அறியாமையை அகற்றுவோம் Print
Wednesday, 01 November 2017 07:52

அறியாமையை அகற்றுவோம்

      மவ்லவி, எஃப். ஜமால் பாகவி       

அறியாமை என்பது மனிதனோடு ஒட்டிப் பிறந்த ஒன்றாகும். மனிதன் பிறக்கும்போது ஒன்றுமறியாதவனாகவே பிறக்கின்றான்.

‘நீங்கள் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான்’ (அல்குர்ஆன் 16 : 78)

பிறந்த பின்பும் கூட சில காலம் வரை அவனுக்கு ஒன்றும் தெரிவதில்லை. பின்புதான அவனுக்கு ஒவ்வொனள்றாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவன் எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும் சில அறியாமை அவனைவிட்டும் நீங்க மறுக்கின்றது.

அந்த அறியாமையை தன்னுள் அடக்கி வைக்காமல் அவைகளை அவ்வப்போது பிறரிடம் ‘இதன் விளக்கம் என்ன?’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டு விளக்கம் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தார்மீகக் கடமையாகும்

‘நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்’ (அல்குர்ஆன் 16 : 43)

நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறே ஒவ்வொருவரும் தனக்குத் தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அறியாமை’ எனும் நோயின் மருந்தாகிறது ‘கேள்வி கேட்பதாகும்’ (நூல்: அபூதாவூது)

 

‘அறியாமை’ என்பது ஒரு பயங்கர நோயாகும். ஒரு விஷயமாக நமக்கு முழு விபரம் தெரியவில்லையானால் அதனை பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிலர் ஐவேளைத் தொழுகையினை பல காலங்களாக கடைபித்து வருவர். ஆனால் அவர்களுக்கு தொழுகையின் முறைகளைப்பற்றி சரிவரத் தெரியாது. மற்றவர்களிடம் கேட்கவும் மாட்டார்கள். இப்படியே தங்கள் காலத்தை கழிப்பார்கள். இதனால் அவர்கள் கைசேதப்பட வேண்டிவரும்.

இதேபோன்று அல்குர்ஆனின் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு அது கூறுகின்ற கருத்து என்ன? என்பது புரியாவிட்டால் அது சம்பந்தமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதுவும் புரியவில்லையெனில் அதுபற்றி தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

உதாரணமாக, ‘பின்னர் (நரகில்) சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான்’. (அல்குர்ஆன் 87:13) எனும் இறைவசனம் கூறுகின்ற கருத்து நபித்தோழர்களுக்கு புரியவில்லை. எனினும் அவ்வசனத்தை நன்றாக நம்பியிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அந்த இறைவசனத்தின் விளக்கத்தைக் கேட்டனர்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தோழர்களே! பசுமையான மரம் கோடைக்காலத்தில் பட்டு (செத்து) விடுகிறது. பின்பு, அதே மரம் மழை தூறிவிட்டால் மறுபடியும் துளிர்த்து விடுகிறது. இவ்வாறே நரகவாதிகள் சாவார்கள். மறுபடியும் உயிர்பெற்று எழுவார்கள். இவ்வாறே அவர்களுக்கு வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்’ என்று கூறினார்கள்.

‘(இறைமறுப்பாளர்களே!) நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தின் எரிபொருளாவீர்! அங்கே நீங்கள் வந்து சேர்பவர்களே!’ (அல்குர்ஆன் 21 : 98)

இந்த திருவசனத்தை முழுமையாக நபித்தோழர்கள் நம்பினர். இருப்பினும் சில விளக்கங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. ‘நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தின் எரிபொருளாவீர்’ என்று அல்லாஹ் கூறியிருக்கின்றான். அப்படியெனில் நஸரானிகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், யூதர்கள் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் இறைவனாக வணங்கினார்கள். அதனால் நஸரானிகளுடன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் யூதர்களுடன் உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் நரகத்திற்கு செல்வார்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தோழர்களே! அல்லாஹ்வின் வார்த்தையைப் பாருங்கள். ‘நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவைகளும்’ என்றுதான் கூறியுள்ளானே தவிர, வணங்குபவர்களும் என்று கூறவில்லை. எனவே இறைமறுப்பாளர்களுடன் அவர்கள் வணங்கிய சிலை, உருவங்கள், மற்றுமுண்டான பொருட்கள்தான் நரகில் எரிபொருளாக ஆக்கப்படுமே தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாம், உஜைர் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் அல்ல’ என்று விளக்கமளித்தார்கள்.

இன்னும் இதுபோன்று பல உதாரணங்கள் கூறலாம். நாமும் இதுபோன்று நமக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை, நம் அறியாமையை உள்ளத்தில் முடக்கிப் போடாமல் அறிஞர்களிடம் சென்று விளக்கம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

www.nidur.info