Home குடும்பம் இல்லறம் நல்ல மனைவி என்பவள்...

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

நல்ல மனைவி என்பவள்... PDF Print E-mail
Monday, 07 December 2020 07:30
Share

நல்ல மனைவி என்பவள்...

(விசுவாசத்தையும் பாசத்தையும் கற்பித்த

ஒரு நல்ல மனைவியின் உண்மைச் சம்பவம்)

மரணத்தருவாயில் இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூத்த மகனை அழைத்து,

"மகனே! நான் வேறொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வசிக்கின்றாள். இது தான் அவளது முகவரி. அவள் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்விடம் என் பொறுப்பு நீங்க வேண்டும்." என்று தன் மனதிலுள்ளதைத் தெரிவித்துவிட்டு இறையடி சேர்ந்தார்.

சில நாட்களின் பின்னர் சொத்துப்பங்கீடு செய்யவேண்டியிருந்தது.

ஆனால் அதற்கு முன்னர் தந்தையின் பிலிபைன்ஸ் மனைவியை அழைத்து வரவேண்டிய தேவையுமிருந்தது.

மூத்த மகன் பிலிபைன்ஸ் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கு பயணமானார். மிகக் கஷ்டத்தின் மத்தியில் அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார். அந்த வீடு சாதாரண வீட்டையும் விட மோசமாக இருந்தது. மார்க்க அடையாளங்களுடன் பெண்ணொருவர் வந்து கதவைத் திறந்தார்.

இருவரும் அறிமுகமாகிக் கொண்டதன் பின் தான் வந்திருக்கும் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார் மகன்.

அந்தப் பெண் சவுதி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இருவரும் ரியாதை வந்தடைந்தனர்.

சொத்தும் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் பிரகாரம் பங்கீடு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்குரிய பங்காக சுமார் எட்டு லட்சம் ரியால்கள் கிடைத்தன.( இன்று இலங்கை மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்).

மக்கா சென்று உம்ராவை நிறைவேற்ற வேண்டுமென்று மூத்த மகனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் அந்தப் பெண். மகனும் ரியாதிலிருந்து உம்ராவுக்காக அழைத்துச் சென்றார். அதன்பிறகு ஜித்தாவில் இருந்து பிலிபைன்ஸ் நோக்கிப் புறப்பட்டார் அந்தப் பெண்.

சுமார் நான்கு வருடங்கள் கடந்திருக்கும். தன் தாயின் அந்தஸ்திலுள்ள அப்பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மூத்த மகன் பிலிபைன்ஸுக்கு மீண்டும் சென்றார். குறித்த வீட்டை அடைந்தவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வீடு உள்ளேயும் வெளியேயும் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. சொல்லப் போனால் இருந்ததைவிட மோசமாக மாறியிருந்தது.

"உங்களுக்குக் கிடைத்த பணம் எங்கே? இந்த வீட்டை கொஞ்சமாவது திருத்தியிருக்கலாமே!" என்று அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மகன் அப்பெண்ணிடம் கேட்டே விட்டார்.

அதற்கு பதிலேதும் கூறவில்லை. மாறாக மகனை அழைத்துக்கொண்டு ஓர் இடத்துக்குச் சென்றார். அங்கே அல்குர்ஆன் மனனம், மார்க்க வகுப்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிய நிலையமொன்று கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

"மேலுள்ள பெயர் பலகையைப் பார்" என்றாள்.

அதில் அவரது தந்தையின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

"உன் தந்தையின் பெயரில் இதனை உருவாக்கி அவருக்காக 'ஸதகா ஜாரியா' வாக நன்கொடை செய்துள்ளேன்." என்றார் அப்பெண்.
வந்த அழுகையை மகனால் அடக்க முடியவில்லை. தன் தந்தை மீதான அப்பெண்ணின் உண்மையான அன்பையும் பாசத்தையும் பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்.

அப்பெண்ணுக்கு முன்னால் மகன் என்ற வகையில் தான் தோற்றுவிட்டதை உணர்ந்து அழுதார்.

மகனால் கொஞ்ச நேரமும் அங்கிருக்க முடியவில்லை. உடனடியாக நாட்டுக்குத் திரும்பியவர் அன்றிரவே தன் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து தான் பிலிபைன்ஸில் கண்ட காட்சியை ஒன்று விடாமல் ஒப்புவித்தார்.

சகோதரர்கள் அனைவரும் சுமார் ஐந்து மில்லியன் ரியால்களை தமக்கு மத்தியில் சேர்த்தனர்.

அதன் மூலம் தம் தந்தையின் பெயரில் பல நல்ல விடயங்களை செய்வதற்கு உறுதி பூண்டனர்.

பாசத்தையும் விசுவாசத்தையும் கற்பித்த நல்ல மனைவி.

உலகை விட மறுமையை நேசித்த உண்மையான மனைவி.

கணவன் மனைவி உறவானது புனிதமானது. அந்த உறவை உண்மை, விசுவாசம், அன்பு போன்றவை அலங்கரிக்க வேண்டும்.
அதை நாம் களங்கம் செய்யக்கூடாது.

மனைவியின் உரிமைகளை கணவன் வழங்க வேண்டும். கணவனுக்குரிய கடமைகளை மனைவி செய்யவேண்டும்.

இல்லற வாழ்வு இனிக்க இருவரும் சில உணர்வுகளை தியாகம் செய்யவேண்டும். விட்டுக்கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் இல்லறத்தின் சுவடுகள் மரணித்தின் பின்னரும் ஒளிரும்.

பிள்ளைகள் பெற்றோரை மரணித்த பின்னும் மறந்து விடக்கூடாது.

கருவில் சுமந்த தாய்க்கும் கல்பில் சுமந்த தந்தைக்கும் நாம் எதைச் செய்தாலும் ஈடாகாது.