Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் முன்சென்ற அறிஞர்கள்
முன்சென்ற அறிஞர்கள் PDF Print E-mail
Tuesday, 28 July 2020 07:07
Share

முன்சென்ற அறிஞர்கள்

         அபூ மலிக்         

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; இஸ்லாத்தின் அடிப்படையும் அது தான். நல்ல விடயத்தில் கூட அளவு கடந்து விடக் கூடாது என்பதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை.

சில விடயங்களைப் பகிரங்கத்தில் பேசுவது கொள்கை சகோதரர்களுக்கு இடையில் பிணக்குகளை உருவாக்கலாம் எனும் அச்சத்தில் அவற்றை நான் பகிரங்கத்தில் எழுதாமல் இதுவரை தவிர்த்து வந்தேன்.

ஆனால், இனியும் அப்படி இருக்க முடியாது. “மன்ஹஜுஸ் ஸலஃப்” எனும் பெயரில் ஒரு “ஸலஃபி மத்ஹபையே” உருவாக்கிக் கொண்டு, அதை ஏனையோருக்கும் கட்டாயமாகத் திணிக்க முயலும் ஒருசில சகோதரர்களது அலப்பறை வரம்பு மீறிச் சென்று கொண்டிருப்பதால் வேறு வழியில்லாமல் சில விடயங்களை இங்கு போட்டு உடைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இஸ்லாம் என்பது தெளிவான, எளிமையான, புரிய இலகுவான மார்க்கம். இதன் மூலாதாரங்கள் இரண்டு தான். ஒன்று குர்ஆன்; மற்றது ஹதீஸ்.

இந்த இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொள்ளச் சொல்லி மட்டுமே நபியவர்கள் இறுதியாக எச்சரித்தார்கள். மூன்றாவதாக ஒன்றையும் சேர்த்துப் பற்றிப் பிடிக்குமாறு அல்லாஹ்வோ, தூதரோ சொன்னதில்லை.

இந்த அடிப்படையில், மார்க்கத்தின் போதனைகளையும் சட்டங்களையும் ஒரு முஸ்லிம் புரிய முயற்சிக்கும் போது, எப்போதும் அவற்றை குர்ஆன் / ஹதீஸ் ஆகிய இரண்டின் தொகுப்பிலிருந்தே புரிய ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு முயற்சிக்கும் போது யாருக்காவது சிரமம் ஏற்பட்டால், மேலதிகத் தெளிவுகளுக்காக ஸஹாபாக்கள், மற்றும் இமாம்களது விளக்கங்களையும் துணைக்கு எடுத்துக் கொள்வது சிறந்தது.

இன்னொரு விதத்தில் கூறினால், ஒரு விடயம் குறித்த இஸ்லாத்தின் நிலைபாட்டைப் புரிய விரும்பும் ஒருவர், அது குறித்த குர்ஆன் / ஹதீஸ் ஆதாரங்களையெல்லாம் முடிந்த வரை தொகுத்தெடுத்து, அந்தத் தொகுப்பிலிருந்து நிலைபாட்டை நேரடியாகப் புரிய முயற்சிப்பதே முதல் நிலை. இந்த முதல் நிலையில் போதிய தெளிவை அடைய முடியாமல் ஒருவர் திண்டாடும் பட்சத்தில், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் / அரிஞர்களின் கருத்துக்கள் வாயிலாக அதைப் புரிய முயற்சிக்கலாம்.

சுருங்கக் கூறினால், குர்ஆன் / ஹதீஸ் எனும் மூலாதாரங்களிலிருந்து ஒன்றை நேரடியாகப் புரிய முயற்சிக்க ஆரம்பித்த பிறகு, இரண்டாம் நிலையில் தான் அறிஞர்களின் புரிதல்களைத் துணைக்கு எடுக்க வேண்டுமே தவிர, எதற்கெடுத்தாலும் அறிஞர்கள் சொன்னதில் இருந்தே அனைத்தையும் புரிய ஆரம்பிக்க வேண்டும் எனும் தலைகீழ் நிலைபாடு ஆபத்தானது.

