சொர்க்கத்தில் நுழையலாம் வாருங்கள்! Print
Wednesday, 14 July 2010 06:48

சொர்க்கத்தில் நுழையலாம் வாருங்கள்!

o சொர்க்கத்தைத் தரவேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

நரகத்தை விட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது,

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : திர்மிதீ 2495, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)

o அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும்  நோக்கத்தில் யாரேனும் தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 22235)

o அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு செய்தவர் சொர்க்கத்தில் பல வாயில்களிலிருந்தும் அழைக்கப்படுவார். அல்லாஹ்வின் அடிமையே! இது மிகச் சிறப்புமிக்கது!

தொழுகையாளியாக இருந்தவர் ஸலாஹ் (தொழுகை) எனும் வாயிலில் அழைக்கப்படுவார்.

அறப்போர் புரிபவராக இருந்தவர் ஜிஹாத் (அறப்போர்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் ரய்யான் எனும் வாயிலில் அழைக்கப்படுவார்.

தர்மம் வழங்குபவராக இருந்தவர் ஸதகா (தர்மம்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ----- யாரேனும் ஒருவர் இந்த அனைத்து வாயில்களிலிருந்தும் அழைப்படுவாரா? என்று கேட்டார்கள்.

அதற்கு ஆம்! நீரும் அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம் என நான் கருதுகிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ 1764 முஸ்லிம்) 

o மரணித்து பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்? என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார் : நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது வாங்கிக் கொள்வேன் என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2919)

o நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் - அதனை மனனம் செய்தவர் - என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

o ஓர் அடியார் ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறி அக்கொள்கையுடனே மரணித்து விட்டால் நிச்சயமாக அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா?! என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று பதிலளித்தார்கள். -மீண்டும்- நான் அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா?! என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று பதிலளித்தார்கள்.

நான் மூன்றாவது அல்லது நான்காவது தடவை இவ்வாறு கேட்டபோது அபூதரின் மூக்கு -மண்ணில் ஒட்டட்டும்! அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ 5379, முஸ்லிம்)

o யாரேனும் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடப்பாரானால் அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கப் பாதையை எளிதாக்கி விடுகின்றான் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4867)

www.nidur.info