கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி! Print
Saturday, 05 December 2009 15:02

கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி!

அனஸ் இப்னு மாலிக்ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு தருவது வழக்கம்.

உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா, உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள்.

உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா, 'இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்... ஏறிச் செல்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா, 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள்.

அப்போது உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா, 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..' என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்ரளியல்லாஹு அன்ஹா, 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள். (நூல்: புகாரி) 

வீரப்பெண்மணி உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், மற்றொரு வீரப் பெண்மணியான உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஊழியரான அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னையும் ஆவார். மதீனாவில் உள்ள தனது தோழர்களின் வீடுகளில் நபியவர்கள் அதிகமதிகம் செல்லக்கூடிய வீடு இந்த இரு சகோதரிகளின் வீடுகள்தான்.

அந்த வகையில் உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் நபியவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருமுறை தனது உம்மத்தினரில் கடல் மார்க்கமாக ஒரு சாரார் அறப்போருக்காக செல்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் சொன்ன மாத்திரமே உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறியதோடு, நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்ததன் விளைவாக, உம்மு ஹராம்ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த போர் முடிந்து திரும்பும்போது கீழே விழுந்து ஷஹீத் எனும் பேற்றை அடைகிறார்கள் என்றால் நாம் அவர்களின் வீரத்தையும், இறையச்சத்தஹியும், சொர்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட நேசத்தையும் என்னும்போது மெய்சிலிர்த்து போகிறோம்.

இன்றைய பெண்களை எடுத்து பார்த்தோமானால், நாம் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கோ, அல்லது ஒரு இன்ப சுற்றுலாவுக்கோ செல்கிறோம் என்றால்

'ஏங்க! நானும் ஒங்க கூட வருகிறேன்' என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு போர்களத்திற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் வராததோடு நம்மையும் போகவிடாமல் தடுப்பார்கள். போகாதே போகாதே என்கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற ரீதியில் செண்டிமெண்டை காட்டி தடுக்க முயற்சிப்பார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. (விதி விலக்காக சிலர் இருக்கலாம்) ஆனால் சஹாபிப் பெண்களுக்கோ தமது உயிரோ, செல்வங்களோ, இந்த உலகின் கவர்ச்சியோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக, சுவனத்தை அடைவது ஒன்றே அவர்களின் ஒரே இலக்காக இருந்துள்ளது எனபதற்கு உம்மு ஹராம்ரளியல்லாஹு அன்ஹா என்ற உயிர்த் தியாகி மிக சிறந்த உதாரணமாக வரலாற்றில் மிளிர்கிறார்.

குறிப்பு: மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. புஹாரி மட்டுமன்றி முஸ்லிமிலும் உள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸை நவீன ஹதீஸ்கலை(?) அறிஞர்கள் மறுக்கிறார்கள். காரணம் உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா என்ற அந்நியப் பெண் வீட்டிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி போயிருக்க முடியும்.? ஒரு அந்நிய பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நபியவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.? உம்மு ஹராம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கனவர் வீட்டில் இல்லாதபோது நபியவர்கள் எப்படி சென்றிருப்பார்கள்..? எனவே இது நபியவர்களின் போதனைக்கும், அவர்களின் மகத்தான குணத்திற்கும் எதிராக உள்ள்ளது என்று கூறி, இந்த ஹதீஸை குப்பை கூடைக்கு அனுப்பி விட்டார்கள்.

ஒரு அந்நியப் பெண்ணின் வீட்டிற்கு செல்லக் கூடாது என்பது இவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் பாவம் நபியவர்களுக்கு தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை விட நமது சிந்தனைதான் முக்கியம் என்றால், குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்கவில்லையானால், தயம்மும் செய்யலாம் என்று மார்க்கம் சொல்கிறது. ஏற்கனவே ஸ்கலிதம் எர்ப்பட்டதால்தான் தான் குளிப்பு கடமையாகி உள்ளது. அந்த அசுத்ததோடு, தயம்மும் என்ற பெயரில் முகத்திலும் கைகளிலும் மண்ணை தடவி கூட கொஞ்சம் அசுத்தமாவது அறிவுக்கு பொருந்துகிறதா..? எனவே இது தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் குப்பை கூடைக்கு அனுப்புவோமா..? (அல்லாஹ் மன்னிப்பானாக) இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரள செய்துவிடாதே!

- ''ஸஹாபாக்களின் வாழ்வினிலே... ''