் அவன் மறுப்பதும், அவன் சொல்கிற எல்லாவற்றையும் என் மகன் செய்வதையும் பார்த்தோம்.

எனக்கு சரியில்லை என்று தோன்றிய போதும் அவனாக பேசட்டும் என்று விட்டு விட்டோம். பஷீர் போனபின், என் மகன் அழ ஆரம்பித்து விட்டான். நான் எனக்கு பிடித்த எதையும் செய்ய முடியவில்லை என்று. நீ ஏன் விட்டு கொடுத்தாய் என்று கேட்டபோது இல்லை என்றால் பஷீர் தன் வீட்டிற்கு போய் விடுவேன் என்று சொன்னான் என்று பதில் வந்தது.

இது நடந்து மூன்று வாரங்களுக்கு பின், என் மகனின் வகுப்பாசிரியை என்னிடம்" Basheer has a control over your son, there is no equality in their friendship, would you like us to address it" என்றும் சொன்னார். அதன் பின் நானும் வகுப்பாசிரியை, பள்ளி கவுன்சிலர் மூவரும் அவனிடம் பொறுமையாக நான் விரும்பாதை செய்யாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன் என்று சொல்வதும் அதற்கு பயந்து உன் விருப்பங்களை மாற்றி கொள்வதும் தவறு என்று எடுத்து சொன்னோம். நண்பர்கள் அல்லது சகோதரர்கள் இடையே சம அளவு மரியாதையும் புரிந்துணர்வும் வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.

இதை சிறிய வயதில் கவனிக்காமல் விட்டிருந்தால், வளர்ந்த பின்னும் பிறருக்காக தன் விருப்பங்களை விட்டு கொடுப்பதும் உணர்ச்சி பயமுறுத்தல்களுக்கு அடிபணிவதும் பழகி இருக்கும்.

ஆகையால் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் சொல்வதை கேளுங்கள்.

விவாகரத்து கேட்கும்முன் பெற்றொர்கள் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டிய விஷயம், ''குழந்தைகளின் எதிர்காலம்''.

நன்றி: பத்மா அர்விந்த்

www.nidur.info