Home கட்டுரைகள் கதையல்ல நிஜம் ஓர் அதிசயப் பெண்!
ஓர் அதிசயப் பெண்! PDF Print E-mail
Thursday, 11 June 2020 07:01
Share

ஓர்   அதிசயப் பெண்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக Duchenne Muscular Dystrophy (DMD) என்ற சிறுவர் நோய் தொடர்பான உலக பெற்றார் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாகவும் அதன் இலங்கை அமைப்பின் தலைவராகவும் நான் செயற்பட்டு வருகின்றேன்.

எனது இரண்டாவது மகன் இந்நோயினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே நான் இந்த அமைப்பில் சேர நேர்ந்தது. இதன் உலக அமைப்பின் தலைவராக இருப்பவர் Dr. Elizabeth Vroom என்ற நெதர்லாந்து நாட்டுப் பெண்.

ஒழுங்கற்ற பற்களைச் சரிசெய்யும் நிபுணராக (Orthodontist) வேலை பார்ப்பவர் இவர். அவரது ஒரேயொரு பிள்ளையும் DMD நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

1997 நவம்பர் மாதத்தில் நெதர்லாந்தின் ரொட்டர்டாம் நகரில் நடக்கவிருக்கும் ஐரோப்பிய பெற்றார் மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு எனக்கு ஈமெயில் அழைப்பொன்று வந்தது. நான் மேற்சொன்ன டாக்டர் எலிஸபெத் தான் அதனை அனுப்பியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர், தான் இலங்கைக்கு வந்து போனதாகவும் அப்போது என்னைப் பற்றிய விபரம் தெரியாமற் போனது கவலையே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

"மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்குரிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை. நான் அரச பென்ஷனில் வாழ்ந்து கொண்டிருப்பவன்" என நான் அறிவித்தேன். உடனே அவர் கொழும்பு - அம்ஸடர்டாம் இரு வழி விமானக் கட்டணத்தை அங்கேயே விசாரித்தறிந்து அந்தத் தொகையை எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால் அதைவிடக் குறைந்த தொகைக்கு இங்கே டிக்கட் வாங்கக்கூடியதாக இருந்தது. நான் அதுபற்றி அறிவித்ததும் டிக்கட் வாங்கிவிட்டு மீதியாகும் பணத்தைத் தனக்கு இலங்கை நாணயத்திலேயே கொண்டுவந்து தருமாறு சொன்னார். அடுத்த தடவை இலங்கைக்கு வரும்போது அது தனக்குப் பயன்படும் என்றார்.

வீஸா பெறுவதற்குரிய ஆவணங்களையும் எலிஸபெத் அனுப்பியிருந்தார். நானும் எப்படியோ தயாராகி விமானத்தில் அம்ஸ்டர்டாம் போய்ச் சேர்ந்தேன். இந்தியாவுக்கு அப்பால் நான் சென்ற முதற் தூரப் பயணம் அதுதான்.

விமான நிலையத்தில் என்னை வரவேற்க எலிஸபெத் வந்திருந்தார். அதற்குள் எனது மூத்த மகன் எனது போட்டோ ஒன்றினை Scan பண்ணி அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனவே அவர் என்னை எளிதில் தேடிப்பிடித்து, தனது வாகனத்தில் உரிய இடத்துக்கு அழைத்துச் சென்றார். அன்றுதான் நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அந்த மீதிப் பணத்தை அன்றே அவரிடம் கையளித்தேன். அன்று முதல் இன்று வரை அவருடனான அற்புதத் தொடர்பு நீடித்து வருகிறது. நான் விமான டிக்கட் விடயத்தில் நேர்மையாக நடந்துகொண்ட விதம்தான் அவரது மனதில் என்னைப் பற்றிய மாறாத நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

