
குர்ஆன் எனும் கடலோரம்...!
குர்ஆன்- ஒரு மகா சமுத்திரம் நாம் அதன் கரையிலேயே உலா வருகிறோம் - ஆம் ஓதுதல் எனும் கரையில் காலையிலோ மாலையிலோ 'பரக்கத்' எனும் காற்று வாங்குகிறோம்.
கடலைப் பார்த்தாலே நமக்கு ஒருவித அச்சம்தான் கரையிலேயெ - நின்று விடுவோம் குர்ஆன் மீதும் நமக்கு ஒரு வித மதிப்பச்சம் அதனால் - மத்ரஸா எனும் கரையைத் தாண்டுவதில்லை.
கடலின் - மேற்பரப்பை மட்டுமே நாமறிவோம் அதன் பிரம்மாண்டத்தை அறிய மாட்டோம் குர்ஆனை - மேலோட்டமாகவே நாம் ஓதுவோம் அதன் மகத்துவத்தை நாம் அறிய மாட்டோம்
புதையல்களை ஒளித்து வைத்திருக்கும் கடலின் ஆழத்தை நாம் கண்டதில்லை வாழ்வின் பொக்கிஷங்கள் குவிந்திருக்கும் குர்ஆனின் - ஆழிய அர்த்தங்களையும் நாம் உணர்ந்ததில்லை.
கடல் அலையின் - ஓசை நம்மோடு பேசினாலும் அதன் மொழி நமக்கு புரிவதில்லை.
குர்ஆன் வசனங்களின் - ஒலிநயம் நம்மிடம் ஆயிரமாயிரம் சேதி சொல்கிறது அதன் மொழியோ நமக்கு அந்நியம்.
கடல் - நாம் அறியாதது எனினும் அதன் கதைகளை நிறையக் கேட்டதுண்டு குர்ஆனை - நாம் அறியாவிட்டாலும் அதன் - பெருமைகளை நிறைய பேசுவதுண்டு.
ஏழு கடல்களும் அதற்கப்பால் சிறை வைக்கப்பட்ட ராஜகுமாரியும் நாம் படித்த கதை ஏழு வானமும் அழகிய சுவனக் கன்னிகளும் குர்ஆன் நமக்குச் சொல்லும் உண்மை.
ராஜகுமாரி மேல் நமக்கு ஆசைதான் ஆனால் - ராஜகுமாரனைப் போல் வீர சாகசம் புரிய நாம் தயாரில்லை.
சுவனத்தின் மீதும் தூய கன்னியர் மீதும் நமக்கு ஆசைதான் ஆனால் அதனை அடைவதற்காய் - நல்லடியார்களைப் போல் இறைவழியில் உழைக்க நாம் தயாரில்லை.
கடற்கரையில் - பௌர்ணமியின் கனவொளியில் பாறை மேல் வந்தமரும் கடற்கன்னியரை வர்ணிக்கக் கேட்டு வாய் பிளந்து நிற்பது போல்
குர்ஆனில் - சுவனத்து (ஹூருல்ஈன்) மங்கையரைப் பற்றிய வர்ணனைகளை வசனங்களில் வாசித்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.
கடற்கன்னி மேல் ஆசையிருந்தும் அலைகளின் சீற்றத்தைக் கண்டு மருண்டு கடலில் நாம் குதிப்பதில்லை.
சுவன மங்கையர் மேல் ஆசையிருந்தும் இறைச்சட்டங்களுக்கு மிரண்டு போய் குர்ஆனுக்குள் - முழுமையாய் நுழையவும் நாம் தயாரில்லை.
கடலில் - யாராவது நீச்சலடித்தால் வியப்போடு வேடிக்கை பார்ப்போம் குர்ஆனை - யாராவது விரிவுரை செய்தால் வாய் பிளந்து கேட்டுக் கொள்வோம்
கடலில் - பயணம் செய்பவர்கள் மேற்பரப்பை மட்டுமே பார்ப்பார்கள் குர்ஆனை - மனனம் செய்பவர்கள் - மேலோட்டமாக ஓதுவதுடன் மட்டுமே நின்று விடுவார்கள்.
கடலில் - முத்தெடுக்க ஆசையுண்டு ஆனால் - மூச்சடக்கி மூழ்க நாம் தயாரில்லை.
குர்ஆனின் - பரக்கத் மீது ஆசையுண்டு. ஆனால் - அதனைக் கற்று - எந்நிலையிலும் உறுதியாய் பின்பற்ற நாம் தயாரில்லை.
கடலின் - முத்துக்கள் கிடைக்காவிடினும் அலைகளில் ஒதுங்கும் கிளிஞசல்களோடு நாம் திருப்தியடைகிறோம்.
குர்ஆனின்படி வாழாவிட்டாலும் அதனை - நோய் நிவாரண தாயத்துகளாக கட்டிக் கொள்கிறோம். படிக்காமல் பாத்திரத்தில் எழுதிக் கரைத்துக் குடித்து விடுவோம்.
மொத்தத்தில் - கடற்கரைக்கு வந்தும் கடலை அறியாமலே நாம் திரும்பி விடுகிறோம் குர்ஆனை நாம் பெற்றிருந்தும் - குர்ஆனிய சமூகத்தில் பிறந்திருந்தும் குர்ஆனை அறியாமலே மரணித்து விடுகிறோம்.
கடற்கரை மணலில் கால்தடம் பதித்து முகவரி இல்லாமல் போனவர்களைப் போல் குர்ஆனை அறியாது வாழ்ந்து அழிந்து போன குருட்டுச் சமூகத்துடன் நாமும் சேர்ந்து கொள்கிறோம்.
ஆனாலும், 'நான் கடலைப் பார்த்திருக்கிறேன்' என்று பெருமையாய்ச் சொல்லும் பாலகனைப் போல் நாங்கள் - குர்ஆனுக்கு சொந்தக்காரர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்வோம்.
-'கவிக்கோ' அப்துர் ரஹ்மானின் 'கடற்கரை' கவிதையைத் தழுவி எழுதப்பட்டது.
நன்றி சமரசம்.
|