இவ்வாறான தலைகீழ் நிலைபாடுகளின் விளைவாகவே சூஃபி தரீக்காக்கள், ஷீயா பிரிவுகள், காதியானி / முஃதஸிலா போன்ற இயக்கங்கள், தப்லீக் போன்ற ஜமாத்துக்கள், மத்ஹபுகளைக் கண்மூடிப் பின்பற்றும் கலாச்சாரங்கள் போன்ற குழப்பங்கள் அனைத்தும் இந்த உம்மத்தில் தோன்றின.

மேற்கூறப்பட்ட பிரிவினர் ஒவ்வொருவரும் தத்தம் பார்வைக்கேற்ப நேர்வழி பெற்ற அறிஞர்கள் / பெரியார்கள் என்று தாம் நம்பும் சில அறிஞர்களது புரிதல்களை வைத்து மட்டுமே இஸ்லாத்தைப் புரியவும், கற்கவும் வேண்டும் என்று அடம்பிடித்துக் கிளம்பியவர்கள் தாம்.

இதே போன்று பிடிவாதம் பிடிக்கும் தவறைத் தான் இன்று ஸலஃப் மன்ஹஜ் எனும் பெயரில் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

எதற்கெடுத்தாலும், “இதை முன்சென்ற அறிஞர்கள் சொல்லியுள்ளார்களா? அப்படி யாரும் சொல்லவில்லையென்றால், நீங்களாக நேரடியாக குர்ஆன் ஹதீஸிலிருந்து ஒரு விடயத்தைப் புரிய முயற்சிப்பது வழிகேடு” என்றெல்லாம் தீர்ப்புக் கூறும் ஒரு “ஸலஃபி மத்ஹப்” கலாச்சாரம் இன்று பரவி வருவதைப் பார்க்க முடிகிறது.

ஸலஃப் மன்ஹஜ் என்பதை நான் அதிகம் மதிக்கிறேன். மார்க்கத்தைப் புரிவதற்காக இன்று உலகில் இருக்கும் அணுகுமுறைகளுள் மிகவும் சிறந்ததோர் அணுகுமுறையாகவே ஸலஃப் மன்ஹஜை நானும் கருதுகிறேன்.

இந்த அடிப்படையில், பெரும்பாலான மார்க்க நிலைபாடுகள் குறித்த விடயங்களில் எனது கருத்துக்களை விடவும், ஸலஃப் அறிஞர்களின் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவமும் கொடுத்தும் வருகிறேன்.

ஆனால், அதற்காக நூற்றுக்கு நூறு முன்சென்ற அறிஞர்களின் அங்கீகாரம் பெற்ற பின்பு தான் எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்க வேண்டுமென்ற நியதிக்கு என்னால் கட்டுப்பட முடியாது. அப்படிக் கட்டுப் பட்டால், மத்ஹப் பக்தர்கள், ஜமாத் பக்தர்கள், இயக்க பக்தர்கள் போன்றோரது அணுகுமுறைக்கும் எமது அணுகுமுறைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

எதற்கெடுத்தாலும், முன்சென்ற அறிஞர்கள் முதுகில் தொங்கும் சகோதரர்களே, முதலில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

குர்ஆனை எளிய நடையில் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக விளக்கும் நோக்கத்துக்காகவே ஹதீஸ்களை அல்லாஹ் அருளியுள்ளான். நபியை முன்மாதிரியாக்கி ஸுன்னாவை அல்லாஹ் அருளியதே முஸ்லிம்கள் ஸுன்னாவை நேரடியாக அணுக வேண்டும் என்பதற்காகத் தான்.