அவரை ஓர் அதிசயப் பெண் என்றுதான் நானும் எனது குடும்பத்தினரும் கருதுகிறோம். அவர் என்னைவிட வயதில் இளையவர். ஆனால் துணிச்சலிலும் விவேகத்திலும் அறிவிலும் உலக அனுபவத்திலும் அவரை நெருங்கக்கூட என்னால் முடியாது. தனது 16 வயது முதலே உலக நாடுகளையெல்லாம் வலம் வந்திருக்கிறார். இலங்கைக்கு மாத்திரம் நாலைந்து தடவைகள் விஜயம் செய்திருக்கிறார். இலங்கையின் மீது, அதிலும் காலியிலுள்ள டச்சுக் கோட்டைப் பகுதி மீது, அலாதியான பற்று அவருக்கு. (காலிக்கோட்டை பழைய அம்ஸ்டர்டாம் நகரின் ஒரு பகுதி போன்றது. அம்ஸ்டர்டாமிலுள்ள பல வீதிப் பெயர்கள் இங்கும் இருக்கின்றன.) பிற்காலத்தில் இலங்கை வந்த போதெல்லாம் அவர் என் வீட்டுக்கு வரத் தவறியதில்லை. எனது தாயார், மனைவி, பிள்ளைகள் அனைவரும் அவரோடு நெருக்கமாகிவிட்டனர். மகன் இர்பான் மீது அலாதியான அன்பு காட்டினார்.

இர்பானின் நோய் கடுமையாகிய போது இயல்பாகச் சுவாசிப்பது அவருக்குக் கஷ்டமாகியது. அந்த நிலையில் சுவாசத்துக்குத் துணை செய்ய வென்றிலேட்டர் என்ற சாதனம் தேவைப்பட்டது. இப்படியொரு நிலை வரும் என எலிஸபெத் ஏற்றகனவே என்னை எச்சரித்திருந்தார். இர்பானின் நிலை பற்றி அவருக்கு அறிவித்ததும் உடனடியாக வென்றிலேட்டர் ஒன்றைத் தருவித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது மட்டுமன்றி தனது கிரெடிற் கார்ட் விபரங்களையும் அதன் இரகசியக் குறியீட்டையும் எனக்கு அனுப்பிவைத்ததார். நான் திகைப்படைந்து போய்விட்டேன்.

அமெரிக்கத் தயாரிப்பான வென்றிலேட்டர் ஒன்று 6000 அமெரிக்க டொலர்களுக்கு இருப்பதாக நான் சொன்ன போது அதனை உடனடியாக வாங்கச் சொன்னார். எனினும் நான் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமே என்று எண்ணி குறைந்த விலையில் வேறு உற்பத்திகள் கிடைக்குமா என உலகம் முழுவதும் விசாரித்தேன். இறுதியில் 3500 டொலர்களுக்கு ஸ்வீடனில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான சாதனமொன்றை அவரது பணத்தில் வாங்கினேன். அச்சாதனம் தனக்கு மீள உயிர் வழங்கியதாக மகன் கூறினார்.

ஸுனாமியினால் இலங்கை பாதிக்கப்பட்டபோது எனது பெயரைக் கூறி அம்ஸ்டர்டாம் வீதிகளிலே எலிஸபெத் நிவாரண நிதி சேகரித்திருக்கிறார். நெதர்லாந்து நாட்டு பிரபல நடிக நடிகையர்களும் அந்நாட்டின் புகழ்பெற்ற AJAX உதைபந்தாட்ட அணியின் வீரர்களும் இந்த முயற்சியில் பங்குபற்றியதாக அவர் சொன்னார். அதன் மூலம் சுமார் 5 மில்லியன் ரூபா சேகரித்து அனுப்பினார். அதனைப் பயன்படுத்தி பேருவலை. பயாகலை, காலி, ஹம்பாந்தோட்டை, கிண்ணியா, மூதூர், மருதமுனை, சாய்ந்தமருது, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் சுய தொழில் இழந்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கினேன்.

இர்பானுக்கு லப்டொப் கம்பியுட்டரொன்றையும் அவர் அன்பளிப்புச் செய்தார். மூத்த மகன் இர்ஷாத் ரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பெங்களுரில் சிகிச்சை பெற்றபோது வைத்தியசாலைக் கட்டணம் செலுத்துவதற்காக ஏழு லட்சம் ரூபா அனுப்பியிருந்தார். அத்தோடு நினறுவிடாமல், நான் பெங்களூரில் இருக்கும் வேளையில் எனது வீட்டுக்கு விஜயம் செய்து மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறியதோடு வீட்டுச் செலவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார். பின்னர் தெஹிவளைக்கு எனது தம்பியைத் தேடிச் சென்று "உங்கள் அண்ணன் வாய்திறந்து உதவி கேட்க மாட்டார். ஏதும் தேவை இருந்தால் தயங்காமல் எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறிச் சென்றிருக்கிறார்.

