Home செய்திகள் ஒரு வரி சிலவரிச் செய்திகள்-01 09 2009
சிலவரிச் செய்திகள்-01 09 2009 PDF Print E-mail
Tuesday, 01 September 2009 12:39
Share

பெங்களூர்: அனைத்து குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை முதன் முதலாக கர்நாடகத்தில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி நியக்கப்பட்டுள்ளார். அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பொதுமக்கள் விமானங்களை பார்வையிடுவதற்காக, பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவுக் கட்டணம் உண்டு. இந்த வசதியை பயன்படுத்தி விடுமுறை நாள்களில் மக்கள் குடும்பத்துடன் சென்று விமானம் வந்து, செல்வதை கண்டுகளித்தனர். இந்நிலையில் விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் பார்வையாளர் மாடம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இத்தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூயார்க்: இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் 84 வங்கிகள் மூடப்பட்டன. இது கடந்த ஆண்டில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு இதே காலத்தில் 25 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன.

டோக்கியோ: ஜப்பானில் 54 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயகக் கட்சி 308 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் நாடாளுமன்ற கீழ் அவைக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சாதனை அளவாக 69.28 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இத் தேர்தலில், மொத்தமுள்ள 480 இடங்களில் ஜப்பானிய ஜனநாயகக் கட்சிக்கு 308 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 119 இடங்களும் கிடைத்தன. கடந்த நாடாளுமன்றத்தில் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 303 உறுப்பினர்களும், ஜப்பானிய ஜனநாயகக் கட்சிக்கு 112 உறுப்பினர்களும் இருந்தனர். மேலைநாடுகளிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஒருசேர அளித்திருக்கும் தேர்தல் முடிவுகள், ஜப்பானின் பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

 

ரேஷன் அட்டை தணிக்கை: வீட்டில் ஆள் இல்லாவிட்டால்...

சென்னை: ரேஷன் அட்டை தணிக்கை வீடுவீடாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தணிக்கை ஊழியர்கள் தணிக்கை செய்ய வரும்போது குடும்ப அட்டை (அசல்), 18 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு அட்டை, கேஸ் இணைப்பு புத்தகம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு வட்டத்தில் உள்ள தெருவில் குறைந்தது 4 நாள்கள் ஊழியர்கள் தணிக்கைப் பணியை மேற்கொள்வார்கள். தணிக்கைக்கு ஊழியர்கள் வரும் போது வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது.

அப்படிச் செல்லும் ரேஷன் அட்டைதாரர்கள் மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ தணிக்கையாளரை சந்தித்து தனது நிலையைக் கூறலாம்.

அவர், சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரரின் வீட்டுக்கு நேரில் செல்வார். தணிக்கை செய்யப்பட்டதற்கு அடையாளமாக ரேஷன் அட்டையின் கடைசிப் பக்கத்தின் மேல்பகுதியில் 100 சதவீதம் தணிக்கை என எழுதி அவர் சுருக்கொப்பம் இட வேண்டும்.

தணிக்கைக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, குடும்ப அட்டைதாரர் அல்லது குடும்ப அட்டையில் வயது வந்த உறுப்பினரிடம் மட்டுமே கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை பெற வேண்டும்.

வீட்டில் எப்போதும் ஆள் இல்லாவிட்டால்... எப்போதும் ஆள் இல்லாமல் வீடு பூட்டிக் கிடந்தால், அந்தத் தகவலை தணிக்கையாளர்கள் குறித்துக் கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஒட்டப்படும் அறிவிப்பில், "வீடு பூட்டி இருந்தது' எனக் குறிக்கப்படும்.

இதை அறிந்து, சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர், மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று மீண்டும் தணிக்கை மேற்கொள்ளப்படும்.

மனுதாரர் உண்மையான தகவலைக் கொடுத்தார் என்பது தெரிந்தால், ரேஷன் அட்டையில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்ட உடன் உடனடியாக அவருக்கு ரேஷன் அட்டை திருப்பி அளிக்கப்படும்.

புதிய கார்டுகள் இல்லை... ரேஷன் அட்டைகளை முறைப்படுத்தும் பணி நடைபெறும் காரணத்தால், அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தணிக்கையின் போது, பெறப்படும் தகவல்கள் ரேஷன் அட்டையை முறைப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு யாருக்கும் புதிய அட்டைகள் வழங்கப்பட மாட்டாது' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர் விண்ணப்பிக்கலாம்

மதுரை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடையாள அட்டை புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, பழைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.15 செலுத்தி, சிறிய அளவிலான புதிய அடையாள அட்டையை பெறலாம்.

இதேபோல் பட்டியலில் பெயர் இருந்தும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக புகைப்படம் எடுத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். இவற்றை பெறுவதற்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்தில், Ô001சி- படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும்.

இந்த படிவத்தை தேர்தல் அதிகாரி, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஆராய்ந்து ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்புவார். ஆர்.டி.ஓ.வின் உத்தரவை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு புகைப்படம் எடுத்து, புதிய அட்டை வழங்கப்படும். இன்று (-) முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது.