இஸ்லாமியச் சட்டம் (12) Print
Monday, 06 July 2009 06:34

இஸ்லாமியச் சட்டம் (12)

  நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி 

தற்கொலை ஒரு இஸ்லாமியப் பார்வை!

நான் சட்டக் கல்லூரியில் படிக்கிறபோது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் ''இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் எந்தக் குற்றத்தை நிறைவேற்றினால் தண்டனை கிடையாது? ஆனால் அந்தக் குற்றத்தை நிறைவேற்ற முயற்சியால் தண்டனை உண்டு'' என்ற புதிர் வினா எழுப்பி விடை கேட்க முயற்சிப்பார்கள். ஒரு சிலர் தான் உடடினயாக அதற்கு பதில் தருவார்கள். மற்றவர்கள் யோசித்து தெரிவிப்பார்கள். அதாவது இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில்''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்''என்று கூறப்பட்டுள்ளது.

மனிதனால் இயற்றப்பட்ட இச்சட்டம் அனைத்து தரப்பு மனிதர்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ளாமல் இயற்றப்பட்டதால் இதை நடைமுறைப்படுத்த முடியாமல் எந்த அளவு நகைப்புக்குரிய சட்டமாக ஆகியுள்ளதைப் பார்ப்போம்.

1981ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ராதாராணி என்ற வழக்கில் குற்றவாளியான ராதாராணி என்ற பெண் கணவனால் கைவிடப்பட்டு யாரும் ஆதரிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். 309வது பிரிவின்படி அவளுக்கு 3 மாத தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் அவளை எச்சரித்து விடுதலை செய்து விட்டது.

27.04.1994ல் உச்சநீதிமன்றம் தனது வரலாற்று புகழ்மிக்க தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டத்தில் 309வது பிரிவு இந்திய அரசியல் சாசனத்தில் 21-வது பிரிவுக்கு முரணாக இருப்பதாகச் சொல்லி 309வது பிரிவையே தள்ளுபடி செய்துவிட்டது.

1980ம் ஆண்டில் மினு மஸானி என்ற புகழ்மிக்க எழுத்தாளர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவு மனித உரிமை மீறலாக இருப்பதாகவும் இறப்பதற்கான உரிமையை மனிதன் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும. என்றும் ஓர் இயக்கமே நடத்தினார்.

1985 டிசம்பர் மாதம் டில்லி உயர்நீதிமன்றம் இந்த 309 வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு கரும்புள்ளளி எனத் தெரிவித்து இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கட்டளையிட்டது.

மும்பை உயர்நீதிமன்றம் 1986ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் இந்தச் சட்டப்பிரிவு காட்டுமிராண்டித் தனமானது என்று தன் தீர்ப்பில் அறிவித்தது.

உச்சநீதிமன்றம் தற்கொலை தொடர்பான 309வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்தாலும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டது.

இப்படி சட்டங்களை இயற்றி வைத்திருந்த போதிலும், இந்தியாவில் விபத்துக்களும், கொலைகளும் அதிகமாகி வருவது போலவே தற்கொலைகளும் அதிகமாகி கொண்டேதான் வருகின்றன. காதல் தோல்வி, கல்வி நிலைய தேர்வுகளில் தோல்வி, பெற்றோர்களுடன் தகராறு, வறுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்பத்தகராறு இப்படியாக பல காரணங்களினால் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் தலைவர்கள் இறந்து போனாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர்களுடைய அபிமானிகளில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் கொடூர நிகழ்ச்சிகளையும் இந்நாட்டில் நாம் காண்கிறோம்.

தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகிவிட்டதே என்பதற்கான முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவிலேயே தற்கொலை அதிகமாக நடக்கும் நகரங்கள் பற்றி 1984ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலிடம் பெங்களூர் இரண்டாவது இடம் சென்னை மூன்றாவது ஹைதராபாத் மிக குறைந்த அளவு தற்கொலை நடக்குமிடம் கொல்கத்தா.

