படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே! Print
Thursday, 03 September 2015 06:31

படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே!

 உண்மையின் உண்மையல்லவா இது!

 உள்ளத்தின் எண்ணக்கிடங்கை அறியும் அல்லாஹ்வின் ஆற்றல்!

 அனைத்தையும் விட ஒரு முஸ்லிமுக்கு உவந்தவை அல்லாஹ்வும் அவனது தூதருமே!

 மற்ற மதங்களுடன் சமரசம் ஏதுமற்ற ஓரிறை வணக்கம்!

 இணைவைப்பின் கொடூரம் புரிகிறதா?

 இறை விசுவாசத்துடன் இணைவைப்பு எனும் அக்கிரமத்தை கலக்காதிருத்தல்!

 உண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்!

 உள்ளத்தில் நிராகரிப்பின் சிறு வடுவும் ஏற்படாது காத்துக்கொள்ளல்!

 வேத ஞானம் ஏதுமின்றி மக்களை வழிகெடுக்கும் குறுமதியுடையோர்!

 பாவத்திலிருந்து பரிசுத்தம், தானம், இறைதிருப்தி!

 இறை எச்சரிக்கை!

 தனக்கு எதிராகவே சாட்சி கூற இருக்கும் நிராகரிப்போர்!

 அல்லாஹ்வையன்றி மனிதன் வணங்கி வழிகெட்ட தெய்வங்களும் அவனுடன்...!

 மனிதர்களில் ஒன்பது இழிகுணங்களைக்கொண்ட ஈனப்பிறவி!

 இறைவன் நாடியவருக்கே நேர்வழி

 அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்!

படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்: 3:83)

உண்மையின் உண்மையல்லவா இது!

"(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்களாக) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்ருக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அவ்விரண்டிலும் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதிப் பெற்றவர்களைத் தவிர அவனிடத்தில் பரிந்துப் பேசுவதும் பயனளிக்காது". (அல்குர்ஆன்: 34:22-23)

அனைத்தையும் விட ஒரு முஸ்லிமுக்கு உவந்தவை அல்லாஹ்வும் அவனது தூதருமே!

"(நபியே!) நீர் கூறும். உங்களுடைய தந்தையர்களும், உங்களுடைய புதல்வர்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள பொருட்களும் நஷ்டமாகி விடுமோ என்று பயந்து (எச்சரிக்கையுடன்) நீங்கள் செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக உவந்த வீடுகளும் அவை அனைத்தும் அல்லாஹ்வையும், ரஸூலையும் விரும்புவதை விடவும், மேலும் அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக்க விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள்) உண்மை விசுவாசிகளல்லர். நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப்பற்றி அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் காத்து எதிர்ப்பார்த்திருங்கள்" (அல்குர்ஆன்: 9:24).

மற்ற மதங்களுடன் சமரசம் ஏதுமற்ற ஓரிறை வணக்கம்!

நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் 109:1-6)

உள்ளத்தின் எண்ணக்கிடங்கை அறியும் அல்லாஹ்வின் ஆற்றல்!

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான். இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." (அல்குர்ஆன்: 3:29)

இணைவைப்பின் கொடூரம் புரிகிறதா?

''இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)

இறை விசுவாசத்துடன் இணைவைப்பு எனும் அக்கிரமத்தை கலக்காதிருத்தல்!

"(நபி இப்ராஹீமுடன்) அவருடைய சமூகத்தார் தர்க்கம் செய்தனர். அதற்கு அவர் கூறினார். நீங்கள் அல்லாஹ்வைப் பற்றியா - நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டியிருக்கிற நிலையில் என்னுடன் தர்க்கம் செய்கிறீர்கள்.

என் இறைவன் எதையாவது விரும்பினாலன்றி நீங்கள் இணை வைத்து வணங்குபவற்றுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் யாவற்றையும் (தன்) ஞானத்தால் சூழ்ந்தறிகின்றான். இதைக்கூட நீங்கள் சிந்திக்க வேண்டாமா? உங்களுக்கு யாதொரு அத்தாட்சியும் அவன் அளிக்காமல் இருந்தும் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் பயப்படாதிருக்க நான் எப்படி நீங்கள் இணை வைத்தவற்றுக்கு பயப்படுவேன். நம் இரு பிரிவினரில் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தகுதியுடையோர் யார்? என்பதை நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் கூறுங்கள். எவர் மெய்யாக ஈமான் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தையும் கலந்து விடாமல் இருப்போருக்கு நிச்சயமாக நிம்மதியுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (அல்குர்ஆன்: 6:80-82).

உண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்!

நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தாரிடம் சென்று விட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ''நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (அல்குர்ஆன் 83:29-33)

உள்ளத்தில் நிராகரிப்பின் சிறு வடுவும் ஏற்படாது காத்துக்கொள்ளல்!

(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)

வேத ஞானம் ஏதுமின்றி மக்களை வழிகெடுக்கும் குறுமதியுடையோர்!

(இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)

பாவத்திலிருந்து பரிசுத்தம், தானம், இறைதிருப்தி!

இறையச்சமுள்ளவர் தான் (கொழுந்து விட்டெயும் நெருப்பி(அதி)லிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)

இறை எச்சரிக்கை!

(உலக மக்களே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்து விடுவான். (அல்குர்ஆன் 92:14-16)

தனக்கு எதிராகவே சாட்சி கூற இருக்கும் நிராகரிப்போர்!

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். (அல்குர்ஆன்: 7:37)

அல்லாஹ்வையன்றி மனிதன் வணங்கி வழிகெட்ட தெய்வங்களும் அவனுடன்...!

(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும். (அன்றியும் அவர்கள்;) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம். - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்). நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.) இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா. இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர். அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள். (அல்குர்ஆன்: 21:97-100)

மனிதர்களில் ஒன்பது இழிகுணங்களைக்கொண்ட ஈனப்பிறவி!

(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அவன்) எப்பொழுதும் (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டுத் திரிபவன். (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி. கடின சுபாவமுள்ளவன். இதற்கு மேலாக அவன் மக்களிலும் ஈனன். (அல்குர்ஆன் 68:10-13)

இறைவன் நாடியவருக்கே நேர்வழி

(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!'' (அல்குர்ஆன் 28:56)

அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்!

தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக! அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன. (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 15:42-3)

source: http://dailyreadquran.blogspot.in/