இதற்கு மாற்றமாக, குர்ஆனுக்கும் நமக்கும் இடையில் ஏதாவதொரு தஃப்ஸீரை இடைத்தரகராக நிறுத்தி, “இந்த தஃப்ஸீர் பிரகாரம் மட்டுமே குர்ஆனைப் புரிய வேண்டும்” என்று வற்புறுத்துவதும், ஹதீஸுக்கும் நமக்கும் இடையில் யாராவது சில அறிஞர்களை இடைத்தரகர்களாக நிறுத்தி, “இந்த அறிஞர்களது விளக்கப் பிரகாரம் மட்டுமே ஹதீஸ்களைப் புரிய வேண்டும்” என்று வற்புறுத்துவதும் அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத வழிமுறைகள்.

“குர்ஆனை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று திருமறையில் பல இடங்களில் அல்லாஹ் கேட்டிருப்பது சராசரி மனிதர்களைப் பார்த்துத் தான்; அறிஞர்களை மட்டும் விளித்துக் கேட்ட ஒரு கேள்வி அல்ல இது.

இதே போல் “குர்ஆனை விளங்கப் படுத்துவதற்கே நபியை அனுப்பியுள்ளேன்” என்று கூறியிருப்பதும் அதே அல்லாஹ் தான். (அல்குர்ஆன் 3:164)

இதன் அர்த்தம் என்ன?

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனை நேரடியாக வாசித்து, அதை சிந்தித்துப் புரிய முயற்சிக்க வேண்டும்; அப்படி சிந்திக்கும் போது நபியின் விளக்கங்களை (ஹதிஸ்களை) வைத்தே அதைப் புரிய முயற்சிக்க வேண்டும். இதைத் தானே இங்கு அல்லாஹ் கூறியுள்ளான்?

குர்ஆனை நீங்கள் சிந்தியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால், ஒவ்வொருவரும் அதை நேராக அனுகினால் தானே அவராகவே அதைச் சிந்திக்க முடியும்? அது தானே இதன் அர்த்தம்?

ஆக, ஹதீஸின் துணையோடு குர்ஆனை நேரடியாகவே அணுகும் அனுமதியை இங்கு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வே தந்திருக்கும் போது, யாராவது இடையில் புகுந்து, “அப்படியெல்லாம் முடியாது, இன்னின்ன முன்சென்ற அறிஞர்கள் வாயிலாக மட்டுமே அணுக வேண்டும்” என்று சொன்னால், அவரை என்னவென்று சொல்வீர்கள்? சிந்தியுங்கள்.

இந்த அடிப்படையில், மார்க்கத்தைப் புரிவதற்காக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முன்னிறுத்தி பின்வரும் ஒழுங்கையே நான் கடைப்பிடிக்கிறேன்:

ஒரு விடயம் குறித்த மார்க்க நிலைபாட்டை அறியும் போது, அது குறித்த குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீஸ்கள் அனைத்தையும் முடிந்த வரை தொகுத்துக் கொள்வேன். தொகுப்பின் மொத்தக் கருத்தையும் உள்வாங்கி, அதிலிருந்து வெளிப்படும் இறுதியான கருத்தை வைத்து, அதிலிருந்தே நிலைபாட்டை அடைய முயற்சிப்பேன். இதில் ஏதும் மேலதிக சந்தேகம் ஏற்பட்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் உத்தரவாதம் வழங்கப்பட்ட, இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்களது தஃப்ஸீர் விளக்கங்களையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வேன். அதுவும் போதாமல் போனால், நபியின் உத்தரவாதம் பெற்ற முதல் மூன்று தலைமுறை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களது விளக்கங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பேன். அதுவும் போதாமல் போனால், இறுதியாக இமாம் இப்னு தைமிய்யா போன்ற முஜத்தித்களது விளக்கங்களையும் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்வேன்.

நானறிந்த வரை இஸ்லாத்தைப் புரியும் சரியான ஒழுங்கு இது தான்.

