இதயத் தூய்மை Print
Monday, 31 October 2016 07:06

இதயத் தூய்மை

      எம். ஐ. அப்துல் அஜீஸ்     

[ இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்

இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள் ]

பயிற்சிக்கும் தர்பியத்துக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. தகுதி படைத்த மனிதர்களை வார்த்தெடுப்பதுதான் தர்பியத்தின் முதன்மை நோக்கமாகும்.

நம்மை நாமே சுய மதிப்பீடு செய்யும்போது நாம் இதில் பின்தங்கி இருக்கின்றோம் என்கிற உணர்வு மேலிட வேண்டும். அதுதான் தர்பியத்துக்கான முதல் படி ஆகும். தனி மனிதர்களின் தர்பியத்துடன் ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தர்பியத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

தர்பியத் என்றால் என்ன? இதயத்தைச் செம்மைப்படுத்துவதற்குப் பெயர்தான் பயிற்சி, தஸ்கியா, தர்பியா!

இதயத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறித்து குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல இதயம் எப்படி இருக்கும் என்பதையும் குர்ஆன் விவரித்துள்ளது. கெட்ட இதயம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.

தீய செயல்களின் காரணமாக இதயங்கள் கறை படிந்து போகும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.

“மாறாக உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் இதயங்களில் படிந்துவிட்டிருக்கின்றது” (திருக்குர்ஆன் 83;14)

எவர்கள் வரம்புமீறுகின்றார்களோ அவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விடும். அவர்கள் வழிகாட்டுதல் பெற மாட்டார்கள்.

“இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்” (திருக்குர்ஆன் 10;74)

இறுகிப்போன இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.

“படிப்பினை தருகின்ற சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுக்கள் பொங்கி எழுகின்றன. இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்-டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை” (திருக்குர்ஆன் 2;74)

இதே போன்று குருடாகிப்போன இதயங்கள் என்றும் குர்ஆன் இவர்களைக் கண்டிக்கின்றது.

“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்-திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக் கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே. உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகின்றன” (திருக்குர்ஆன் 22;46)

நயவஞ்சக நடத்தைக்கு வித்திடுவதும் இதயம்தான். நோயுற்ற இதயம் என குர்ஆன் எச்சரிக்கின்றது.

“எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 2;10)

சிந்தித்துணராத இதயங்களைக் கொண்டவர்களை அலட்சியம் தொற்றிக் கொள்ளும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.

“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்-வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்-பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்-பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” (திருக்குர்ஆன் 7;179)

வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்துகொள்வதால்தான் இதயத்தை நோய் தொற்றிக் கொள்கின்றது என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.

“எனவே, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்” (திருக்குர்ஆன் 9;77)

இறைவனை நினைவு கூர்கின்ற இதயங்களை மென்மையான, மிருதுவான இதயங்கள் எனக் குர்ஆன் வர்ணிக்கின்றது.

“அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கின்றது. பின்னர் அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன” (திருக்குர்ஆன் 39;23)

அல்லாஹ்வை நினைவுகூர்வதில்தான் மன நிம்மதி இருக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.

“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன” (திருக்குர்ஆன் 13; 28, 29)

இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு பரிவும் கருணையும் நிறைந்த இதயம் கிடைக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது .

“மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம்” (திருக்குர்ஆன் 57;27)

தூய்மையான உள்ளங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.

“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால் எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர” (திருக்குர்ஆன் 26; 88, 89)

அல்லாஹ்வின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகிவிடுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (திருக்குர்ஆன் 57;16)

இறைநினைவால் நடுநடுங்கிப்போகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகிறது.

“மேலும், (நபியே) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக. அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன.” (திருக்குர்ஆன் 22; 34, 35)

அல்லாஹ்வின் பக்கம் அதிகமாக மீளுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.” (திருக்குர்ஆன் 50;33)

இதயங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணி இறைத்தூதர்கள் செய்த பணி ஆகும். இதயத் தூய்மை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டும் முக்கியமானவை. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை ;

(1) நோய்கள், பலவீனங்கள், குறைகள் ஆகியவற்றை நீக்குதல்.

(2) நன்மைகள், நலங்கள், நிறைகள் ஆகியவற்றை செழித்தோங்கச் செய்தல்.