பஞ்சாபில் 21 மணி நேரத்திற்கு ஒரு வாலிபர் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் என்று சென்ற வருட (1999ம் ஆண்டு) புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

குஜராத் மாநிலத்தின் கடந்த''ஒன்பது மாதங்களில் மட்டுமே 754 இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்''என்ற புள்ளிவிபரத்தை மாநில உள்துறை அமைச்சர் பிரபோராவல் சட்டமன்றத்தில் 01.04.1983ல் கூறி, அதற்கான காரணங்கள் காதலில் தோல்வி, குடும்பத் தகராறு, மனநிம்மதி இல்லாமை, பரீட்சையில் தோல்வி, வறுமை ஆகியவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். (மணி விளக்கு, ஆகஸ்ட் 87 பக்கம்6)

இந்து சமூகத்தில் வட இந்தியாவில் கணவன் இறந்தபின் மனைவி உடன்கட்டை ஏறும் செயல் கொடுமையானது என்று 'ராஜராம் மோகன்ராய்' போன்ற சீர்திருத்தவாதிகள் புரட்சிகொடி எழுப்பினார்கள்.

உலகத்தில் உள்ள எந்த மதக்கோட்பாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. இறந்து போன கணவன் சடலத்துடன் உயிரும் உணர்வும் உள்ள விதவையாக அவன் மனைவி எரிந்து சாம்லாக வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்குத் தூண்டுவது போன்ற ஒரு குற்றச் செயலாகி விடுமல்லவா! இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலை. இனி வளர்ந்த நாடுகள் மற்றும் செல்வச்செழிப்பில் மிதக்கும் நாடுகள் பற்றி பார்ப்போம்.

சிங்கப்பூரில் பொருளாதார பிரச்சினை அதிகமில்லை. தனி நபர் வருமானமும் ஓங்கி நிற்கிறது. புறத்தூய்மையை பாதுகாக்கும் சிறப்பான நாடாகக்கருதப்படுகிறது. ஆனால் அங்கு 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது 20 ஆண்டுகளில் நான்கு மடங்காக உயர்ந்து விட்டது.

15 முதல் 19 வயது வரையிலான இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு 10 முதல் 19 பேரை சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அங்கு தற்கொலை முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

முதலாளித்துவ நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைப் பார்ப்போம். அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் லேரி செய்டன் என்பவர் தற்கொலைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.

சான்பிரான்ஸ்கோவில் கோல்டன் கேட் பிரிட்ஜ் என்ற ஒரு பாலமும், பே பிரிட்ஜ் என்ற ஒரு பாலமும் உள்ளன.

1930ல் கட்டப்பட்ட இந்தப் பாலங்களின் நீளம் 200 அடி இரண்டு பாலங்களிலிருந்தும் பலர் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். பே பிரிட்ஜ் பாலத்தைவிட கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஐந்து மடங்கு அதிகம். கோல்டன் என்பதால் மதிப்பு அதிகம். இறப்பிலும் மதிப்பு வேண்டும் என நினைக்கிறார்கள்.

தீமையாக இருக்கிறது ஒத்துவராததாய் இருக்கிறது என்று ஏதாவது ஒன்றை தவிர்ப்பதற்காக தற்கொலை செய்து கொண்டு இறப்பது துணிவுள்ள மனிதனின் செயலல்ல. வாழ்க்கையின் சோதனைகளைத் தாண்டும் மனமில்லாத கோழைதான் கெளரவமான மரணத்தைச் சந்திக்காது தற்கொலை செய்து கொள்வான் என்று அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார்.

அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் பழக்கம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு ஜெர்மனியில் இருந்தது. அந்த கோழைத்தனத்தை நிறுத்த ஜெர்மனி அரசு ஓர் நடவடிக்கை எடுத்தது. தற்கொலை செய்வோர் சடலத்தை முழு நிர்வாணமாக வீதி வீதியாக எடுத்துச் சென்று நிர்வாணமாகவே புதைப்பது என்று அரசுசட்டம் செய்தது. அதன் பிறகு தற்கொலை செய்வது குறைந்தது.

வடக்கு பிரான்ஸில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் 38 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தம் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு இன்றைய முதலாளித்துவ பொருளாதார, சமூக அமைப்புகள்தான் காரணமே தவிர சமயங்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

ஆக ஏழை நாடுகள் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் அனைத்தும் பல சட்டங்களை இயற்றி பல அமைப்புகளை ஏற்படுத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட்ட போதிலும் தற்கொலையின் சவாலை இவைகள் எதிர்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

இது போன்று ஆயிரம் சட்டங்களை இயற்றினாலும் தற்கொலை நடப்பதை தடுக்க முடியாது என்பதை சவாலாகக் கூறலாம். காரணம் தற்கொலை என்பது வேறு நபருடைய தூண்டுதலினால் நடைபெறுவதல்ல. தானாக இந்த முடிவுக்கு வருகிறான். அப்படியயனில் தற்கொலை செய்வது பெரும்பாவம். அதன் விளைவு கடுமையானது தற்கொலை செய்வதனால் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற உந்துதல் ஒவ்வொருவருக்கும் தானாகவே ஏற்படும் விதத்தில் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தையும் பக்குவபடுத்தினால் மட்டுமே தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை சிந்திக்க தவறி விடக்கூடாது.

உலகின் பல நாடுகளில் தற்கொலை முயற்சி செய்தவருக்கு தண்டனை கொடுப்பதை விட அவருடைய மனோ நிலையை பரிவுடன் கவனித்து அதற்கான சிகிச்சையைத் தருவதே சரியான வழி என்று கருதுகிறார்கள். இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இதற்குரிய சிகிச்சையை இஸ்லாம் கூறி இருப்பதை கண்டு கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது.

தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்

இஸ்லாம் கூறும் இறை நம்பிக்கை இல்லாமையும், பரந்த நோக்கும், உறுதியும், துணிவும் நிலைகுலையாமையும் இல்லாமல், துன்பத்தை எதிர்த்து போராடுகின்ற மனோபக்குவம் இல்லாத கோழையாக இருப்பதனாலேயே இறப்பில்தான் நிம்மதி என்ற முடிவுக்கு வந்த மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்.

முஸ்லிம்களிடையே வியத்தகு வண்ணம் மிகக் குறைந்த அளவிலேயே தற்கொலைகள் நிகழ்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

பல பிறவிகள் உண்டு என்பதையும், முப்பிறவிகளில் விட்டுப்போனதை இன்னொரு பிறவியில் நிறைவேற்றி விடலாம் என்பதையும் இறையச்சமுடைய ஒரு முஸ்லிம் முழுமையாக நிராகரிக்கிறான். இந்த உலகத்தில் வாழ்க்கை ஒன்றுதான். அதை இழந்து விட்டால் நன்மை தீமைகளுக்கேற்ப மறுமையில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை தற்கொலை செய்வது பாவச் செயலாகக் கருதச் செய்கிறது.

