வெட்கம் உண்மையை உரைப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது! Print
Wednesday, 02 November 2011 11:22

வெட்கம் உண்மையை உரைப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது  

‘நிச்யமாக அல்லாஹ் கொசுவையோ, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதையோ எந்த உதாரணத்தையும் சொல்ல வெட்கப்பட மாட்டான். (அல்குர்ஆன் 2: 26)

என் நண்பன் கூச்ச சுபாவமுள்ளவன். பெண்களிடம் பேசுவதென்றால் ரொம்பவும் வெட்கப்படுவான். திருமணமான பின்பும் மனைவியிடமும் அப்படியே இருந்தான். இதை அவனது மனைவியே சொல்லி வருத்தப்பட்டாள்.

இரண்டு வருடத்திற்குமுன் அவர்கள் வேலை நிமித்தமாக வெளியூருக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். சமீபத்தில் ஒரு திருமண விழாவில் நண்பனின் மனைவியை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் விசாரித்தபோது நண்பனின் மனைவி வருத்தத்தோடு சொன்னார்.

‘அண்ணே! அவர் ரொம்ப மாறிட்டாரு, ஆனால் என் வாழ்க்கைக்கே உலை வைத்துவிடுவார் போல் பயமாக இருக்கிறது’ என்றார். என்னவென்று விசாரித்தேன்.

எங்கள்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் கல்லூரி மாணவி ஒருத்தி இருக்கிறாள். என்னுடன் நன்றாகப் பேச்சுக் கொடுத்தாள். ஆனால், என் கணவர் ரொம்பவே கூச்சப்பட்டு வந்தார். நான்தான் ‘அவள் என் தங்கச்சி மாதிரி, சும்மா சகஜமாகப் பேசுங்க!’ என்று சொல்லி வந்தேன்.

அவள் எங்கள் வீட்டிற்கு வரும்போதும், போகும்போதும் இயல்பாகப் பேச, என் கணவரும் சகஜமாக பழகிவிட்டார். மார்க்கெட், ஷாப்பிங் செல்லும் போதெல்லாம் எங்களுடன் ஒன்றாக வந்துவிடுவாள். இப்போது அவர்கள் இருவரும் தனியாக சுற்றும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார்கள். கணவர் என்னை ஒதுக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு பயமாக இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை!’ என்று அழாத குறையாக முறையிட்டாள்.

ஒருவருடைய இயல்பை மாற்ற முயற்சிசெய்தால் அது தவறாக முடியும் வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் பக்குவமாக பேசி கணவரின் கூச்ச சுபாவத்தை ஓரளவுக்காவது குறைக்க முயற்சி செய்திருக்க வேண்டுமே தவிர, அதற்காக மற்ற பெண்ணுடன் - அதுவும் பக்கத்துவீட்டு கல்லூரிப்பெண்ணுன் பழகவிட்டது உங்களது தவறுதான்’ என்று சொல்லி விட்டு வந்தேன்.

அந்நிய ஆணும் பெண்ணும் ‘பஞ்சும் நெருப்பும்’போல் என்று சொல்வதைவிட ‘பஞ்சும் பெட்ரோலும்’ என்று சொல்ல வேண்டும் இக்காலத்தில்! இது ஒருபுறமிருக்கட்டும்ஸ வெட்கம் என்பது மோசமான ஒன்றோ அல்லது வேண்டாத ஒன்றோ அல்லவே!

‘நிச்யமாக அல்லாஹ் கொசுவையோ, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதையோஎந்த உதாரணத்தையும் சொல்ல வெட்கப்பட மாட்டான். (2: 26)

வெட்கம் மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஓர் அவசியமான பண்பாகும். இதனைக் கைவிட்ட மனிதர்கள், மிருகங்களை விடக் கேவலமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஓர் உன்னத ஒழுங்குமுறைகளை இஸ்லாம், மனிதர்களுக்குக் கற்றுத் தருகிறது.

மதினாவாசியான ஒரு நபித்தோழர், தன் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவதைக் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரைக் கண்டிக்காதீர்கள் நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானின் (நம்பிக்கையில்) ஒரு பகுதி என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

இந்த நபி மொழியில் இருந்து ஒரு முஃமினிடம் நாணம் இருந்தாக வேண்டும் என்பதனை உணர்கிறோம். நாணம் உள்ளவன் தவறு செய்ய யோசிப்பான். பிறர் முன் அசிங்கப்பட்டு நிற்க வேண்டுமே என்ற நாண உணர்வுதான் ஒருவனை சிறந்தவனாக மாற்றுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக நாண உணர்வுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டால் அதன் பிரதிபலிப்பை அவர்களின் முகத்தில் காணலாம். (நூல் : புகாரி)

ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் உஸாமா பின் ஜைது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உயர் வகுப்பைச் சார்ந்த திருடிய பெண்ணுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிபாரிசுசெய்ய முன்வந்தபோது, ‘உஸாமாவே! அல்லாஹ்வின் தீர்ப்பில் நீர் தலையிடுகிறீரா? அல்லாஹ்வின் மீது ஆணை! என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரின் கையை வெட்டவும் நான் தயங்கமாட்டேன்’ என்று கூற வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.

