நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (3) Print
Wednesday, 02 December 2009 07:00

3. பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கு கடிதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன்
. உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ''நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.''

இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு 'அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி' என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் ''எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?'' என்று கூறினான்.

இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிந்த போது ''அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்'' என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் ''ஹிஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டான்.

இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ''இக்கடிதம் கிடைத்தவுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தான்.

வந்த இருவரில் ஒருவன் பெயர் சுஹ்ர்மானா பானவய்ஹி. இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.

இவ்விருவரும் மதீனா வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவரில் ஒருவன் நபியவர்களிடம் ''அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்'' என்று கூறியதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.

இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசரின் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வைஹி தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)

மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் ''நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?'' என்று கூறினர்.

அதற்கு நபியவர்கள் ''ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.'' என்றும் ''எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்'' என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.

அந்த இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வைஹியின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: ''நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே'' என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)

நூல்: ரஹீக்