முதுமை இன்னொரு குழந்தைப் பருவம்! Print
Tuesday, 23 November 2010 07:39

முதுமை இன்னொரு குழந்தைப் பருவம்!

முதுமை இளமையின் கண்ணாடி

முதுமை குழந்தையின் மறுஉருவம்!

இளமையில் ஆடும் ஆட்டத்திற்கேற்ப

முதுமையில் ரன் குவிக்கப்படும்!

எல்லோருக்கும் ஒளிதர

தன்னை உருக்கிக் கொள்ளும்

மெழுகுவர்த்தி போல

எல்லோரையும் ஏற்றிவிட்டுத்

தேய்ந்த பின்னும்

ஓய்ந்து போகா படிக்கட்டு!

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக! (அல்குர்ஆன் 17:23)

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24.)

முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள்.

முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது.

முதுமையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற புலன் சார் தொழிற்பாடுகளில் குறை ஏற்படலாம். ஆயினும் பல முதியவர்கள் ஒரு புலன் உணர்வில் குறை ஏற்படுகிறபோது ஏனைய புலன்களில் அதிகம் தங்கி இருந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் இயக்கம் தொடர்பான வேகம் முதுமையில் குறையத்தான் செய்யும். அதே நேரம் புலன் இயக்கக் குறைபாடுகளும் தசை இயக்க வேகத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கண்பார்வை குறையும் போது நடக்கும் வேகம் குறைவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் பல முதியவர்கள் பொருத்தமான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் இயக்கம் சார் குறைபாடுகளைப் பெருமளவு குறைத்துக்கொள்கின்றனர்.

முதியவர்களில் பெரும்பான்மையினருடைய நுண்மதி ஈவு குறையாதிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். சிலரிடத்தில் இது தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. முதுமையில் நுண்மதி ஈவு குறைந்து வருமாயின் அது உடல் நலக் குறைவு, இயங்காதிருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவே அமையும் சிறந்த கல்வி அறிவைப் பெற்ற ஒருவர் தொடர்ந்து வருவாய் ஈட்டக்கூடியவராயும் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவரது நுண்மதி குறையும் வாய்ப்பு மிக அரிது.

இத்தகைய முதியவர்கள் தமது மனதுக்கான பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனது மூளையை ஒருவர் தொடர்ந்து பாவித்து வருகின்றபோது அவரது அறிவாற்றல் செயற்பாடுகள் குறைந்துபோவது அபூர்வம். இதற்கு மறுதலையாக முதியவர் ஒருவரின் அறிக்கைசார் தொழிற்பாடுகளில் திடீர் வீழ்ச்சி அவதானிக்கப்படுமாயின் அவர் ஒரு பெரிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவு அது என்றே கொள்ளலாம்.

ஆயினும் அறிக்கைத் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வேகம் குறையும் தன்மை முதுமையில் மிகச் சாதாரணமாக அவதானிக்கப்படலாம். இது நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற சில மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது. பல இயக்கங்களின் இணைவும் இசைவாக்கமும் தேவைப்படுகின்ற தொழிற்பாடுகளில் வினைத்திறன் குறைவு எதிர்பார்க்கப்படலாம். உதாரணமாக ஒரு சிக்கலான புதிரை விடுவிப்பது கடினமாகலாம். அதே போல ஏறத்தாழ ஒரே நேரத்தில் பல விடயங்களைக் கையாளுவதிலும் கஷ்டங்கள் இருக்கலாம்.

முதுமை வரும்போது நீண்டகால ஞாபகத்தில் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாதிப்பிற்கும் கல்வித் தகைமைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய விடயங்களைக் கற்று ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் ஒப்பீட்டளவில் குறை காணப்படவே செய்யும். முன்பு தெரிந்து வைத்திருந்த விடயங்களை மூளையில் இருந்து மீட்டெடுப்பதும் பல சமயங்களில் கடினமாக இருக்கலாம். சில விடயங்கள் முற்றாகவே மறக்கப்பட்டுப் போகலாம். ஒரு காலத்தில் நன்றாகத் தெரிந்த பெயர்களும் முகங்களும் கூட எழுபது வயதில் மறக்கப்பட்டுப் போவதை மிகச் சாதாரணமாக அவதானிக்க முடியும்.

