அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? Print
Tuesday, 07 October 2014 06:42

தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் அந்த பெண்ணுக்கு 28 வயது. திருமணமாகி, ஆறே மாதத்தில் கணவரை பிரிந்தவள். விவாகரத்தாகி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன.

‘விரைவாக அவளுக்கு மறுமணம் செய்துவைத்துவிடவேண்டும்’ என்று அவளுடைய பெற்றோர் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாலைந்து வரன்கள் அவளை வந்து பார்த்து, பேசி விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருமே கேட்கும் ஒரே கேள்வி, ‘இவ்வளவு அழகாக இருக்கீங்க! தன்மையாக பேசுறீங்க! கை நிறைய சம்பாதிக்கிறீங்க! இவ்வளவு இருந்தும் ஆறு மாதத்திலே உங்க மணவாழ்க்கை முறிந்துவிட்டதே, அதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கிறார்கள்.

அதற்கான உண்மையான காரணத்தை அவள் தன்னை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாள். ஆனால் ‘இதெல்லாம் ஒரு காரணமா? இதற்காகவா விவாகரத்து செய்திருப்பீர்கள். வேறு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்!’ என்று முணுமுணுத்தபடி மாப்பிள்ளை வீட்டார் விலகி சென்றுவிடுகிறார்கள்.

அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அவளை பெண் பார்க்க சென்ற நாளிலே, மாப்பிள்ளை பையனின் அம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை. அவள் அழகில் தூக்கலாக தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பாள். மாமியாரோ நாணத்தோடு, வெட்கத்தோடு, தன் மகனின் பின்னால் தலைகுனிந்து நிற்கும் மருமகள் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தவர்.

பெண் பார்த்த அன்றே, ‘உன்னை தூக்கி சாப்பிட்டுவிடுகிறவள் மாதிரி இருக்காளேடா..!’ என்று மகனின் மனதை அசைத்து பார்த்தார். அவனோ, ‘எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு! பேசி, நல்லபடியாக கல்யாணத்தை முடித்து வைத்துவிடுங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டான். அதனால் வேறுவழியின்றி கல்யாண ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கின. அப்போது மணமகன், தன் வருங்கால மனைவியான அவளிடம், ‘என் அம்மா உன்னை கர்வம் பிடித்தவள் என்று சொல்கிறார். திருமணத்திற்கு பிறகு நீ என் அம்மாவிடம் கவனமாக இருந்துகொள்ளவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவது நாள், மணப்பெண் வீட்டில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்கள். அதை மாமியார் உள்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.

மறுநாள், ‘உன் வீட்டில் போட்டது பிரியாணியா? அதை இப்ப நினைச்சாலே எனக்கு வாந்தி வருது! பிச்சைக்காரன்கூட அதை தின்னமாட்டான்’ என்று மாமியார் கூறியிருக்கிறார். இதுதான் மோதலின் தொடக்கம்.

அன்றிலிருந்து, மருமகளை மட்டம்தட்ட மாமியார் பிரியாணி மேட்டரை கையில் எடுக்க, மருமகள் பதிலுக்கு காரசாரமாக திட்ட நாளுக்கு நாள் பிரச்சினை வலுத்தது. மகன் அவ்வப்போது வேறுவழியில்லாமல் அம்மா பக்கம் சாய, அவள் கணவரையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்தாள்.

இப்படியே பிரச்சினை பெரிதானதால் அவள் கோபத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, ஒருசில மாதங்கள் தாய் வீட்டில் தங்கிவிட, ‘ஈகோ’ தலைதூக்கி இருவரும் மோதிக்கொண்டார்கள். முடிவில் ‘இனி சேர்ந்து வாழ முடியாது’ என்று விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

இந்த மாதிரியான ‘பிரியாணி மேட்டருக்கெல்லாம்’கூட விவாகரத்து நடக்கிறது என்பதை காலத்தின் கோலம் என்று காலத்தை குறை சொல்லி தப்ப முடியாது. ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் சமயோஜித அறிவும் வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை வரண்ட பாலைவனம்தான்.