கண் என்னும் ஜன்னல்! Print
Wednesday, 03 October 2012 12:13

Woman Eyes PNG Pic

      கண் என்னும் ஜன்னல்!       

 

ஜன்னல் என்பது இருவழி போக்கு.

ஒளியும், ஒலிகளும் மட்டுமின்றி,

ஜன்னல்கள் வழியே ஓடி வரும்,

வளியும், வாசனைகளும் கூடி!

 

வெளியே இருப்பவர் காணலாம்,

உள்ளே இருக்கும் பொருட்களை;

நபர்களை, நடவடிக்கைகளை;

நல்லது, பொல்லாதவைகளை.

 

கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள்.

வெளி விஷயங்கள் உள்ளே செல்லும்,

கண்கள் வழியே! உள்ளே இருப்பவையும்,

வெளியே தெரியும், காண்பவர்களுக்கு!

 

மதலையின் கண்களில் ஒரு மாசின்மை,

மங்கையின் கண்களில் ஒரு மயக்கம்;

மனிதனின் கண்களில் பொங்கும் காமம்,

புனிதரின் கண்களில் பெருகும் அருளொளி.

 

புலியின் கண்களில் வழியும் கொடூரம்,

மானின் கண்களில் தெரியும் மருட்சி;

அணிலின் கண்களில் தெறிக்கும் குறும்பு,

ஆட்டின் கண்களில் உள்ள அறியாமை.

 

நரியின் கண்களில் வழியும் தந்திரம்,

நாயின் கண்களில் விளங்கும் நேர்மை,

பூனையின் கண்களில் தெரியும் பெருமை,

யானையின் கண்களில் அமைந்த கம்பீரம்.

 

நம் கண்கள் வழியே வெளியே செல்லும்,

நம் உள்ளப் பாங்கும், நம் உணர்ச்சிகளும்;

இனிய எண்ணங்கள் தரும் அந்த அழகை,

இனித் தர முடியாது எந்த சாயப் பூச்சும்.

 

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.

source: http://visalramani.wordpress.com