Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள்
மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள் PDF Print E-mail
Tuesday, 21 July 2020 07:42
Share

மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள்

      Sayed Abdur Rahman Umari       

ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும் பரினை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்.

‘மென்மையால் நிரம்பியவர், கருணையால் நிறைந்தவர்’ என இறுதித்தூதர் எம்பெருமானாரைப் பற்றி எடுத்துச்சொல்கின்றது, வான்மறை குர்ஆன்.
..
சில ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு ஒன்றை சரிபார்க்கும் பணி வந்தது. நானும் ஹாஃபிழ் முஹ்யுத்தீன் காஸிமி அவர்களும் சில அத்தியாயங்களை சரிபார்த்துக் கொடுத்தோம். ஹதீஸ் மொழிபெயர்ப்பாளர் எனும் அடைமொழியோடு கூடிய ஆலிம் பெருந்தகை ஒருவர் செய்திருந்த மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் கடினமானது மற்றவர்கள் பெயர்த்ததை சரிபார்ப்பது
.
இறைத்தூதரின் பல சொற்பிரயோகங்களுக்கு சரியான பொருளையும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லையும் தேடி வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருந்தது.

பல நபிமொழிகள் நம்பவேமுடியாத திகைப்பை ஏற்படுத்தின. நாங்கள் பணிசெய்யும் ‘அழகைப்’ பார்த்து பணியைக் கொடுத்தவர் திரும்பப் பெற்றுக்கொண்டார். 
.
மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்திய நபிமொழிகளில் ஒன்று இது!.

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

ஆனால் இதன் சரியான மொழிபெயர்ப்பை யாரும் தருவதில்லை.

‘தனது கரத்தாலும் நாவாலும் மற்றவர்களுக்கு எத்தொல்லையும் தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்’ என்றே மொழிபெயர்க்கிறார்கள்.

நன்கு கவனித்தீர்கள் என்றால் இந்நபிமொழியில் எதிர்மறைப் பொருள் தரும் சொல்லே கிடையாது. ‘ஸலிம’ என்னும் சொல்லையே ‘தொல்லையைத் தராதவர்’ என்கிறார்கள்.

‘ஸலிம’ என்றால் தொல்லையைத் தராதவர் என்றுதான் பொருள்படுமா? வேறு பொருள் இல்லையா?

ஸலிம என்றால் ஸலாமத்தைத் தருபவர் என்றுதானே இருக்கவேண்டும்?

அப்படியென்றால் ‘தனது கரத்தாலும் மொழியாலும் மற்றவர்களுக்கு அமைதியையும் மன நிம்மதியையும் தருபவர்’ என்பதுதான் சரியான பொருளாக அமையும்
.
ஆம், ஒரு நம்பிக்கையாளரின் இருப்பே அமைதிக்கான அடையாளமாக திகழவேண்டும். அவரது சொல்லும் செயலும் மற்றவர்களின் உள்ளத்தை வருடிக் கொடுக்கவேண்டும். வாக்கும் வாழ்க்கையும் மற்றவர் காயங்களுக்கு களிம்பாக அமைய வேண்டும்
.
அவரிடம் ஒரு வார்த்தை பேசினால் போதும். மனம் அமைதியாக விடுகின்றது. அவர் தருகின்ற ஆலோசனை மிகுபயன் அளிக்கின்றது.

அவரிடம் நம் துன்பங்களை மனம்விட்டு கொட்டிவிட வேண்டும். அதுவே போதும் என் துன்பங்கள் யாவும் ஆறிவிடும் என உங்களைப் பற்றி மற்றவர்கள் நினைக்கும் விதத்தில் நடந்து கொள்வதே உங்கள் ஈமானுக்கு அழகு சேர்க்கின்றது.
.
அடுத்தவர்களுக்கு ஒரு சிறு பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ‘தேவையற்ற’ தொல்லைகளை சம்பாதித்துக் கொள்வதைவிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவேண்டும்.

மற்றவர்களின் பாதிப்புகளுக்கும் துன்பங்களுக்கும் நீ காரணமாகி விடாதே!

மற்றவர்களின் பத்-துஆவை (எதிர் வேண்டுகோள்) ஒருபோதும் சம்பாதித்து விடாதே!

ஒவ்வொரு மனிதருக்கும் நல்லனவும் அல்லனவும் இன்பங்களும் துன்பங்களும் மற்ற மனிதர்களால் தான் விநியோகிக்கப் படுகின்றன.
.
‘மற்றவர்களுக்கு துன்பத்தையும் பாதிப்பையும் விநியோகிக்கும் அற்பர்களாக நாம் ஆகிவிடவே கூடாது!’
.,
அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ விரும்பினால் கொஞ்சம் துஆக்களை அன்றாடம் சம்பாதித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

அழகான வருமானம் அது! ஆஹா ...
.
ஒரு ஹிந்தி திரைப்படத்தில் ஏழைப்பங்காளனாக வரும் நாயகனுக்கு தங்களால் இயன்ற பொருட்களை கொண்டுவந்து தருவார்கள் தொழிலாளிகள்..

இந்த அன்பளிப்புகள் எல்லாம் எனக்கெதற்கு? என அவர் வினவுகையில் அவர்கள் தந்த பதில் இன்னும் என் நெஞ்சில் இருக்கின்றது
.
‘இவையாவும் தொஹ்ஃபாக்கள் (அன்பளிப்புகள்) அல்ல, எங்கள் துஆக்கள்’
.
உங்களால் ஒருவருக்கு ஒரு பாதிப்பு நேர்ந்தால் அதனால் அவர் அடைகின்ற அல்லல்கள், அவஸ்தைகள், பின்விளைவுகளை - அதே அளவு அல்லது அதற்கும் மேலாக - நீங்கள் சுமந்தே ஆகவேண்டும்.

வல்ல இறைவனின் மாறவே மாறாக இயற்கை நியதி இது!.
.
கொஞ்சம் துஆக்களையும் சம்பாதியுங்கள்

source: https://www.facebook.com/syed.umari.7