ஓடிப்போய் திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்! Print
Saturday, 20 December 2014 07:41

ஓடிப்போய் திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்!

பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. தனது மகனோ, மகளோ தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது, தமது கவுரவத்திற்குரிய வாய்ப்பு அதன் மூலம் பறிபோகிறது என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

ஓடிப் போகும் ஜோடிகள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களையே சமாளிக்கத் தெரியாமல் தப்பி ஓடும் இவர்கள், எதிர்காலத்தில் இந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்வார்கள்! எதிர்காலத்தில் இவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஓடி ஒளியத்தானே விரும்புவார்கள்.

பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லும் வெற்றிகரமான தம்பதிகளாக இவர்களால் மாற முடியாதே! பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பதை பெற்றோர்கள் கடமையாக மட்டுமல்ல உரிமையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.

நேற்று வந்த காதல் அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடுவதாக கருதுகிறார்கள். திருமணக் கனவு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களுக்கும் உண்டு. அதை பற்றிய கவுரவ கனவு பல வருடங்களாக அவர்களிடம் இருந்து கொண்டிருக்கும்.

தங்கள் மகன் அல்லது மகள் ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ளும்போது பல வருட கனவும், கவுரவமும் கலைந்துபோய்விட்டதாக கருதுகிறார்கள். திருமணத்தில் பெற்றோருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் கனவு இருக்கிறது.

அதனால்தான் தன்னுடன் இருக்கும் உறவுகளையும் கவுரவப்படுத்தும் விதத்தில் இந்தியத் திருமணங்களை அமைத்திருக்கிறார்கள். திருமணத்தின்போது நடக்கும் சம்பிரதாயங்கள், வழிமுறைகள் அனைத்தும் உறவினர்களையும் மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த பாரம்பரியத்தை உதறிவிட்டு ஓடுவது நல்ல தொடக்கம் அல்ல! இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்ன வென்றால், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் பலர் குறிப்பிட்ட காலமே தாக்குப்பிடிக்கிறார்கள்.

பின்பு திரும்பவும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்கள். தங்களை மன்னித்து திரும்ப ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திரும்புகிறார்கள். என்ன செய்தாலும் பெற்றோர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற வறட்டு தைரியம், சிலரை ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள தூண்டுகிறது. காதலித்து திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை.

ஆனால் அந்த திருமணம் சமூக அந்தஸ்தை பாதுகாக்க கூடியதாக இருக்கவேண்டும். முரட்டு தைரியத்துடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.