Home கட்டுரைகள் குண நலம் நிராகரிப்பை நிராகரியுங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத்
நிராகரிப்பை நிராகரியுங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் PDF Print E-mail
Saturday, 27 June 2020 19:22
Share

நிராகரிப்பை நிராகரியுங்கள்

    dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்    

மகிழ்ச்சிக்கான தேடலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே நிராகரிப்பு – போ. பென்னெட்

நிராகரிப்பு

மீண்டும் ஒரு முறை அவன் தான் எழுதிய கதையை எடுத்து வாசித்துப் பார்க்கிறான் அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுதியது தான்தானா என வியப்பாக கூட இருக்கிறது. மிக அருமையாக வந்திருக்கிறது. நிச்சயம் இது பல பரிசுகளை தனக்கு பெற்றுத் தரக் கூடும் அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மிக்க தன்னம்பிக்கையோடு அந்த பிரசுரத்திடம் தன்னுடைய கதையை கொடுக்கிறான். ஆனால் அது சுவற்றில் அடித்த பந்து போல பல விமர்சனங்களோடு பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளாமல் அவர்களால் நிராகரிக்கப் படுகிறது. அவன் சோர்ந்து போகிறான். அவன் நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைவதை அவனால் உணர முடிகிறது.

அந்த அலுவகத்தில் அல்லும் பகலும் உழைத்து சர்வதேச அளவிலான தன் பிராஜக்டை அவன் தன் மேலதிகாரியிடம் போய் கொடுக்கிறான். ஏதோ காரணம் சொல்லி அது ஏற்றுக் கொள்ளப் படாமல் அவனிடமே திருப்பித் தரப்படுகிறது. அவன் மனம் எதையோ இழந்ததை போல் தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறது.

இது போன்ற நிகழ்வுகளைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கிறீர்களா?

நிச்சயம் அனைவருமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிராகரிப்பை அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அது வெற்றியை நோக்கிய ஒரு மைல்கல் என்பதை மட்டும் பெரும்பாலும் பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில் நிராகரிப்பை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு வரம்.

ஓர்லாண்டோவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் ஆசிரியை அன்று வகுப்பிற்கு வரும்போது கை நிறைய பரிசுப் பொருட்களுடன் வருகிறார். ஆவலாகப் பார்க்கும் சிறுவர்களைப் பார்த்து அவர்கள் ஒவ்வொருவராக முன்னால் வந்து யாராவது ஒரு சிறுவனைப் பற்றி அவனிடம் உள்ள சிறந்த குணங்களைப் புகழ்ந்து கூற வேண்டும் என்று சொல்கிறார். முன்னால் வரும் சிறுவன் யாரைப் புகழ்ந்து சொல்கிறானோ அந்த சிறுவனை அழைத்து ஒரு பரிசை அவனுக்கு கொடுக்கிறார்.

இப்படி ஒவ்வொருவராக வந்து மற்ற சிறுவர்களைப் பற்றி புகழ்ந்து பேசப்பேச புகழப் பட்ட சிறுவர்களை அழைத்து ஒன்றொன்றாக தான் கொண்டு வந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். மகிழ்ச்சியும் சிரிப்புமாக கடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. அப்போது மூன்று சிறுவர்களைப் பற்றி மட்டும் யாருமே எதுவும் புகழ்ந்து கூறாமல் ஏனைய மாணவர்களால் அந்த மூவர் மட்டும் நிராகரிக்கப்பட்டு நிற்கிறார்கள்.

இப்படி ஒரு சூழலை எதிர்பார்க்காத ஆசிரியை, அந்த மூன்று மாணவர்களையும் அழைத்து அவர்களுக்கான பரிசுகளையும் கொடுத்து ஒரு மாதிரி சமாளித்து அனுப்புகிறார்.

ஆனால் நிராகரிக்கப் பட்ட சிறுவர்களில் ஒருவனுக்கு அது மிகவும் வலி மிக்க நிகழ்வாக ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. சிறுவனுக்கு அப்போது ஆறுவயது தான் இருக்கும் பள்ளியில் நடத்தப் பட்ட அந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் தான் மொத்தமாக நிராகரிக்கப் பட்டதாக உணர்கிறான். அப்போது அவனுக்கு வலித்தாலும் அது எதிர்காலத்திலும் தன் செயலாற்றலேயே கட்டுப் படுத்தக்கூடும் என அவன் சிறிதேனும் உணரவில்லை.

ஆனால் பின்னாட்களில் அவன் எந்த புதிய செயல்களைச் செய்ய முனைந்தாலும் அவனால் அதைச் செய்ய முடியாமல் தடுமாறும் போதுதான் அவனுக்கு ஒன்று புரிகிறது. சிறுவயதில் தான் நிராகரிக்கப்பட்ட வடு தன்னுள் மிக ஆழமாக புதைந்து கிடக்கிறது. நீ நிராகரிக்கப்பட்டு விடுவாய் கவனமாக இரு என அது தன்னை இரகசியமாக மிரட்டிக் கொண்டே இருக்கிறது என்பது அவனுக்கு பிடிபடுகிறது.