எந்தவிதமான கசடோ, குப்பையோ, களங்கமோ இல்லாத இதயம்தான் தேவை.

எத்தகைய ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இம்மிளவுகூட வளைந்து கொடுக்காத, தயங்காத, தடுமாறாத வீரஞ்செறிந்த இதயம்தான் தேவை.

எந்தவிதமான சந்தேகத்துக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகாத, தடுமாறாத உள்ளம்தான் தேவை.

பொய், பகட்டு, வஞ்சகம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான இதயம்தான் தேவை.

இதயத்தூய்மைக்கு அடிப்படைகளாக இரண்டைச் சொல்லலாம். இந்த இரண்டையும் வளர்த்துக் கொள்வதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.

முதலாவதாக, அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது அதீத அன்பு செலுத்துகின்றவர்களாய், படைத்தவனின் மீது பேரன்பு கொண்டவர்களாய், கருணை மிக்க இறைவனின் மீது பற்று வைத்திருப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும். “அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள்” என்கிற உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாகவும் வலுவானதாகவும் இறைத்தொடர்பு இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுமைக்கே முன்னுரிமை தருதல் வேண்டும். உலக இலாபங்களைவிட மறுமை இன்பங்களுக்கே முன் னுரிமை தருகின்ற மனப்பக்குவம் நமக்கு இருத்தல் வேண்டும். அற்பமான, குறுகிய கால உலக இன்பங்களை விட நீடித்த, நிலையான, முடிவே இல்லாத மறுமை நலன்களுக்கு முன்னுரிமை தருகின்றவர்களாய் நாம் மாற வேண்டும்.

உலகத்தை விட மறுமைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருகின்ற இந்தப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாம் தாஃகூத்துக்கு அடிமையாகிப் போவோம்.

மறுமையைவிட இந்த உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தில் முடியும். இத்தகைய மனிதர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகும். அவர்களைப் பயங்கர வேதனை சூழ்ந்துகொள்ளும்.

எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். (திருக்குர்ஆன் 16 ; 106)

இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்

நான்கு பலவீனங்கள் இதயத்தைப் பாதிக்கும். அவற்றைக் குறித்து விழிப்புடன் இருந்து அவற்றிலிருந்து விலகி இருத்தல் அவசியமாகும். இதயத்தூய்மை குறித்து கவலைப்படுகிற அனைவரும் இந்தப் பலவீனங்களைத் துறப்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

1) டென்ஷன். இதுதான் முதல் பலவீனம். டென்ஷன் அடைதல் இதயத்தைப் பாதிக்கும். எப்போதும் எந்நேரமும் எதைக்குறித்தாவது டென்ஷன் அடைவது. பிரச்னைகளை நினைத்து நினைத்து பதற்றமடைவது. பணிகளை எண்ணிப் பார்த்தும் செய்ய வேண்டிய பணிகளை நினைத்துப் பார்த்தும் டென்ஷன் அடைதல். இவையெல்லாமே இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து நம்முடைய கவனத்தைச் சிதறச் செய்துவிடும்.

2) பிஸியாக இருப்பது. எப்போதும் பிஸியாக இருப்பதும் ஆபத்தானதே. எப்போதும் தொழில், வணிகம், பணி, பணம் என்று ஆலாய்ப் பறப்பது. எந்நேரமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது. அந்த ஒற்றை இலக்குடன் இருபத்தினான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பது. ஒருவர் காலையில் 6.30 மணிக்கு கடையைத் திறப்பார். இரவு 11.30 மணி வரை கடையே கதி எனக் கிடக்கின்றார் எனில், எப்போதும் பிஸியாக இருக்கின்றார் எனில் அதனால் என்ன நன்மை? காலையில் 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 வரை உழைத்தால்தான் வெற்றியா? வேறு எதற்கும் நேரம் இல்லாத வகையில் பிஸியாக இருப்பது இதயத்தூய்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி விடும்.

3) சுய பச்சாதாபம் கொண்டு வருந்துதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். ஒருவர் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்துள்ள தொல்லைகள் குறித்தும், தான் சந்தித்து நிற்கின்ற பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய கஷ்டங்கள் குறித்தும் நினைத்து நினைத்து வருந்துகின்றார் எனில் அவருடைய இதயம் தொல்லைகளாலும் பிரச்னைகளாலும் கஷ்டங்களாலும் நிறைந்துவிடும். பிறகு இதயத்தூய்மைக்கு ஏது வாய்ப்பும் நேரமும்?