சமதாயக் கவிஞர் மர்ஹூம் தா. காசிமின் ஒரு கவிதை''தற்கொலை மட்டும் இஸ்லாத்தில் தடுக்கப்படாதிருந்தால் இங்குள்ள கிணறுகளெல்லாம் ஏழைக் குமருகளாலே தூர்ந்து போயிருக்கும்''என்று பாடினார். வரதட்சணையின் கொடூர முகத்தை கூறுவது நோக்கமாக இருந்தாலும் இவ்வளவு சோதனையிலும் இஸ்லாத்தின் வழி காட்டுதலினால் தான் தற்கொலை செய்யாது அதை எதிர்கொண்டுள்ளனர் என்பதை இதில் விளங்க மறந்து விடக்கூடாது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ''இந்தியாவிலும், பல பகுதிகளிலும் தற்கொலைகள் மிகுந்து வருகின்றன. ஆனால் எந்த சமுதாயத்தில் தற்கொலை செய்வது பாவம், மீறினால் சுவர்க்கம் கிடைக்காது. நரகத்திற்குப் போக வேண்டும் என்று மத போதனை செய்யப்படுகிறதோ அந்த சமுதாய மக்கள் மத்தியில் இந்தத் தற்கொலை கொடுமை இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மிக உண்மையான சுயவிமர்சனமாக தற்கொலை நிகழாதிருக்க வேண்டுமானால் ''இறைவன் தம் தேவைகளை நிச்சயமாக முடித்துக் கொடுப்பான்'' என்ற நம்பிக்கை நம் இதயத்தில் எப்போதும் இருக்க வேண்டும் ''தவக்கல்'' என்று சொல்லப்படுகிற இந்த உயரிய பண்பு உள்ளத்தில் பதிந்து விட்டால் வேதனைகள், சோதனைகள் ஆகியவைகளை பொறுமையுடன் ஏற்று சாதனைகள் நிகழ்த்தலாம். எது நன்மை, எது தீமை என்று அறியும் மார்க்க அறிவை செயலாலும் வெளிப்படுத்தி நாம் இறையச்சத்துடன் நபிவழியில் வாழ நாயன் நல்லருள் புரிவானாக!

இயற்கை படைப்புகளை பற்றியும், அதன் இயக்கத்தைப் பற்றியும் பின்னிப் பிணைந்த அதன் செயல்பாடுகளின் பின்பலத்தில் காணப்படும் பெளதீக விதிகளை பற்றியும் கண்டாய்ந்திடும்படி நம்மைத் தூண்டும் வசனங்கள் திருக்குர் ஆனில் மொத்தம் 750 உள்ளன. அவற்றில் அறிவாராய்ச்சியின் கதவுகளைத் திறந்துவிடும் மிக முக்கியமானவசனம் இதோ!

அவன் வசனங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பிரயோஜனமானவற்றை (ஏற்றி)க் கொண்டு சமுத்திரத்தில் செல்லுங் கப்பலிலும்; வானத்திலிருந்து மழையை இறக்கி, அதைக் கொண்டு (வறண்டு) இறந்த பூமியை, அல்லாஹ் உயிர்பி (த்துச் செழிப்பாக்கி வை) ப்பதிலும், கால்நடைகள் யாவற்றையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றைப் பல கோணங்களில் திருப்பித்) திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப் பெற்றிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பிரயோஜனங்களை ஆராய்ந்து) சிந்திக்கும் ஜனங்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் அறிவிக்கக் கூடிய) அநேக அத்தாட்சிகள், (நிச்சயமாக) இருக்கின்றன. (அல்குர்ஆன்: 2:164)

எனவே, எப்பொழுது முஸ்லிம்கள் திருக்குர் ஆன் கூறும் சிந்தனையின் அறிவாராய்ச்சியிலும் ஈடுபட்டு, மக்களுக்கு வழிகாட்ட முன்வருகின்றனரோ, இன்னும் அந்தத் திருமறையின் வாழ்வியல் நெறிகளுக்கிணங்க தங்களது வாழ்வினை அமைத்துக் கொள்கின்றனரோ, அப்பொழுது தான் தாம் இழந்துவிட்ட கீர்த்தியை மீண்டும் பெறுவதோடு இந்த உலகிற்கு வழிகாட்டும் தலைமைப் பொறுப்பினைப் பெற்ற உன்னத சமுதாயகத் திகழ முடியும். சம்மந்தப்பட்டவர்கள் இசை வெளியேற்பார்களா?

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" "கிளிக்" செய்யவும்.

www.nidur.info