Home கட்டுரைகள் குண நலம் இனி வரும் காலம்
இனி வரும் காலம் PDF Print E-mail
Wednesday, 17 June 2020 07:04
Share

இனி வரும் காலம்

    டாக்டர் பஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

அனேகமாக எல்லோருமே தங்களைத் தவிர மற்ற அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தாங்கள் மட்டும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு அவற்றைத் தீர்க்கும் வழிகளை சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் எந்த பிரச்னையும் இன்றி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் நம்புவார்கள்.

உண்மையில் பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்களுக்கும் எதிர்காலத்தை பற்றி ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிவீர்களா?

தாங்கள் விரும்பிய உயரத்தை அடைந்த பின்பும், தாங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்ற பின்பும் கூட, இப்போது இருப்பது போல் இனி வரும் காலம் சுகமாக இருக்குமா என ஏதாவது ஒரு கேள்வி மனதில் எழுந்து பலரையும் தங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க விடாமல் செய்து கொண்டுதான் இருக்கும்.

இந்த சூழ்நிலையில், ஏதாவது ஒன்று அவர்கள் நினைத்தது போல் நடக்காமல் தவறாகப் போய் விட்டதாக தோன்றினால் உடனே மனம் அந்த தவறுக்காக மட்டும் வருந்தாமல் அந்த தவறால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் பயத்தோடும் பதற்றத்தோடும் கற்பனை செய்யத் தொடங்கி விடும்.

சிறு புள்ளியாக எழக் கூடிய அந்த எண்ணங்களை விழிப்புணர்ச்சியோடு உடனே சரி செய்யவில்லையென்றால் அது மனமெங்கும் பரவி மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, உண்மையிலேயே அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடும்.

உதாரணத்திற்கு உங்கள் பள்ளிப் பருவத்தின் தேர்வுக் காலங்களை எண்ணிப் பாருங்கள். ஏதேனும் ஒரு தேர்வில் சரியாக எழுதவில்லை என்றால் உங்கள் மன ஓட்டம் எப்படி இருந்திருக்கும். சிலர் அதைப் பற்றி கவலைப் படாமல் ஜஸ்ட் லைக் தட் அதனைக் கடந்திருப்பீர்கள். பலர், இந்த தேர்வு சரியாக எழுதவில்லையே இதனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதே, விரும்பிய படிப்பு படிக்கும் கனவு இனி அவ்வளவு தான். ஏதோ ஒன்றைத்தான் படிக்க வேண்டி இருக்குமோ. சரியான வேலை கிடைக்குமா, எதிர்காலம் என்ன ஆகுமென்று தெரியவில்லையே, என்று ஒரு முழு வாழ்க்கையையும் பற்றி அப்போதே யோசித்து பதறி தவித்திருப்பார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நடந்து போன ஒன்றிற்காக அதிகம் கவலைப் படாமல் இலகுவாக எடுத்துக் கொண்டவர்களையும் அந்த எதிர்மறை சிந்தனைக் காரர்கள் விட்டு வைப்பதில்லை. ஏன் இப்படி கவலைப் படாமல் இருக்கிறாய், எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது என கவலைப் பட வேண்டிய விஷயங்களை எல்லாம் அவர்களே பட்டியல் போட்டு மனதில் விதைப்பதுடன் இப்படி எதைப் பற்றியும் நினைக்காமல் பொறுப்பின்றி திரிகிறாயே என்று கூடுதலாக ஒரு குற்றத்தையும் சுமத்தி அனுப்பி விடுவார்கள். கவலைப்படுவது தான் பொறுப்பான செயல் என்று ஆழ்மனமும் அதை பதிவு செய்து கொண்டு பின் எதற்கெடுத்தாலும் அது கவலைப்படத் தொடங்கி விடும். அல்லது மற்றவரிடம் தான் கவலைப் படுவதாகக் காட்ட முயற்சி எடுக்கும்.

உண்மையில் ஒரே ஒரு தேர்வில் சரியாக எழுதவில்லை என்பது போன்று ஏதேனும் ஒன்று தவறாகப் போவது அனைவருக்குமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிகழக் கூடியதுதான். ஆனால் அப்படி ஒரு தவறு நிகழும்போது எழும் எதிர்மறை எண்ணத்திற்கு இடம் கொடுத்தால் அது anxiety யை ஏற்படுத்தி விடும். அதனால் உருவாகும் கற்பனைகள், நீங்கள் செய்த சிறு தவறால், நீங்கள் தவற விட்ட ஒரு சந்தர்ப்பத்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் விடும் எனும் அளவு உங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.

தவறுகளும் தவற விட்ட சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட அவற்றையே மீண்டும் மீண்டும் சிந்தித்து அவற்றின் விளைவுகளைப் பற்றி கற்பனை செய்து கவலைப் படுவது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஏனென்றால் இந்த anxiety நிகழ்வுகளை மட்டுமல்லாமல் மனதையும் உடலையும் வருத்தி தன்னம்பிக்கையையும் தகர்த்து விடும். ஒன்றல்ல இரண்டல்ல உலகளவில் பதினாலுக்கு ஒருவர் என்ற வகையில் இப்படி anxity யால் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள் என அச்சுறுத்துகின்றன ஆய்வுகள்.

நீங்கள் செய்ய நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றி பெறுமா...? வெற்றி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கத் துவங்கினால் அந்த anxiety யே உங்கள் முயற்சிகளை நீங்கள் நினக்கும் விதத்தில் நடக்காமல் போவதற்கு வழி வகுத்து விடும்.