4) ஆசை. ஆசை. ஆசை. அதிகமாக ஆசைப்படுதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். நிறைவேறாத ஆசைகளாலும், கனியாத ஏக்கங்களாலும், மோசம் போன எதிர்பார்ப்புகளாலும் சின்ன சின்ன ஆசைகளாலும் பெரிய பெரிய ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஒருவருடைய இதயம் நிறைந்திருக்கின்றது எனில், இதயத்தூய்மைக்கு வழி ஏது?

இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள்.

1) முதலாவதாக அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும். அல்லாஹ் தடுத்தவற்றிலி ருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும். குறிப்பாக ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும்.

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்: ‘ஒருவர் பாவம் செய்கின்ற போது சின்னதாக கரும்புள்ளி ஒன்று பதிந்துவிடுகின்றது. அவர் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் பாவம் செய்து அதிலேயே திளைத்திருப்பாரெனில் அந்தக் கரும்புள்ளி அடர்த்தியாக அவருடைய இதயம் முழுவதையும் சூழ்ந்துகொள்கின்றது’.

எனவே அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். குறிப்பாக ஹராமான சம்பாதியத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஹராமான வருமானத்தாலும் ஹராமான உணவுப் பொருள்களை விழுங்குவதாலும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஹராமான வருமானமும் உணவும் மனிதனின் நிம்மதியைப் பறிக்கக் கூடியவையாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கின்றது. ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்தில் ஜமாஅத் உறுப்பினரின் பொறுப்புகளாக எட்டு பொறுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பொறுப்புகள் ஹராமான வருமானத்திலிருந்து விலகி இருப்பது தொடர்பானைவையாகும்.

o ஷரீஅத்தில் ‘மாஸீயத்தே ஃபாஹிஷாஹ்’* எனும் பிரிவுக்குள் வரும் வரு-மான வழிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படினும் சரியே! மேலும் சம்பாத்தியத்-தில் இப்படிப்பட்ட வருமா-னத்தின் ஒரு பகுதி கலந்து விட்டது என்றால், அந்தப் பகுதியை விட்டும் சம்பாத்தியத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

o ஹராமான (விலக்கப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பான) முறையில் ஈட்டப்-பட்ட பணம் அல்லது சொத்து அவருடைய கைவசமிருப்பின். அதனைக் கைகழுவி விட வேண்டும். ஆனால், அந்தச் சொத்தோ பணமோ பிரித்தறிய முடியாத அளவுக்கு மொத்த சம்பாத்தியத்தில் இரண்டறக் கலந்து விட்டிருந்-தால், இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

o  மற்றவருக்குச் சொந்தமான அல்லது மற்ற-வருக்குச் சேர வேண்டிய சொத்திலிருந்தோ பணத்-திலிருந்தோ ஒரு பகுதியையோ அல்லது பல பகுதி-களையோ பறித்து அவற்றை அவர் தம்முடைய சொத்திலோ பணத்திலோ சேர்த்துக் கொண்டிருந்-தால் உடனடியாக அவர் அவற்றைத் தனியாகப் பிரித்-தெடுத்து அவற்றை அவற்றுக்கு உரியவரி-டம் திருப்பிக் கொடுத்து விட வேண்-டும். உரிமை-யாளர் யார் எனத் தெரியும்போதும் அவரிட-மிருந்து பறிக்கப்பட்ட சொத்து அல்லது பணம் இன்னதுதான் எனத் தெளிவாக அடையாளம் காண முடிகிற போதும்தான் இவ்வாறு உரியதை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பது சாத்தியமா-கும். இல்லையெனில் இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம் பாகம் 2; பிரிவு 8 (3,4,5)

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹராமான சம்பாத்தியத்தின் பாதிப்பை நபிமொழி ஒன்றில் விவரித்துள்ளார். ‘ஒருவர் நீண்ட தொலைவு பயணம் செய்து வருகின்றார். இறைவனைத் தொழுகின்றார். இறைவனை நினைவுகூர்கின்றார். மனம் உருக அழுது அரற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். ஆனால் அவர் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமான சம்பாத்தியத்தி-லிருந்து பெறப்பட்டது. அவர் உண்ட உணவு ஹராமான சம்பாத்தியத்திலிருந்து பெறப்பட்-டது எனில் அவருடைய முறையீடு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?.’