  தெரியாததை தெரிந்து கொள்வதற்கு வெட்கம் தடையாக அமைந்து விடக்கூடாது:  

ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா என்ற அன்சாரிப் பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ், உண்மை கூற வெட்கப்பட மாட்டான். ஒரு பெண் கனவு கண்டால் அவளின்மீது குளிப்பு கடமையாகுமா?’ எனக்கேட்க, ‘ஆம்! அவள் தண்ணீரைக் கண்டால்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள். ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கம் தடையாக இல்லை.

  நன்மையை ஏவி, தீமையை தடுப்பதற்கும் வெட்கம் தடையாக அமைந்துவிடக் கூடாது:  

ஒரு தடவை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். தலைமை சொல்வதற்கு கேட்கும்படியும், தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கும்படியும் தனது உரையில் குறிப்பிட்டார்கள். அந்த சமயம் அவரது மேனியில் இருஆடைகள் காணப்பட்டன. ‘உமரே! தலைமைக்கு கட்டுப்பட முடியாது. எங்கள்மீது ஓர் ஆடை உங்கள்மீது மட்டும் இரண்டு ஆடைகளா! ஏன்? முதலில் இதற்கு பதில் கூறும். பிறகு தலைமைக்கு கட்டுப்படுவதுபற்றி பார்க்கலாம்’ என்று கூட்டத்திலிருந்த ஒர் இளைஞர் சப்தமிட்டு கூறினார்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே தனது மகன் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைக்க, தந்தைமுன் அவர் வந்து நின்றதும், ‘அல்லாஹ்விற்காக கேட்கிறேன். எனது இரண்டு ஆடைகளில் ஒன்று, நீ எனக்கு தந்த உனது அடையல்லவா?’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ்வின்மீது அணையாக அது உண்மைதான்’ என்றார்கள் ஹளரத் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

‘இப்போது உமது உரையை கேட்கிறேன். கட்டுப்படுகிறேன்’ என்று அந்த வாலிபர் கூறினார். ஜனாதிபதி பதவியில் உள்ள ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சாதாரண குடிமகன் இவ்வாறு தட்டிக்கேட்க வெட்கமோ பயமோ அவரைத் தடுக்கவில்லை.

  வெட்கங்கள் பலவகை:  

  குற்ற வெட்கம்:  குற்றம் செய்த குற்றவாளி பிறரைக் காணும்போது அடையும் வெட்கம். (இக்காலத்தில் அரசியல்வாதிகளும், ஊரைக் கொள்ளையடிப்பவர்களுக்கும் இதுகூட இல்லாமல் போனது மிகப்பெரும் இழுக்கே!) ஹளதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தடைசெய்யப்படட்ட கனியை சாப்பிட்டுவிட்டு, வெட்கப்பட்டு சொர்க்கத்தில் வெருண்டோடியபோது, ‘ஆதமே! என்னைக்கண்டு வெருண்டோடுவது ஏன்?’ என அல்லாஹ் கேட்டபோது, ‘உன்னைக்கண்டு ஓடவில்லை. உன்னைக்கண்டு வெட்கப்பட்டு ஒதுங்குகிறேன்’ என்றார்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

  இயலாமை வெட்கம்:  இரவும் பகலும் ஓய்வில்லாமல் இறைவனை வணங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் வானவர்களின்; வெட்கம். ‘இறiவா! நீ பரிசுத்தமானவன். உன்னை எவ்வாறு வணங்க வேண்டுமோ அவ்வாறு வணங்கவில்லை’ என்று வெட்கத்தால் தன் இயலாமையை இறுதிநாளில் எடுத்துச் சொல்வார்கள்.

அறிமுக வெட்கம்:  முன் அறிமுகம் இல்லாத தம்பதியர் மணமுடித்த பிறகு தனிமையில் சந்திக்கும்போது அடையும் வெட்கம்.

  உறவு வெட்கம்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து கொண்ட ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு அதிகமாக வரக்கூடிய ‘மதி’ குளிப்பை கடமையாக்குமா? இல்லையா? என மாமனார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்பட்டார்கள்.

  சங்கையான வெட்கம்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்த பின்பு, வலீமா விருந்தில் கலந்து கொண்டவர்கள் ஒரேயடியாக தங்கிவிட்டார்கள். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற வெட்கப்பட்டு எழுந்து சென்றது.

  சிறுமை வெட்கம்:  பிறரிடம் தேவையாகும்போது தன்னைத் தாழ்த்தி, கூனிக்குறுகி அவரிடம் தன் தேவையை கேட்டு முறையிட வெட்கப்படுவது.

  நட்பு வெட்கம்:  ஒருவர் தமது நேசத்திற்குறியவரை கண்டதும் ஏற்படும் வெட்கம். இருவரில் ஒருவரை நினைத்தால் இனிக்கும் போது, உள்ளத்தில் வெளிப்படும் ஒருவகையான வெட்கம். இதை முகத்தில் உணரமுடியும். இவ்வாறே இருவரில் எவரேனும் ஒருவரை திடீரென சந்திக்கும்போது ஏற்படும் வெட்கம்.

  தகுதி வெட்கம்:  தகுதி வாய்ந்தவரிடமிருந்து அவர் தகுதியைவிட குறைவாக செலவு, கொடை, உபகாரம. நடந்து விட்டால் இவற்றைக்கண்டு அவர் அடையும் வெட்கம்.

www.nidur.info