தன் இறப்பில் ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய உண்மை! Print
Thursday, 15 December 2016 08:59

தன் இறப்பில் ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய உண்மை!

''மக்களால் நான்..
மக்களுக்காகவே நான்..''

மிகைப்பட தெரிந்தாலும்,  சந்தனப் பேழையில் உடல் வைத்து மூடியபிறகு டிவியில் திரையில் வந்த இந்தக் குரல் இதயத்தைப் பிழிந்தது என்றால் மிகையல்ல.

எதையுமே திட்டமிட்டு உறுதியோடு வெற்றி பெற்றே வந்த இவர் தோற்றது இந்த ஒன்றில்தான்.

எனக்கென்று யாருமில்லை என மேடைகளில் அவர் முழங்கியதை பொய்யென்று நிரூபித்திருக்கிறது இன்றைய தமிழகம்.

எதிர்க் கட்சிகளில் கூட தன்னை நேசிப்பவர்கள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டார்.

தன் இறப்பினில் கூட ஒரு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் நமக்காக.

எவ்வளவு பணமிருந்தாலும்,

எத்துணை பெரிய பதவியில் இருந்தாலும்...

பிள்ளைகளே.. பெற்றோர்களே.. மருமகள்களே.. மாமியார்களே.. அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே.. அத்தை மாமாக்களே.. சித்தி சித்தப்பாக்களே.. தம்பி தங்கைகளே.. இன்னும் மீதமிருக்கும் அனைத்து உறவுகளே...

ஓடுங்கள்.. ஏதாவதொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உங்கள் இரத்த உறவுகளை நோக்கி ஓடுங்கள். இருக்கும் காலத்திற்குள் பகையழித்து இணைந்து வாழுங்கள். உறவின் வலிமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனென்றால்.. தன் வாழ்க்கை துணிவுடன்  வாழ்ந்து காட்டிய இவராலேயே.. உறவுகள் உடனில்லாத காரணத்தால் தனது கடைசி 75 நாட்களை என்னவென்று கூட அறிய முடியவில்லை.

உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை. தரையில்தான் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

உங்களுக்கும் இந்நிலை வேண்டாம். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் காக்க மட்டுமல்ல.. உயிர் உணர்த்தவும் இரத்த உறவுகள் தேவை.

இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்.

இதோ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்று...

''எவருக்கு எல்லா பேறுகளின் வளமும், நீண்ட ஆயுளும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அவர் உறவுடன் ஒட்டி வாழட்டும்.''

அனைத்து வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எவருக்கத்தான் ஆசையிருக்காது?

இதோ இறைவேதம் அல்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்;

''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)' (திருக்குர்ஆன் 103 : 1-3)