முதுமை இறைவனின் பேரருள்:

ஒருவர் பெற்றிருந்த மொழி அறிவும், கணித அறிவும் முதுமையிலும் குறைந்து போவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே முதியவர்கள் பலர் எழுதும் நூல்கள் மிகச் சிறப்பாகவே அமைவதைப் பார்க்கலாம்.

அதேபோல ஒருவரின் வாழ்நாளில் இயல்பாகப் பெற்றுக்கொள்ளும் திறன்கள் முதுமையில் குறைந்து போவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமையல் செய்யக்கூடிய அம்மா, முதுமையிலும் ருசியாகச் சமைப்பார். அழகாக ஓவியம் செய்யக்கூடியவரின் திறன் முதுமையில் சரிந்து போவதில்லை.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது முதுமையிலும் சாத்தியமானதாகவே இருக்கிறது. எண்பது வயதிலும் புதிய பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவோரை இன்று முன்னரை விட அதிகமாகவே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, அவர்களுக்கு மிக ஆர்வமான ஒரு துறையில் கற்கிறபோது கற்றலில் அவர்கள் சங்கடப்படுவதில்லை.

ஆக்கத்திறனுடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை முதுமை காரணமாக எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால், குடும்பப் பிரச்சினைகள், நிறுவனப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் முதியவர்கள் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கக்கூடியவர்கள். ஆலோசனை வழங்கும் தொழில்களில் அவர்கள் உன்னதம் பெறுவதற்கு இந்த விளக்கம் போதுமானது.

ஒருவருடைய கற்பனைத் திறனும், கலையாக்கத் திறனும் முதுமையில் குறைவதில்லை. அதனால் தான் கலைஞர்கள் முதுமையிலும் போற்றப்படத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

செய்யத்தக்கவை எவை?

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும். ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.

தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். இந்த ஆளுமையோடும் அவர்களிடமுள்ள ஆற்றல்களோடும் அவர்கள் தொடர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு சும்மா இருப்பதற்கு அவர்கள் விடப்படக்கூடாது. பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது கூட ஒரு பயனுள்ள, மிகப் பயனுள்ள பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இன்று சராசரியாக 75 வருடங்களுக்கு மனிதன் வாழ்கிறான். சில சமூகங்களில் குறிப்பாக இந்த வாழ்வுக் காலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மன நெருக்கீடுகள் குறைவான கிராமிய வாழ்வு முறையும். மொத்தக் கலோரி அளவும் விலங்குக் கொழுப்பும் குறைந்த உணவுப்பழக்கமும், மாசடையாத சூழலும், வயது முதிர்ந்தோருக்கு மரியாதை கொடுக்கும் கலாசாரம் அங்கு இருப்பதை வரையறை செய்துள்ளன. ஆகவே, எமது நாட்டிலும் அத்தகைய ஒரு சூழலில் முதியோரை வாழச் செய்தல் நன்று.

மறுதலையாக, புகைத்தல், மது பாவனைப் பழக்கம், போதைப் பொருள் பாவனைப் பழக்கம், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொள்ளல் அல்லது மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றித் தாமாக மருந்துகளைப் பெற்றுக் குடித்தல், பதற்றம் நிறைந்த சூழலில் வாழ்தல் போன்றன முதியோருக்குக் கேடு விளைவிக்கும். அவர்களின் வாழ்வுக் காலத்தைக் குறைக்கும் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சலிப்பைப் போக்க உதவும் சிறந்த மருந்தாகும். அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை.

எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஓமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் ‘ட்ராலி’யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக ஆயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில்,

எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!