இர்ஷாதின் இறுதிக்கட்டத்தில் ஏழு லட்சம் இந்திய ரூபா விலையுள்ள மருந்தொன்றைக் கொடுத்துப் பார்ப்போமா என வைத்தியர் கேட்ட போது அந்த மருந்து பயன்தரும் என்று உத்தரவாதம் இருந்தால் அந்தச் செலவைப் பொறுப்பெடுக்க அவர் முன்வந்தார்.

எமது ஊர் அல்ஹம்றா மகா வித்தியாலயத்திலுள்ள பற் சிகிச்சை நிலையத்திலிருந்த Dental Chair பழுதடைந்து சிகிச்சை நிலையம் மூடப்பட்டிருந்த நேரத்தில் அது பற்றி பாடசாலையின் முன்னாள் அதிபர் என்னிடம் முறையிட்டார். அதனை நான் எலிஸபெத்திடம் சொன்னேன். தனது சகாக்கள் இருவரினது உதவியோடு புதிய Dental Chair ஒன்று வாங்குவதற்கென 350,000 ரூபா அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தால் நான் தேடி வாங்கிக் கொடுத்த அந்த Dental Chairதான் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தனைக்கும் அவர் பெரிய பணக்காரியல்ல. தனது தொழிலில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தவர். அம்ஸ்டர்டாமிலும் பிரான்ஸின் பரிஸ் நகரிலும் அவருடைய Clinics இருந்தன. பரிஸுக்கு காரிலேயே சென்று வருவார். நான் முதன்முதலாகச் சந்தித்தபோது அவரிடம் இருந்த கார் 25 வருடங்கள் பழையது என்று சொன்னார். அவரது வீட்டுக்கும் நான் போயிருக்கிறேன். அந்த வீடும் மிகப் பழையது. மிக எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். இங்கே வரும்போதெல்லாம் எமது பண்பாட்டுக்கு ஏற்ற முறையிலேயே உடையணிந்து வருவார்.

தொழில் ரீதியில் அவர் மிகப் பிரபலமானவர். ஒரு தடவை அம்ஸ்டர்டாம் விமான நிலையத்துக்கு என்னை அழைத்துச் சென்ற போது விமானப் பணிப்பெண்கள் பலர் அவரோடு வந்து சிரித்து உரையாடினர். "ஹாபிஸ், இவர்களெல்லாம் இப்படி தைரியமாகச் சிரிப்பதற்கு நான்தான் காரணம்" என்றார் கண்ணைச் சிமிட்டியபடி. அவர் சொல்வதன் கருத்தை புரிந்துகொண்டு நானும் சிரித்தேன்.

இவர் எந்த நேரமும் இப்படி உற்சாகமாக இருப்பது எப்படி என நான் அடிக்கடி வியந்துபோவேன். நேரத்துக்கு உண்ணாமல் பருகாமல் ஒழுங்காக நித்திரை கொள்ளாமல் பொதுப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் பெங்களூர் மாநாடொன்றின் போது அவர் காலையுணவு சாப்பிடத் தொடங்கியதும் யாரோ வந்து அவரிடம் ஏதோ ஆலோசனை கேட்ட போது தனது உணவுத் தட்டையும் கோப்பி கப்பையும் அப்படியே நிலத்தில் வைத்துவிட்டு அவர்களுக்கு ஆலோசனைகூறப் போய்விட்டார். அதன்பிறகு அவர் அந்த உணவைத் தொடவே இல்லை. "உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என அன்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன். "நீர் மட்டும்தான் எனது ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்" என்று சொன்னார் அவர்.

கடைசியாக நான் அவரை 2019 டிசம்பரில் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் சந்தித்தேன். 2020 பெப்ரவரி 29ம் திகதி இத்தாலியின் ரோம் நகரில் இன்னொரு மாநாட்டில் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. அதற்குள் கொரோனா வந்து நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. இவர்களைப் போன்றவர்களால்தான் உலகம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

source:   https://www.facebook.com/photo.php?fbid=10220125925273003&set=a.1316358423660&type=3&theater