அமெரிக்கத்‬ தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்! Print
Tuesday, 21 April 2015 07:38

அமெரிக்கத்‬ தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்!

சிறு வயதுக் கணவொன்றுடன் எதிர்பார்த்திருக்கின்றாள்.
வாசிக்க வேண்டிய செய்திக் கதையை ஒருமுறை வாசித்துக்கொள்கின்றாள்.
மின் விளக்குகள் எரியும், கெமரா தயாராகும்.
முகத்தில் ஒப்பனை நேர்த்தியாக இருக்கும், மனதுக்குள் சமாதானமாகலாம்.
உடையைப் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.
ஆனால், தலை மறைப்பு சரியாக இருக்கின்றதா என்பதை மீண்டும் ஒருமுறை கைகளால் தொட்டு இழுத்து முகத்தின் எல்லையில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

நூர் தகூரி, 21, அமெரிக்க தெலைக்காட்சி சேவையொன்றில் முதன் முறையாக ஹிஜாப் அணிந்து செய்தி வாசிக்கும் தெரிவிப்பாளராகும் இலட்சியத்துடன் முன்னேறும் பெண் ஊடகவியலாளர்.

முஸ்லிம் பெண்கள் தொடர்பாக பிரதான ஊடகங்கள் பரப்பிவரும் பிழையான அபிப்பிராயங்களுக்கு தகுந்த பதிலைக் கொடுக்க வேன்டும் என்ற வேட்கையுடன் முன்வந்துள்ளாள்.

“செய்தி வாசிப்பவராக வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது... இயல்பாகவே கதை கூறும் ஆற்றல் எனக்கு உண்டு” எனக் கூறும் தகூரி, “நான் ஹிஜாபை அணிவேன் என்று கருதியிருக்கவில்லை. இதை அணிந்த பிறகும்கூட செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை. இது என்னைத் தடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை” என்று Huffington Post ஊடகத்திற்கு ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

லிபிய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான நூர் தகூரி, தனது பெயரின் அர்த்தமான ‘ஒளி’யை அடிப்படையாக வைத்து, 2012 முதல் ‪‎Let Noor Shine‬ (ஒளி பிரகாசிக்கட்டும்) என்ற பெயரில் சமூக ஊடக இயக்கத்தை நடத்துகின்றாள்.

இவ்வியக்கத்தின் மூலம் தனது இலட்சியத்தையும் தன்னைப் போன்ற பலரது இலச்சியங்களையும் பேசுவதற்கு தளமொன்றை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். தகூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் 89,000 வாசகர்கள் இருக்கின்றனர்.

தனது வளர்ச்சியில் தட்டிக்கொடுத்தவர்களை விட தட்டிவிட்டவர்கள் அதிகம் எனக் கூறும் தகூரி, “இன்னும் அவர்கள் இந்த தலைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை, இது எழுச்சிபெறும் தலைமுறை, விடயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, மக்கள் பன்மைத்துவத்தைத் தேடுகின்றனர், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள விரும்புகின்றனர்” என்றார்.

மூலம்: MuslimVillage.com