இந்த ஒழுங்குக்குத் தலைகீழாக, எடுத்த எடுப்பிலேயே ஏதாவது சில இமாம்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் படி தான் குர்ஆன் / ஹதீஸ் அனைத்தையும் புரிய வேண்டும் எனும் ஒழுங்கை ஏற்க நான் தயாராக இல்லை. காரணம், இந்தத் தலைகீழ் அணுகுமுறையின் விளைவாகவே குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் பல சமூகத்தவர் தூரமக்கப் பட்டு வழிகேட்டிலும் தள்ளப் பட்டார்கள்.

எனது இந்த நிலைபாட்டுக்கு அமைய, சில விடயங்களை குர்ஆன் / ஹதீஸ் வெளிச்சத்தில் நேரடியாகப் புரிந்து நான் எழுதும் போது, உடனே அதற்கெதிராகத் தீர்ப்புச் சொல்லக் கிளம்பி வரும் சில ஸலஃபி மத்ஹப் பக்தர்கள் சொல்லி வைத்தாற்போல் எப்போதும் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?

“நீங்கள் சொல்லும் இந்தக் கருத்தை முன்சென்ற அறிஞர்களில் யாராவது சொல்லியுள்ளனரா? அல்லது உங்களது சொந்த அபிப்பிராயத்தில் எழுதுகிறீர்களா?” என்பது தான் அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வியைக் கேட்கும் அனைவருக்கும் எனது பதில் இது தான்:

எனது சொந்த அபிப்பிராயத்தில் எதையும் எழுத இஸ்லாம் ஒன்றும் எனது அப்பன் வீட்டு சொத்து அல்ல. இது அல்லாஹ்வின் மார்க்கம். முன்சென்ற அறிஞர்களிலேயே மிகவும் தலைசிறந்த முதல் தர அறிஞர் சொன்ன விளக்கங்களை வைத்துதே நான் அனைத்தையும் எழுதுகிறேன். அந்த அறிஞர் பெயர் முஹம்மத் (ஸல்) அவர்கள். ஒரு முஸ்லிமுக்குத் தேவையான விளக்கங்கள் அனைத்தையும் அந்த அறிஞர் ஏற்கனவே தந்து விட்டார். அதையும் தாண்டி ஏதேனும் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் மட்டுமே நான் ஏனைய இமாம்களை நாடுவேன். ஆனால் அதை நான் கட்டாயமாக்கிக் கொள்ள மாட்டேன்.

இது ஒருபுறமிருக்க, இன்னும் சில சகோதரர்கள் என்னடா என்றால், “முன்சென்ற அறிஞர்கள் யாரும் சொல்லாத ஒரு விளக்கத்தை நீங்களாக குர்ஆன் / ஹதீஸிலிருந்து எடுக்கப் போக வேண்டாம். அப்படிச் செய்வது உங்களை வழிகேட்டில் தள்ளி விடும். அப்படிச் செய்யப் போனதால் தான் பீஜே போன்ற பலர் கூட வழிகெட்டார்கள். எனவே, முன்சென்ற அறிஞர்களது அங்கீகாரம் இல்லாத எதையும் சொல்லாமல் இருப்பதே பாதுகாப்பு” என்று வேறு பூச்சாண்டி காட்டுவதையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் இதுவும் ஓர் அர்த்தமற்ற அச்சுறுத்தல் தான். இந்த அச்சுறுத்தல்களுக்கு யாரும் அஞ்ச வேண்டியதில்லை. இப்படியோர் அச்சுறுத்தலை இஸ்லாம் நமக்கு விடுத்ததும் இல்லை.

பீஜே வழிகெட்டது முன்சென்ற அறிஞர்களைச் சாராமல் சுயமாகச் சிந்தித்ததால் அல்ல. தனக்கு மட்டுமே சிந்திக்கத் தெரியும்; மற்றவனெல்லாம் கூமுட்டைகள் எனும் தனது ஆணவத்தின் விளைவாகவே பீஜே வழிகெட்டார். ஆணவக் காரர்கள் வழிகெட்டுப் போவது அல்லாஹ்வே வகுத்த ஒரு வழமை.

