ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் Print
Sunday, 07 August 2016 14:23

ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்

அன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.

மாமனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார். (அறிவிப்பவர்: அஸ்வத், நூல்: புகாரி 676, 5363, 6039)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது விட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த ஆடையைத் தைப்பார்கள், பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது விட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார். (அறிவிப்பவர் உர்வா நூல் முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பது இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்து தெரிகிறது.

மனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், விட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர்.

ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர். அபீஸினிய வீரர்கள் விர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்   பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: புகாரி 5190)

என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: புகாரி 6130)

ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஒட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது அதற்கு இது சரியாகி விட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத் 2214)

சத்திய பாதை இஸ்லாம்

source: http://islam-bdmhaja.blogspot.com/2016/08/best-article.html