செய்யும் செயல்களில் ஏதாவது தவறாகப் போனால், அந்தத் தவறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அறிவு பூர்வமாக உங்கள் லாஜிக்கல் பிரைன் உங்களை சிந்திக்க தூண்டுவது மிக மிக இயல்பு. ஆனால் லாஜிக்கலாக இப்படி இப்படித்தான் நடக்கும் என்று நீங்கள் நினைப்பதும், நீங்கள் அடைந்திருக்கும் அறிவின் வரையறைக்கு உட்பட்ட ஒரு கற்பனைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். லாஜிக் என்பதும் ஒருவருக்கொருவர், அவரவர்களின் வாழ்வியல் முறை, பெற்ற அனுபவங்களைச் சார்ந்து வேறுபடும். இந்த பிரபஞ்சத்திற்கு என்று ஒரு லாஜிக் இருக்கிறது. அது உங்கள் நேர்மறை எண்ணத்தைச் சார்ந்துள்ளது.

தவிர, உங்கள் லாஜிக்கள் ப்ரெய்னை விட உங்கள் எமோஷனல் பிரைனும், ஆழ்மனதும் அதிகமான சக்தி வாய்ந்தது. ஒரு தவறு உங்கள் எதிர்காலத்தை பாதிக்காத முறையில் எப்படி சரி செய்யப் பட வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ அப்படி நடப்பதாக நினத்துப் பாருங்கள். உங்கள் ஆழ்மனது அந்த முறையில் அந்த தவறை சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்.

உதாரணமாக தேர்வு சரியாக எழுதவில்லை என்ற வருத்தம் உங்கள் மனதில் சூழத் தொடங்குமுன் சட்டென்று சுதாரித்து, நீங்கள் நல்ல மார்க் தான் வாங்குவீர்கள் எல்லாம் நல்ல முறையில் சரியாக நடக்கும் என நேர்மறையாக எண்ணத் தொடங்குங்கள்.

ஒருவேளை அப்படி நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும் அதனால் எதிர்காலமே பாதிக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி எல்லாம் சேர்ந்த ஒன்று தான். ஒரு தோல்வி என்பது வாழ்வின் முடிவல்ல. அந்த முயற்சியின் முடிவு மட்டுமே. இன்னும் வாழ்க்கையில் செய்வதற்கும் தொடர்வதற்கும் வெற்றி அடைவதற்கும் நிறைய இருக்கிறது. எல்லாம் அனுபவ பாடம் தான் என உங்கள் மனதிற்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

ஒரு செயலை செய்யும் போது அது வெற்றி அடையுமா தோல்வி அடையுமா என நீங்களே நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அங்கே தோல்விக்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகும். அதனால் அந்த சூழல்களில் நீங்கள் உங்கள் மனதை திடப் படுத்தி உங்கள் நம்பிக்கையை அதிகப் படுத்துவதே வெற்றிக்கான சாத்தியக் கூறுகளை அதிகப் படுத்தும்.

செய்வதற்கு தகுதியான எந்த ஒரு செயலிலும் முதல் முயற்சி தோல்வி அடைவது பொருந்திக் கொள்ளக் கூடியதே என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் ஒன்றை செய்யும் போது அது தவறாகிப் போனால் என்ன செய்வது என்ற பதட்டம் வராது. மாறாக அதை ஒரு மைல் கல்லாக எடுத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக செய்வதற்கு நம்பிக்கை எழும். வெற்றிகள் சாத்தியமாகும்.

பாக்ஸ் மெஸேஜ்:

உங்களுக்கு எதைப் பற்றி பதட்டம் anxiety ஏற்பட்டாலும் அமைதியாக ஒரு சேரில் உட்கார்ந்து, கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி முதலில் உங்கள் மனதை நிதானப் படுத்துங்கள். பின் உங்கள் கண்களை மூடி மானசீகமாக அந்த செயல் நன்றாக நடந்ததாக கற்பனையில் ஒரு முழுமையான காட்சியாக விரிவாக பாருங்கள். அதாவது அந்தக் காட்சியை நீங்கள் கற்பனையில் பார்க்கக் கூடிய விதம் அது இயல்பாக நடந்தது போல் உங்கள் மனம் எண்ணக் கூடிய வகையில் இருக்க வேண்டும். இ

ப்போது தொடர்ச்சியாக அந்த ஒன்று நீங்கள் விரும்பிய படி நடந்தால் எழக் கூடிய நேர்மறை விளைவுகளையும் காட்சி படுத்தி பாருங்கள் இது ஆழ்மனதில் உங்கள் விருப்பத்தையும் அது ஏற்படுத்தக் கூடிய விளைவையும் ஒரு புளுபிரிண்ட்டாக பதிய செய்து அதே வகையில் நிகழ்வுகள் இருக்கக் கூடிய சாத்தியங்களை அதிகப் படுத்தும். எல்லாவற்றையும் விட அப்படி நேர்மறையாக மனதில் காட்சி படுத்தும் போது மனம் பதற்றம் நீங்கி அமைதி அடையும். அதுவே அடுத்த நல்ல நிகழ்வுக்கு வழி வகுக்கும்.

 

- Dr.Fajila Azad

 

(International Life Coach – Mentor – Facilitator)

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it FB:fajilaazad.dr youtube:FajilaAzad

 

MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433