இதே போல், பீஜேயின் கூட்டத்தார் வழிகெட்டதற்குக் காரணம், “முன்சென்ற அறிஞர்களது” விளக்கங்கள் வாயிலாக மட்டுமே அனைத்தையும் புரிய வேண்டுமென்று உங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பது போலவே, “இக்கால அறிஞர்” என்று அவர்கள் கருதும் பீஜேயின் விளக்கங்கள் மூலம் மட்டுமே மார்க்கத்தைப் புரிய வேண்டுமென்று பீஜே கூட்டத்தார் அடம்பிடித்தது தான்.

சுருக்கமாகக் கூறினால், சில ஸலஃபி சகோதரர்கள் முன்சென்ற அறிஞர்களின் முதுகில் தொங்குவது போலவே பீஜே கூட்டத்தார் பீஜேயின் முதுகில் தொங்கியதும், அதற்காகப் பெருமைப் பட்டதுமே அவர்கள் சுயமாக குர்ஆன் / ஹதீஸை சிந்திக்காமல் வழிகெடக் காரணம்.

ஒருவனுக்கு மார்க்கத்தில் தெளிவு கிடைப்பதும், தெளிவிழந்து அவன் தடம்புரள்வதும் எந்த அறிஞரின் விளக்கத்திலும் தங்கியிருப்பதில்லை. ஒருவனது உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் உதிப்பிலேயே அவனது மார்க்கத் தெளிவு தங்கியுள்ளது.

யாருக்கு அல்லாஹ் தெளிவைக் கொடுக்க நாடுகிறானோ, அவன் குர்ஆனையும், ஹதீஸையும் நல்ல நிய்யத்தோடு அணுகும் போது, சரியான தெளிவை அல்லாஹ்வே கொடுக்கிறான். யாருக்கு தெளிவைக் கொடுக்க அவன் நாடவில்லையோ, அவன் எத்தனை ஆயிரம் முன்சென்ற அறிஞர்களது முதுகில் தொங்கினாலும் எந்தத் தெளிவும் கிடைக்கப் போவதில்லை. இது தான் மார்க்கத்தின் நியதி.

இந்த நியதிக்கு மாற்றமாக “மார்க்கத்தின் தெளிவு முன்சென்ற அறிஞர்களது விளக்கத்திலேயே தங்கியுள்ளது” என்று யாராவது சொன்னால், அவர் தக்லீத் எனும் வழிகேட்டைப் போதிக்கிறார் என்றே அர்த்தம். ஏனெனில், அல்லாஹ்வின் நேரடித் தலையீடு இல்லாமல் எந்த மனிதனாலும் இன்னொரு மனிதனுக்குத் தெளிவைக் கொடுக்க முடியாது.

இது போக, சிலர் விடயத்தில் எந்த முன்சென்ற அறிஞர்களது உதவியும் இல்லாமல் கூட அல்லாஹ் தெளிவைக் கொடுப்பதும் உண்டு.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஃகிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். ஃகிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு சாதாரண அடிமை என்றே அல்லாஹ் கூறுகிறான். அந்த சாதாரண மனிதருக்கு அல்லாஹ் கொடுத்த தெளிவும் ஞானமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு மகத்தானவையாக இருந்தன.

மார்க்கத்தில் தெளிவு என்பது அல்லாஹ்வின் வஹியையும், ஹிதாயத்தையும், ஈமானையும் மட்டுமே சார்ந்த ஒரு விடயம்; இறைத்தூதர்களைத் தவிர வேறெந்த மனிதரிலும் அந்தத் தெளிவு தங்கியில்லை என்பதைப் புரிந்து கொள்ள இதை விடவுமா ஓர் உதாரணம் வேண்டும்?

எனவே, தொட்டதுக்கெல்லாம் “முன்சென்ற அறிஞர்களது அங்கீகாரம்” என்று சும்மா எல்லை மீறி படம் காட்டுவதன் மூலம் மக்களைப் பயமுறுத்தி, அவர்களது சிந்தனையைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டாம். மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்.

