தவறுகள் நடக்கக்கண்டால்....! Print
Friday, 22 March 2013 17:58

தவறுகள் நடக்கக்கண்டால்....!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: "மார்க்கப் புறம்பான செயல் நடக்கக் கண்டால், முடிந்தால் கைகளால் தடுங்கள், முடியாவிட்டால் நாவினால் தடுங்கள், அதுவும் முடியாவிட்டால், உள்ளத்தால் வருந்தி ஒதுங்குங்கள். இது ஈமானின் கடைசி நிலையாகும்." (முஸ்லிம், முஅத்தா, அபூதாவூது, திர்மிதீ, நஸயீ) 

நம்மைச்சுற்றி தவறுகள்/மார்க்கப் புற்ம்பான செயல் நடக்கும்போது, ஒரு முஃமினின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் நமக்கு தெளிவாக விளக்குகிறது. தவறுகள் சுட்டிக்காட்டப் படும்போது, நம்மை தவறாக எண்ணிக்கொள்வார்களோ, இதனால் நம்முடைய உறவு பாதிக்கப்பட்டுவிடுமோ, இதற்கெனெவே சிலர் இருக்கின்றார்கள் நமக்கேன் வம்பு எனறு சிலர் நம்மிடையே இருப்பதை பார்க்கிறோம். இவர்கள் முதலில் நபி அவர்களின்ஹதீஸை புறக்கணிக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொருவரும் கையால் தடுக்க நினைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும். ஆகையால், கையால் தடுக்க வேண்டும் என்பது ஆட்சியாளர்களுக்கு உரியது என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், யார் யாருக்கு எழுதக்கூடிய திறமையை இறைவன் தந்துள்ளானோ அவர்கள் பேனாவை (இப்போது பேனா என்பது மறந்து computer, Email என்றாகிவிட்டது) கையில் எடுத்து, தன்னுடைய எழுத்தின் மூலம், தவறுகளை திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிலருக்கு இறைவன் நாவன்மையை தந்திருப்பான். அவர்கள் தங்களின் நாவால், நாவன்மையால், சிந்தனா சக்தியால்,  மக்களுக்கு அவர்களின் தவறுகளை அழகிய முறையில் எடுத்துச்சொல்லி, அதிலிருந்தும் அவர்கள் மீள்வதற்கு வழிவகுக்க  வேண்டும்.  இந்த இரண்டும் சக்திகளும் இல்லாதவர்கள்தான், ஈமானின் கடைசி நிலையான  மனதால்  நினைத்து ஒதுங்குவது.
 
முக்கியமாக, பிறரின் தவறுகளை திருத்த முனையும்போது, மென்மையான/அழகான முறையில் எடுத்துச்சொல்லி அந்த தவறிலிருந்தும் அவர் மீண்டு இறைவனின் மன்னிப்பை  பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க வேண்டுமே தவிர, ஏதோ அவர் தவறு  செய்துவிட்ட  குற்றவாளி என்றோ அல்லது நாம்தான் தவறுகளை திருத்துவதற்காக அனுப்பப்பட்ட சித்தர் போன்ற ஷைத்தானிய எண்ணங்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
இறைவன் நம் அனைவரையும் மேற்கண்ட ஹதீஸின் படி அமல் செய்வதற்கு அருள் புரிவானாக. தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் திறுத்திகொள்ள ஏதுவாக இருக்கும்.