அரசியல் மேடைகளாக்கப்படும் புனித இஃப்தார் நிகழ்வுகள் Print
Sunday, 12 June 2016 19:36

அரசியல்  மேடைகளாக்கப்படும்   புனித இஃப்தார்  நிகழ்வுகள்

      முஹம்மது நியாஸ்      

[ இறைவனின் திருப்தியை, இறைவனிடமிருந்து மாத்திரம் கிடைக்கபெறுகின்ற கூலியை விடுத்து மக்களின் திருப்திக்காக, மக்களுடைய அங்கீகாரத்திற்காக அரங்கேற்றப்படுகின்ற அமல்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்;

''மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை மக்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை மக்கள் பார்க்கும்படிச் செய்திடுவான். மறுமையில் அதற்குரிய கூலி அவனுக்கு இருக்காது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் இந்த வணக்க வழிபாடுகள் தொடர்பில் நல்லுபதேசம் புரிய வேண்டிய உலமாக்களே இவ்வாறான அரசியல் இலாபம் தேடுகின்ற இஃப்தார் நிகழ்வுகளில் முதல் வரிசையில் அமர்ந்து சிறப்பித்து அரசியல்வாதிகளுக்கு முன்னால் தங்களது நிமிர்த்தமுடியாத வால்களை அசைத்துக்காட்டுகின்ற அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் தொடர்ந்தும் அரசியல் அரங்கத்தில் ஈனப்பிழைப்பு நடாத்தி வருகின்ற நயவஞ்சக நாடகதாரிகளை மக்கள் இனங்கண்டு கொள்ளுதல் வேண்டும். அந்த அதிகாரவாதிகளின் நயவஞ்சக செயற்பாடுகளுக்கு மறைவிலிருந்துகொண்டு மகுடி வாசிக்கின்ற உலமாக்கள் என்னும் பெயரில் உலாவருகின்ற பல்முக வேடதாரிகளை இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும்.]

அரசியல்  மேடைகளாக்கப்படும்   புனித இஃப்தார்  நிகழ்வுகள்

இஃப்தார் என்பது ஒரு ஒப்பற்ற இறை வணக்கமாகும். ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பதென்பது இறைவனிடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரிய, சிறப்புக்கள் பல பொருந்திய இறைவணக்கமாகும்.

ஆனால் இன்று இந்த இஃப்தார் நிகழ்வுகள் அரசியல்வாதிகளினால் மிகவும் நலிவடைந்த, இம்மையிலோ மறுமையிலோ எதுவித பயன்களுமற்ற ஓர் பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. இறைவனுக்காக மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டிய இந்த இஃப்தார் என்னும் பாரிய நற்செயலானது அரசியல்வாதிகளின் சுயலாப நோக்கங்களுக்காக அரங்கேற்றப்படுகின்ற அவல நிலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களது அரசியல் எதிர்காலத்தின் சமூக அங்கீகாரத்தினை பரீட்சிப்பதற்கு ஏற்ற ஒரு பொறிமுறையாக இந்த இஃப்தார் நிகழ்வுகளை பயன்படுத்துவது கவலைக்குரியதாகும். தாங்கள் நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளில் பங்கேற்கின்ற நபர்களை கணக்கிட்டு அதன் மூலம் அப்பிரதேசத்தில் தன்னகிருக்கின்ற அரசியல் செல்வாக்கினை மதிப்பிடுகின்ற செயல்முறையாக இஃப்தார் நிகழ்வுகள் இன்று உருமாற்றமடைந்துள்ளன.

அதேபோன்று இந்த புனிதமிக்க இஃப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் தேர்தலில் தமக்கு இருக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையினை கணக்கிடுவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு கணக்கெடுப்பாகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சாதாரண ரமழான் காலங்களில் ஒரு அரசியல்வாதி அவருடைய பிரதேசத்தில் இருக்கிறாரா, இல்லையா என்ற செய்தியை கூட நாம் அறியமுடியாது. ஆனால் அதுவே தேர்தல் காலத்தில் ஒரு ரமழான் வந்துவிட்டால் உடனே கடற்கரை மற்றும் பொதுமைதானம் போன்ற பொது இடங்களை தேர்வுசெய்து, பொது மக்களை ஒன்றுதிரட்டி பொதுவான இப்தார் நிகழ்வு நடாத்துவது வழமையாகிவிட்டது.

அந்த இஃப்தார் நிகழ்வில் கூட நோன்புடைய, ரமழான் மாதத்தினுடைய சிறப்புக்கள் உரையாற்றப்படுவதில்லை. நம்மை கடந்து செல்கின்ற ரமழான் மாதத்தின் புனிதத்துவம், ஒரு நோன்பாளியை நோன்பு திறப்பதற்கு உதவி செய்வதன் மகத்துவம் இங்கே அணுவளவும் ஞாபகமூடப்படுவதில்லை. மாறாக தேர்தலில் பொதுமக்கள் ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற மேடைகளாகவே இந்த இஃப்தார் அரங்குகள் காணப்படுகின்றன. சரிந்துபோன தன்னுடைய வாக்குவங்கிகளை சரிப்படுத்திக்கொள்வதற்காக உள்ளமும் நாவும் கூசாமல் கடைந்தெடுத்த பொய்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் புனிதமிக்க மாதத்தில் அள்ளிவீசுகின்ற, இறைவனின் சாபத்துக்குரிய செயற்பாடுகள் அனைத்தையும் அரங்கேற்றுகின்ற ஜனரஞ்சக மேடைகளாகவே இந்த இப்தார் மேடைகள் அமையப்பெறுகின்றன.