மார்க்கத் தெளிவின் ஆரம்பம் என்பது ஈமான் தான். அந்தத் தெளிவை அல்லாஹ் வைத்திருப்பது குர்ஆன் / ஹதீஸ் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வஹியில் தான். அதிலிருந்து சரியான தெளிவை ஒருவர் அடைந்து கொள்ளவும், அதை மரணம் வரை தக்க வைத்துக் கொள்ளவும், இடையில் சறுக்கி வழிகேட்டில் விழுந்து விடாமல் காத்துக் கொள்ளவும் கேடயமாக நமக்கு உதவுவது தினமும் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனைகள் தான்; முன்சென்ற அறிஞர்களது விளக்கங்கள் அல்ல.

முறையான நிய்யத்தும், நேர்வழிக்கன பிரார்த்தனையும், ஆணவம் அற்ற உள்ளமுமே தெளிவுக்கு அத்தியாவசியமான அம்சங்கள். முன்சென்ற அறிஞர்களது விளக்கங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமான உதவிகள் மட்டுமே.

இதையும் தாண்டி, “அறிஞர்களைச் சார்ந்திருக்காவிட்டால் வழிகெட்டு விடுவீர்கள்” என்று பொய் கூறி நீங்கள் மக்களை வற்புறுத்துவீர்கள் என்றால், பின்வரும் எனது கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்:

கேள்வி 1:

மார்க்க நிலைபாடுகளில் அனேகமானவற்றில் முன்சென்ற அறிஞர்களுக்கிடையில் ஏகோபித்த கருத்து இல்லை. அவர்களுக்குள்ளேயே பாரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில அறிஞர்கள் ஒன்றை சரியென்று சொல்லும் போது, இன்னும் சில அறிஞர்கள் அதையே பிழையென்று வாதிடுவார்கள். இதில் எவர் சொல்வதை ஏற்று, எவர் சொல்வதை மறுக்க?

இதில் எந்த அறிஞர் சொல்வது சரி, எவர் சொல்வது பிழையென்பதை இங்கு தீர்மாணிப்பது யார்? நீங்களாகப் பார்த்து அதில் உங்களுக்குப் பிடித்த ஒரு நிலைபாட்டை நீங்களாகத் தானே தேர்வு செய்து கொள்கிறீர்கள்? இது மட்டும் மனோ இச்சை இல்லையா?

அறிஞர்களுக்கிடையே முரணான இரண்டு நிலைபாடுகள் இருக்கும் நிலையில், அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிலைபாடு தான் எப்போதும் சரியென்பதற்கு உங்கள் தரப்பில் இருக்கும் உத்தரவாதம் என்ன? ஒரு வேளை நீங்கள் தேர்வு செய்யாத மற்ற நிலைபாடு தான் சரியென்றால், என்ன செய்யப் போகிறீர்கள்?

இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்களோ, அதே பதில் குர்ஆன் / ஹதீஸை நேரடியாக அணுகி ஒரு நிலைபாட்டை சுயமாக எடுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் பொருந்தும். உங்களுக்கு வடியும் போது ரத்தம் மற்றவங்களுக்கு வடியும் போது சட்னி என்றெல்லாம் இங்கு சமாளிப்பது முறையாகாது.

கேள்வி 2:

தவ்ஹீதை விசுவாசிக்கும் அனைவருமே ஸூஃபி பிரிவுகள் அனைத்தையுமே வழிகேடு, ஷிர்க் என்று ஏகமனதாகப் பிரகடனம் செய்து வருகிறோம். ஆனால், ஸலஃப் மன்ஹஜின் தூண் எனும் அளவுக்கு மதிக்கப்படும் மாபெரும் முஜத்தித், எந்த ஸலஃபியும் மறுக்காத மாபெரும் அறிஞர், ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸூஃபிகளில் பெரும்பாலோரை நேர்வழி பெற்றவர்கள் என்றே கூறியுள்ளார்கள்.

