எண்ணங்களின் எழுச்சி! Print
Monday, 13 July 2009 11:49

எண்ணங்களின் எழுச்சி!

  என். ஜாகீர் ஹுசேன்  

இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் அளப்பரிய ஆற்றலை, தனித்திறமையை வைத்துள்ளான். அதை உணர்ந்து வெளிக்கொணர்ந்து செம்மையாகச் செயல்படுத்துபவர்கள் தான் சாதனையாளர்களாக உள்ளார்கள்.

ஒவ்வொரு வருக்கும் கை கட்டை விரல் ரேகையை தனித்தனியாக மாறுபட்டு அமைத்துப் படைத்திருக்கும் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் ஆழ்மனத்தில் ஒரு மகத்தான சக்தியை விதையாக வைத்துள்ளான் என்பதை நம்ப வேண்டும். அந்த விதையை விருட்சிகமாக மாற்றுவதில் தான் வெற்றி உள்ளது.

இன்று உலகில் சாதனை படைத்த சாதனையாளர்கள் அத்துனைபேரும் சாதிப்பதற்கு அவர்கள் திறமை 20 சதவீதம் மட்டும் தான். அவர்களின் மனநிலை தான் 80 சதவீதம் காரணம்.

இறைவன் நம்மிடம் தனித்திறமை வைத்துள்ளான் என்று நம்பிய மனநிலை, தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மனநிலை, நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் முடியும் என்று அவர்கள் முயற்சி செய்த மனநிலை, இவைகள் தான் வெற்றிபெறச் செய்தது.

எண்ணங்கள் எழுச்சி பெற உழைத்தால் மகத்தான சாதனைகள் அனைத்தும் மலையளவல்ல. மடுஅளவுதான்.

உயரிய எண்ணங்கள் தான் உலக சமுதாயத்திற்கு ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது. குளத்தின் நீர் மட்டத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்குத் தகுந்தாற்போல் தாமரை மலரின் உயரம் மாறுபடுவது போல் மனிதனின் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கைத்தரம் மாறுபடுகிறது.

கவலை என்பது நாளைய துயரங்களை அழிக்காது. இன்றைய வலிமையை அழிக்கக்கூடியது.

ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்பதை எண்ணிவிடமுடியும். ஆனால் ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் என்பதை எண்ண முடியாது.

ஒவ்வொரு மனிதனுடைய ஆழ்மனதிலுள்ள ஆற்றல் அளவிட முடியாதது.

உதாரணமாக, நாம் ஒரு மைல் தூரத்தை நடந்து போக 30 நிமிடங்கள் ஆகலாம்.

ஆனால் நம்மை ஒரு நாய் துரத்தும் போது அதே தூரத்தை ஐந்தே நிமிடத்தில் கடக்கிறோம். அதே ஆற்றல் நம்மிடத்தே தானே ஒளிந்திருந்திருக்கிறது.

நாம் எப்பொது நம்முடைய எண்ணங்களை ஆற்றலை உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போது அதற்கான வழிவகைகளை இறைவன் அமைத்துத் தருகிறான். இதைத்தான் டாக்டர். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார் தூக்கத்தில் வருவது அல்ல கனவு. நம்மைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு.

நம் எண்ணங்கள் தான் சொற்களாகின்றன. சொற்கள் தான் வார்த்தையாகின்றது. வார்த்தை தான் செயல்பாடுகளாகின்றன. செயல்கள் தான் வாழ்க்கையாகின்றன. நல்ல உயரிய எண்ணங்களே உன்னதமான வாழ்வைத் தருகின்றன.

- என். ஜாகீர் ஹுசேன்  (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)

ந‌ன்றி : முஸ்லிம் முர‌சு ஏப்ர‌ல் 2009