எங்கே தான் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமே தன்னை எதுவும் செய்யவிடாமல் தடுக்கிறது. சாதிக்க வேண்டும் எனும் தன் கனவுகளை எல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு சராசரியாக தன்னை வலம்வர செய்கிறது என்பதை உணர்கிறான்.

உடனே அவனுக்குள் ஒரு பொறிதட்டுகிறது. நிராகரிப்புகள் தரும் வலிகளை நிராகரிக்கப் பழகிக் கொண்டால் நிச்சயம் தன்னால் அதிகம் சாதிக்க முடியும் என எண்ணியவனாக தன்னையே rejection 100 days என ஒரு ஆய்வுக்கு உட்படுத்துகிறான். அதன்படி ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரிடம் ஏதோ ஒன்றை கேட்கிறான். அது நிராகரிக்கப் படுவதை தன் மனதின் திடத்திற்கு தான் அளிக்கும் ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்கிறான்.

முதல் நாள் தான் நிராகரிக்கப்படுவதை அவமானமாக கருதும் மனம் நாளடைவில் அதை சாதரணமாக, தன் முயற்சியின் வெவ்வேறு கட்டமாக எடுத்துக் கொள்ள அவன் அடுத்த முயற்சிகளைத் தொடர்கிறான். அது அவனுக்கு பல புதிய முயற்சிகளுக்கு வழி வகுக்கிறது. பல வெற்றிக் கதவுகளை திறக்கிறது. சாத்தியமில்லை என இதுவரை நினைத்தவற்றை எல்லாம் எளிதில் சாத்தியமாக்குகிறது.

அதாவது முதலில் நிராகரிப்பை மிக அவமானமாக கருதும் மனது அதை வலியில்லாமல் ஏற்றுக் கொண்டு நிராகரிப்பவர்களை எப்படி கையாள்வது என அடுத்த கட்டத்தைபற்றி உணர்கிறது. நிராகரிப்பை எமோஷனலாக இல்லாமல் தன் முயற்சியின் ஒரு கட்டமாகவும் தன் திறமைக்கான சவாலாகவும் எடுத்துக் கொள்கிறது. நிராகரிக்கப்பட்டவுடன் பெரும் அவமானத்தோடு அத்தனையையும் விட்டு விட்டு ஓட எத்தனிக்காமல் நின்று இது எனக்கானது இதை அடைய வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என லாஜிக்கலாக மனம் முயற்சிக்கிறது என்பதை தன் ஆய்வின்படி அவன் அறிகிறான்.

அந்த ஆய்வின் முடிவில் நிராகரிக்கப் பட்டவுடன் தான் முட்டாளாக நடந்ததாக தன்னைத் தானே நினைக்காமல் தன்னுடைய ஈகோ அடிபட்டதாக சுருண்டு போகாமல் உணர்ச்சி வசப்படாமல் தன் முயற்சியைத் தொடரும் போது அங்கு நீங்கள் நினைப்பதை சாதிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகின்றன.

நீங்கள் கேட்கக் கூடிய இடத்தில் கிடைக்கா விட்டால் கூட எங்கு கிடைக்கும் அல்லது வேறு எது கிடைக்கக் கூடும் என கூடுதல் தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று அறிந்து கொண்ட அவன் டாக்டர் David Boven, இன்று உலகின் முண்ணனி Rejection Therapist ஆக தன் வாழ்க்கையையே உதாரணமாக்கி நிராகரிப்பை நிராகரிக்க பலருக்கும் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் நிராகரிப்பை நிராகரிப்பால் சீர் செய்யுங்கள் எனும் அவர் ஆய்ந்து அறிமுகப் படுத்திய ‘ரிஜக்ஷன் தெரப்பி’ மேலை நாடுகளில் ரொம்பவே பிரசித்தம். Rejection Proof ஆக செயல் படும் இந்த தெரப்பி பல நிராகரிப்புகளுக்கு மனதை உட்படுத்தக் கூடிய ஒரு பயிற்சியாக செய்யப்படுவதால் பயிற்சியின் முடிவில் பெர்சனலாக சங்கடம் இல்லாமலே மனது நிராகரிப்புக்கு தயார் ஆகிவிடுகிறது.

அதனால் ஒருவரால் எந்த ஒன்றையும் கூச்சமோ அச்சமோ இல்லாமல் கேட்க முடியும். தான் கேட்டது கிடைக்காத போது அதை பெர்சனலாக எடுத்து உணர்ச்சி வசப்படாமல் ஏன் கிடைக்கவில்லை என எதிர் கேள்வி கேட்கவும் ஏன் அது தனக்கு வேண்டி இருக்கிறது என விளக்கம் கொடுக்கவும் முடியும். அதனால் அது கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகுவதோடு ஒரு வேளை கிடைக்காவிட்டால் அதை எந்த சங்கடமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

நிராகரிக்கப் பட்டு விடுவோமோ என எண்ணும் மனதால் எந்த புதிய முயற்சியையும் எடுக்க முடியாது. நிராகரிப்பை நிராகரித்து விட்டு தன் முயற்சியை தொடரும் மனமே பல புதிய சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

நிராகரிப்பை நிராகரியுங்கள்!

From: Fajila Azad < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >'; document.write( '' ); document.write( addy_text85837 ); document.write( '<\/a>' ); //--> This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ;
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
00971 50 51 96 433