இன்னும், இவ்வாறான இஃப்தார் நிகழ்வில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களைக்கூட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்ற குறித்த அரசியல் கட்சிசார்ந்த அடிவருடிகளும் ஜால்றாக்களும் அதையொரு தேர்தல் வெற்றி(?)க்கான அடையாளமாச் சின்னமாகக் காண்பிக்கிறார்களே தவிர அந்த இஃப்தார் என்னும் இறைவணக்கத்தை அழ்ழாஹ்வின் பொருத்தத்தை பெறக்கூடிய ஒரு நற்செயலாக சித்தரிப்பது பூஜ்ஜியமாகவே காணப்படுகிறது.

“இதோ நமது தலைவர் வென்று விட்டார், அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நமது தலைவர்தான், மக்கள் பிரதிநிதிகள் நாமேதான்” என்பன போன்ற இறைவனின் ஆற்றலையும் நாட்டத்தையும் மறந்த பலதரப்பட்ட கோஷங்களுடன் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கூடவே எதிர்க்கட்சிகளின் மீது வசைமாரிகளும், வன்முறை கலந்த தொனியிலான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது.

இவ்வாறான இஃப்தார்களில் அல்லாஹ்வின் அருள் இருக்குமா?

இந்த இஃப்தார்களால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்துகொள்ள முடியுமா?

இவ்வாறு இறையச்சம் என்பது இம்மியளவும் இல்லாது அல்லாஹ்வின் மார்க்கத்திளும் வல்லமையிலும் கையாடல் செய்து ஆட்சிக்கு வருகின்ற அதிகாரவாதிகள் நாளை இந்த சமூகத்திற்காக எவ்வாறு பாடுபடப்போகிறார்கள்?

ஆட்சிக்கதிரையை பிடிப்பதற்காக இதுபோன்ற இறைவணக்கங்களைக் கூட எள்ளிநகையாடுபவர்கள், இறைவணக்கத்தை பெயருக்கும் புகழுக்கும் மாத்திரம் அரங்கேற்றுபவர்கள் நாளை அதிகாரங்களை பொறுப்பேற்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் எவ்வாறு அல்லாஹ்வுக்கு பயந்து மக்களுக்கு சேவையாற்றப்போகிறார்கள்?

இதில் இன்னும் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் இந்த வணக்க வழிபாடுகள் தொடர்பில் நல்லுபதேசம் புரிய வேண்டிய உலமாக்களே இவ்வாறான அரசியல் இலாபம் தேடுகின்ற இஃப்தார் நிகழ்வுகளில் முதல் வரிசையில் அமர்ந்து சிறப்பித்து அரசியல்வாதிகளுக்கு முன்னால் தங்களது நிமிர்த்தமுடியாத வால்களை அசைத்துக்காட்டுகின்ற அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

ரமழான் மாதத்தினுடைய, நோன்பு என்னும் இறை வணக்கத்தினுடைய சிறப்புக்களை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டிய மௌலவிமாரகளே இன்று அரசியல்வாதிகளின் இவ்வாறான உலகாதாயம் கருதிய படாடோப இஃப்தார்களுக்கு மார்க்க சாயம் பூசி அவற்றுக்கு இஸ்லாமிய அங்கீகாரம் வழங்குகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கும் உந்து சக்திகளாக இருந்துவருகின்றனர்.

இறைவனின் திருப்தியை, இறைவனிடமிருந்து மாத்திரம் கிடைக்கபெறுகின்ற கூலியை விடுத்து மக்களின் திருப்திக்காக, மக்களுடைய அங்கீகாரத்திற்காக அரங்கேற்றப்படுகின்ற அமல்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை மக்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை மக்கள் பார்க்கும்படிச் செய்திடுவான். மறுமையில் அதற்குரிய கூலி அவனுக்கு இருக்காது. (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆகமொத்தத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகபட்ச புனிதமும் பல சிறப்புக்களும் பொருந்திய இறைவணக்கமான இஃப்தார் நிகழ்வுகள் சமூகத்தின் வழிகாட்டிகளான உலமாக்களாலும் சமூகத்தின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளாலும் தேர்தல் கால அரசியல் மேடைகளாகவே காட்சி மாற்றம் பெற்றுள்ளன என்ற வேதனையான செய்தியை இங்கே அழுத்தமாகப்பதிவு செய்கிறேன்.

எனவே, இதுபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் தொடர்ந்தும் அரசியல் அரங்கத்தில் ஈனப்பிழைப்பு நடாத்தி வருகின்ற நயவஞ்சக நாடகதாரிகளை மக்கள் இனங்கண்டு கொள்ளுதல் வேண்டும். அந்த அதிகாரவாதிகளின் நயவஞ்சக செயற்பாடுகளுக்கு மறைவிலிருந்துகொண்டு மகுடி வாசிக்கின்ற உலமாக்கள் என்னும் பெயரில் உலாவருகின்ற பல்முக வேடதாரிகளை இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும்.

இன்னும் இதுபோன்ற செயற்பாடுகளால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கையாடல் செய்து தங்களின் காலாவதியாகிப்போன அரசியல் இருப்புக்களை காப்பீடு செய்துகொள்வதற்காக தொடர்ந்தேச்சையாக எத்தனித்து வருகின்ற இந்த செல்வாக்கிழந்துபோன அரசியல்வாதிகளை “வாக்களித்தல்” என்னும் பேராயுதத்தை பயன்படுத்தி சமூக மட்டத்திலிருந்து நிரந்தரமாகவே ஒதுக்கி ஓரங்கட்டுவது ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகளை பயன்படுத்துதல் அவசியமாகும்.

source: https://srilankanmuslim.wordpress.com/2015/07/14/%e0%ae%a4%e0%af%87%