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் தஸ்கியத்துன் னஃப்ஸ் இதயத் தூய்மை என்பது இதயத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியதாகும்.

2) அடுத்ததாக, குர்ஆனுடன் தொடர்பு ஆழமானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும். நாள்தோறும் குர்ஆன் ஓத வேண்டும். பொருள் புரிந்து வாசிக்க வேண்டும். குர்ஆன் தருகின்ற செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக முயல வேண்டும்.

குர்ஆனுக்கு அபாரமானதோர் சக்தி உண்டு. அதுதான் இதயத்தையே மாற்றிவிடுகின்ற, புரட்டிப்போட்டுவிடுகின்ற சக்தி. இதயத்தையே செம்மைப்படுத்திவிடுகின்ற ஆற்றல் குர்ஆனுக்கு உண்டு.

எனவே எப்பாடுபட்டாவது நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் அதன் மொழிபெயர்ப்பையும் விளக்கவுரையையும் வாசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தைப் பிழிந்தெடுத்து குர்ஆனை ஓதுவதில் செலவிட வேண்டும்.

3) அடுத்ததாக இஹ்திஸாப். இதயத்தூய்மைக்கு இஹ்திஸாபே நல்மருந்து. சுய மதிப்பீடும் சுய ஆய்வும் முக்கியமானவை. உளத்தூய்மையுடன் அன்றாடம் இரவு படுக்கப் போகு முன் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்துகின்ற காலம் அது.

கலீஃபா உமருக்கு ஒரு பழக்கம். தன்னுடைய இரவுப் பொழுதுகளை மூன்று பகுதிகளாய்ப் பிரித்து ஒன்றை மக்கள் குறை தீர்ப்பதற்கும் அடுத்ததை இறை வழிபாட்டுக்கும் மூன்றாவதை ஓய்வுக்கும் ஒதுக்கி வந்தார் உமர் ரளியல்லாஹு அன்ஹு.

இரவில் மக்கள் குறைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர்வலம் போவதையும் வழக்கமாய் வைத்திருந்தார் கலீஃபா உமர்(ரலி).

இவ்வாறு ஒரு நாள் இரவு வேளையில் நகர்வலம் கிளம்பிய போது அஸ்லம் ரளியல்லாஹு அன்ஹு என்கிற நபித்தோழரையும் தம்முடன் அழைத்துச் சென்றார் உமர் ரளியல்லாஹு அன்ஹு. இருவரும் மதீனத்து வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு மஸ்ஜிதுன் னபவியை அடைந்தனர். ஒய்வு எடுத்துவிட்டு இரவின் கடைசிப் பகுதியை இறைவழிபாட்டில் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

களைத்துப் போயிருந்த அஸ்லம் படுத்த மாத்திரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.

ஆழ்ந்த நித்திரையில் இருந்த அஸ்லம் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
என யாரோ கடுமையான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

விருட்டென்று எழுந்தார் அஸ்லம். அமீருல் முஃமினினை இந்த இரவு வேளையில் திட்டுபவர் யாரோ என அறிந்து கொள்ளவும் ஒரே வீச்சில் அவரைப் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசையிலும் அஸ்லம் பாய்ந்தார்.

ஆனால்-

அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
எனக் கடுமையான குரலில் விமர்சித்துக் கொண்டிருந்தது உமர் ரளியல்லாஹு அன்ஹு   அவர்களே தாம்.

அந்த அகால வேளையில் மதீனத்து மாநகரமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு தன்னைத்தானே சுயமதிப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருந்த காட்சியைத்தான் அஸ்லம்ரளியல்லாஹு அன்ஹு கண்டார்.

இதே போன்று ரோம சாம்ராஜ்யம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு பெரும் அளவில் பொற்குவியல்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன.

அந்தப் பொற்குவியலைப் பார்த்து உமர் ரளியல்லாஹு அன்ஹு கர்ஜிப்பார்; “ஒருபோதும் உன்னால் என்னை ஏமாற்றிவிட முடியாது. என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை மாற்றிவிடுகின்ற ஆற்றல் உனக்குக் கிடையாது. என்னுடைய வாழ்வு போய்க் கொண்டிருக்கின்ற திசையை மாற்றிவிடுகின்ற சக்தி உனக்கு இல்லை. இந்தப் பொற் குவியலால் எனக்குள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது.’
இந்த மாதிரியான இஹ்திஸாப் - சுய மதிப்பீடுதான் நமக்குத் தேவை.

