திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை -மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது Print
Thursday, 25 December 2014 09:39

மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்ப்பு திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது

புதுடெல்லி : திராவகம் வீச்சு வழக்கை மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்த்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் தூக்குத்தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திராவகம் வீச்சு சம்பவங்களில் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவது, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு மிகவும் கவலையை அளித்துள்ளது. திராவகம் விற்பனையை சில மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளது. சில மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு மாதத்தில் சராசரியாக 400 திராவகம் வீச்சு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பழி வாங்குவதற்காக ஈடுபடும் மோசமான இந்த செயலால், பெண்கள் மிகவும் கடுமையான உடல் வேதனை, மனவேதனை அடைவதாகவும் வாழ்க்கையே குலைந்து போவதாகவும், எனவே இந்த குற்றத்தை கடுமையான சட்டம் கொண்டு தடுக்க வேண்டும் என்று மத்திய சட்டக்கமிஷன் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திராவகம் வீச்சு சம்பவங்களை முழுமையாக தடுப்பதற்காக மத்திய அரசு, கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திராவகம் வீச்சு சட்டம் 2013–ன் படி, வழக்கை 60 நாட்களில் முடிக்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு முதல் ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்படுகிறது.

தூக்குத்தண்டனை
அதன்படி திராவகம் வீச்சு வழக்கை மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடித்து, அதிகபட்சமாக குற்றவாளிக்கு ஆயுள்சிறை முதல் தூக்குத்தண்டனை வரை விதிக்கவும், மேல்முறையீடு செய்வதில் விதிமுறைகள் வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திராவகம் விற்பனையை வரைமுறைப்படுத்தவும், குற்றவாளிக்கு அதிக தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மறுவாழ்வு
திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்டவருக்கு, மருத்துவமனையில் கருணை அடிப்படையில் உயர்தர இலவச சிகிச்சை அளிக்கவும் மேலும் பலன்களை பெறும்வகையில், சுகாதாரத்துறை, நிதித்துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து புதிய முடிவுகள் எடுக்கவும் மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது.

திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ஊனம் ஏற்படுமானால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்பொருட்டு, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, சிறப்பு பயிற்சி, சுயவேலை வாய்ப்பு கடனுதவி ஆகியவை அளிக்கவும் வழிவகை செய்ய ஆலோசிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

-தினத்தந்தி