ஒற்றுமையின் பலன் Print
Friday, 30 November 2012 06:01

             ஒற்றுமையின் பலன்                    

அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் எங்கள் திருநபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் புனிதமிக்க குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த தோழர்கள் அனைவர் மீதும், உலக முடிவு நாள் வரை அழகிய முறையில் அந்த தோழர்களை பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் மீதும் இறைவா நீ சலவாத்தும் சலாமும் பொழிந்திடுவாயாக!!!

வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (23:52)

وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ

"நிச்சயமாக (உங்களுக்கு தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும். இன்னும் நான் (தான்) உங்கள் இரட்சகன்; ஆகவே, என்னையே நீங்கள் பயப்படுங்கள்" (என்றும் கூறினோம்)"

ஈமான் கொண்ட நல்லடியார்களே ! புனித குரான் வசனங்களும், அருமை அண்ணல் மொழிகளும் ஒற்றுமை எனும் கையிற்றை உறுதியாக பிடிக்க சொல்கின்றன. ஒற்றுமையின் பலனை, பிரிந்து செல்வத்தின் பாதிப்பை பல் வேறு கட்டங்களில் நமது நாயகம் சொல்லிக் காட்டுகிறார்கள்.

நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ، فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ

"ஒற்றுமையைக் கொண்டு பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக ஓநாய் சாப்பிடுவதெல்லாம் தனித்து சென்றதைத்தான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்:547)

இஸ்லாம் ஒருமையின் பக்கமும் ஒற்றுமையின் பக்கமும் அழைக்கிறது. காரணம் அதுவே அனைத்து நன்மைக்கும் ஈடேற்றத்திற்கும் அடிப்படையாகும். தங்கள் உள்ளத்தில் ஒற்றுமை இல்லாத எந்த கூட்டமும் வெற்றியடைந்ததில்லை. இந்த ஒற்றுமை அல்லாஹ்விடமிருந்து நமக்கு கிடைத்த மிகப் பெரிய அருட் கொடையாகும்.

இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: (03:103)

وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا

"மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து,) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு,) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்; மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப்பாருங்கள்; நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான்; ஆகவே, அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்"

இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: (08:62-63)

هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ* وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

"அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், விசுவாசிகளைக் கொண்டும் பலப்படுத்தினான். மேலும்,(விசுவாசிகளாகிய) அவர்களுடைய இதயங்களுக்கிடையில் (சிதறிக்கிடந்த அவர்களை இஸ்லாத்தின் மூலம்) அன்பையூட்டினான்; பூமியிலுள்ள யாவையும் நீர் செலவு செய்த போதிலும் அவர்களுடைய இதயங்களில் அன்பையூட்ட உம்மால் முடிந்திருக்காது; எனினும், அல்லாஹ்தான் அவர்களுக்கிடையில் அன்பை உண்டாக்கினான்; நிச்சயமாக அவன் (யாவையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்"

அறிவும், மதிநுட்பமும் நிறைந்த, ஒற்றுமையான ஆட்சியாளர்களால் நமக்கும் அல்லாஹ் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் கிருபை பொழிந்திருக்கிறான். இந்த தேசத்தின் நலனிலும், மக்கள் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் மன உறுதியை அன்பளிப்பாக்கியிருக்கிறான்.

நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ

"உங்கள் தலைவர்களில் சிறந்தவர்கள், நீங்கள் எவர்களை நேசிக்கிறீர்களோ, எவர்கள் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களே. மேலும் உங்களுக்காக அவர்கள் இறைவனிடம் துஆ செய்பவர்கள், நீங்கள் அவர்களுக்காக துஆ செய்வீர்களே (அவர்களே உங்கள் தலைவர்களில் சிறந்தவர்கள்)" (مسلم: 1855)

நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எடுத்து கூறுகிறார்கள்:

أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

"மனிதர்களுக்கு யார் அதிக பலனுள்ளவராக இருக்கிறாரோ அவரே மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் நேசத்திற்குரியவர்" (தப்ரானி:13646).

நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எடுத்து கூறுகிறார்கள்:

مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِى سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا

"உங்களில் எவர் தனது கூட்டத்தில் பாதுகாப்பாக இருக்கிறாரோ, உடல் ஆரோக்கியத்துடன் உள்ளாரோ, அவருக்கு தேவையான அன்றைய நாளின் உணவு அவரிடம் இருந்தால் நிச்சயமாக அவருக்கு இந்த உலகமே கிடைத்தது போல் ஆகும்"( الترمذي: 2346 وابن ماجه: 4141)

இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: (102:08)

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர், அந்நாளில் (உலகில் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து) அருட்கொடையைப்பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (4:59)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُم

"ஈமான்கொண்ட நல்லடியார்களே அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்"

வல்ல அல்லாஹ் நபி மீது சலவாத் சொல்லும் செயலை தன்னிடமிருந்தே தொடங்கி, அதில் மலக்குமார்களையும் சேர்த்து உண்மை முமின்களாகிய நம்மையும் சொல்லச்சொல்கிறான் : (33:56)

إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

"இந்த நபியின் மீது அல்லாஹ் (சலவாத் ஓதி) அருள்புரிகிறான். மலக்குகளும் அவருக்காக (சலவாத்ஓதி) அருளைதேடுகிறார்கள். மூமின்களே நீங்களும் அவர் மீது சலவாத் சொல்லி அவர் மீது சலாமும் சொல்லுங்கள்"

مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً

இறைதூதர் (சல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் "யார் என் மீது ஒரு முறை சலவாத் சொல்லுகிறார்களோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை சலவாத் சொல்லுகிறான்" (முஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ்! எங்கள் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், புனிதமிக்க அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த அவர்களின் தோழர்கள் மீதும் சலவாத் என்னும் ஈடேற்றத்தையும் சலாம் என்னும் அமைதியையும், பரகத் என்னும் நற்பாக்கியங்களையும் தந்தருள்வாயாக!, மேலும் நல்வழி காட்டும் கலிபாக்களாகிய அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர்களையும், சங்கை நிறைந்த அனைத்து தோழர்களையும், அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களையும், உலக முடிவு நாள் வரை இவர்களை அழகிய முறையில் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களாகிய எங்கள் அனைவரையும் நீ பொருந்திக்கொள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! அமீரக தேசத்தின் எங்கள் தலைவர், எங்கள் காரியங்களின் மன்னர் ஷைகு கலீபாவையும் மற்றும் அவரது பிரதிநிதியையும், நீ நேசித்தவாறு பொருந்திக்கொண்டவாறு உதவி புரிவாயாக. மேலும் அவரது சகோதரர்களை அமீரகத்தின் நடுவர்களாக நிலைப்படுத்துவாயாக !! உயிரோடு உள்ள மற்றும் மரணித்த முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்கிடுவாயாக !!!

யா அல்லாஹ்! ஷைகுஜாயிது, ஷைகு மக்தூம், உனது கிருபையில் வந்தடைந்த அமீரகத்தின் ஷைகுமார்களாகிய இவர்களது சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் உனது கிருபையை பொழிவாயாக!

யா அல்லாஹ்! இந்த அமீரகத்திலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக!

மேற்கூறிய அனைத்தையும் நாம் பின்பற்றி நடக்க இறைவன் நமக்கு உதவிபுரிவானாக. அதன்மூலம் நாம் இறைவனின் பொருத்தத்தையும் இறைதூதர் அவர்களின் பொருத்தத்தையும் பெறுவோமாக !!! ஆமீன்.

மொழிபெயர்ப்பு : மௌலவி, அப்சலுள் உலமா முஹம்மது ஹாரிஸ் பிலாலி B.COM, DUBAI.