பாயஸித் பஸ்தாமி, ஜுனைத் பக்தாதி, அப்துல் காதிர் ஜீலானி, மரூஃப் கர்கி, ஸிர்ரி ஸக்தி போன்ற பிரபலமான ஸூஃபி மகான்களையெல்லாம் பற்றிக் குறிப்பிடும் போது ஷெய்குல் இஸ்லாம் என்ன கூறுகிறாரென்று பாருங்கள்:

“இது போன்ற மகத்தான ஸூஃபிகள் மனித இனத்துக்கே தலைவர்களாவார்கள். மக்களை நன்மையின் பக்கம் அழைப்பதையும், தீமையிலிருந்து தடுப்பதையுமே இவர்கள் அனைவரும் செய்துள்ளார்கள்.”   - மஜ்மூ’ அல் ஃபத்தாவா இப்னு தைமிய்யா (கெய்ரோ: தாருர் ரஹ்மத் பதிப்பு) பாகம் 10, பக்கம் 516

இப்ப இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?

முன்சென்ற ஸலஃப் அறிஞர்களது விளக்கங்கள் மட்டுமே எனும் உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், முன்சென்ற அறிஞர்களிலேயே முதல் தர ஸலஃப் அறிஞர் கூறியிருக்கும் இந்தக் கூற்றையும் ஏற்று, ஸூஃபிகள் நேர்வழி பெற்றோர் என்று கூறப் போகிறீர்களா?

அல்லது, முன்சென்ற அறிஞர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், அவர்களுக்கும் சில வேளை சறுக்கலாம் என்று கூறி, உண்மையை ஒத்துக் கொள்ளப் போகிறீர்களா?

இதில் இரண்டாவது பதில் தான் உங்களது பதில் என்றால், அதே பதில் குர்ஆன் / ஹதீஸை நேரடியாக அணுகுவதன் மூலம் மார்க்கத்தைப் புரிய முயற்சிக்கும் ஒரு முஸ்லிமின் நியாயத்துக்கும் அச்சொட்டாகப் பொருந்தும். தக்காளி சட்னி வாதங்களால் இந்த உண்மையை மூடி மறைக்க முடியாது.

சாராம்சமாக இங்கு நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

ஸலஃப் வழிமுறையின் எதிரி அல்ல நான். அனேகமான விடயங்களில் நானும் ஸலஃபி தான். ஆனால், அதற்காக மார்க்கத்தைப் புரியும் போது முன்சென்ற அறிஞர்களது விளக்கங்கள் மட்டுமே எப்போதும் சரியானவை என்றோ, அவர்கள் மட்டுமே கதியென்றோ கூறுவதன் மூலம் சில மனிதர்களது விளக்கங்களில் மட்டுமே தங்கியிருக்க நான் தயாரில்லை. அது மார்க்கம் காட்டித் தந்த வழிமுறையும் இல்லை.

முன்சென்ற அறிஞர் எனும் அடிப்படையில் யாராவது ஒரு மனிதரது விளக்கத்தை நூற்றுக்கு நூறு வீதம் ஒருவர் சார்ந்திருப்பதென்றால், அப்படி சார்ந்திருக்கத் தகுதியான ஒரே அறிஞர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் தான். அன்னாரது நேரடி விளக்கங்களாக இருக்கும் ஹதீஸ்களைத் தவிர வேறெந்த அறிஞர்களது விளக்கங்களுக்கும் நூறு வீத உத்தரவாதம் இல்லை.

உத்தரவாதம் இல்லாத மனிதர்களது விளக்கத்தில் மட்டுமே இந்த உம்மத் தங்கியிருக்க வேண்டுமென்று யாராவது வற்புறுத்தினால், அவர் வழிகேட்டின் வாசலைத் திறக்கிறார் என்றே பொருள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன். அவனிடமிருந்து மட்டுமே எல்லாத் தெளிவுகளும் கிடைக்கின்றன.

- அபூ மலிக்

source: https://www.facebook.com/permalink.php?story_fbid=871946599848650&id=100010999545391