4) வழிபாடுகளில் கவனம் வேண்டும். மூன்றாவதாக, வழிபாடுகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிறைய பணிகளில் ஈடுபடுகின்றோம். தனிப்பட்ட அளவிலும் கூட்டு முறையிலும் நாம் நிறைய நற்செயல்களைச் செய்கிறோம். என்றால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இறுதியில் மறுமை நாளில் நாம் இறைவனுக்கு முன்னால் தனித்தனியாகத் தான் நின்று கணக்கு காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

வழிபாடுகளில் கவனமும் அக்கறையும் செலுத்தும்போது வாழ்க்கை செம்மைப் படுத்தப் படும். வழிபாடுகள் சடங்குகள் ஆகிவிடக் கூடாது.

நம்முடைய தொழுகைகள் எப்படி இருக்கின்றன?

‘தொழும்போது இறைவன் நம்மைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத் தெளிவுடன் தொழ வேண்டும் என்று அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுறுத்தி இருக்கின்றார். அல்லாஹ்-வுடன் நாம் செய்கின்ற உரையாடல்தான் தொழுகை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தொழுகைக்காக நிற்கின்ற போதும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி கைகளைக் கட்டிக் கொள்கின்ற போதும் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் மனத்தை விலக்கிவிட்டு மனம் ஒருமுகப்பட்ட நிலையில் தொழ வேண்டும்.

தொழுகை எப்படி அமைந்தன என்பதைக் குறித்து இரவில் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

தொழுகையை மேம்படுத்துவதற்காக வேண்டி தொழுகைகளுக்கு ஏ, பி, ஸி என படித்தரங்களைக் கொடுக்கின்ற வழக்கத்தை நாங்கள் எங்களுடைய பகுதியில் அறிமுகப் படுத்தினோம்.

ஒருமுறை இந்தப் படித்தரங்கள் பற்றி ஊழியர் கூட்டத்தில் விவாதித்தோம். அப்போது ஒரு ஊழியர் சொன்னார். ‘தொடக்கத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. மனம் ஒன்றித் தொழுதேன். தரம் மேம்பட்டது. ஆனால் காலப்போக்கில் தொழுவதற்காக நிற்கின்ற போதே இந்தத் தொழுகை ஏ கிரேடு தொழுகை, பி கிரேடு தொழுகை என மனத்திற்குள் பற்பல சிந்தனைகள் வந்துவிடுகின்றன’ என்று புலம்பினார் அவர்.

எனவே தொழுகையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொழுகையில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடை இயக்கச் செயல்பாடுகளில் நமக்கு ஆர்வம் நிலைப்பதற்கும், ஊக்கத்துடனும் உற்சாகமாகவும் நாம் பணியாற்றுவதற்கும் தஸ்கியத்துன் னஃப்ஸ் பெரிதும் உதவும்.

5) இதயத்தூய்மைக்காக துஆ. இதயத்தூய்மைக்காக இறைவனிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு முறை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அழுகின்ற சத்தம் கேட்டு எழுந்தார்.

யாரென்று பார்த்தால் அண்ணல் நபிகளாரே அழுது கொண்டிருந்தார். அப்போது ‘என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி பிரார்த்தித்துக கொண்டிருந்தார் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

இஸ்லாமிஸ்டுகளின் மிகப்பெரும் ஆயுதம் இறைத்தொடர்பும் பிரார்த்தனையும்தாம். இந்த இரண்டின் மூலம் நாம் இந்த வாழ்விலும் வெற்றி பெற முடியும் மறுமையிலும் நற்பேறுகளை ஈட்டிக் கொள்ள முடியும். அல்லாஹ் நல்லருள் செய்வானாக.
ஆமின்.

8 செப்டம்பர் 2012 அன்று சென்னையில் நடந்த மாநில உறுப்பினர் முகாமில் எம். ஐ. அப்துல் அஜீஸ் ஆற்றிய உரை..!

தமிழில் : சையத் சுல்தான்
தொகுப்பு : அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

https://azeez-luthfullah.blogspot.in/2012/09/blog-post.html