Home கட்டுரைகள் குண நலம் பலன் தரும் - டாக்டர் ஃபஜிலா ஆசாத்
பலன் தரும் - டாக்டர் ஃபஜிலா ஆசாத் PDF Print E-mail
Wednesday, 06 May 2020 13:11
Share

பலன் தரும் 

    டாக்டர் ஃபஜிலா ஆசாத்     

என்னத்தை செய்து என்ன செய்யஸ எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகத் தான் போகிறது என்று புலம்பாதவர்களைக் காண்பதே அரிதுதான். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் பலரையும் அப்படி செய்ய விடாமல் தடுப்பது இந்த எண்ணம்தான்.

தனக்கான நல்ல முயற்சியாகட்டும் பிறருக்கு செய்ய நினைக்கும் உதவி ஆகட்டும் அது சரியான பலனைக் கொடுப்பதில்லை என்ற எண்ணம் எந்த முயற்சியையும் எடுக்க விடாமலே பலரையும் விரக்தி கொள்ளச் செய்து விடுகிறது. நியுட்டனின் மூன்றாவது விதியின்படி எந்த விளைவிற்குமான எதிர் விளைவை உடனே எதிர்பார்த்து அப்படி கிடைக்காத போது மனம் அழுந்திப் போகிறது.

பல நேரங்களில் நீங்கள் செய்யும் பல நல்ல காரியங்கள் உங்களுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் யாருக்காக அந்த செயலைச் செய்கிறீர்களோ அவர்களுக்குக்கூட பலனளிக்காதது போல் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நல்ல செயல்கள் என்றும் வீண் போவதில்லை.

உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டால் மூளை instruction கொடுக்க antibodies உற்பத்தியாகி இரத்த நாளங்கள் அவற்றை அது தேவையான பகுதிக்கு கடத்தி சென்று அந்த காயத்தை ஆற்றுவதை நீங்கள் அறிவீர்கள். அதுபோல் இந்த உலகில் யாரோ ஒருவர் எங்கோ செய்யும் ஒரு நல்ல செயல் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நேரடி பலனைத் தராவிட்டாலும் இந்த பிரபஞ்சத்தில் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் தேவையை நிச்சயம் அது நிறைவேற்றி இருக்கும்.

‘அமேசான் காடுகளில் உள்ள ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவின் விளைவாக ஐரோப்பிய கண்டத்தில் புயலடிக்கும்’ என்னும் கெயாஸ் தியரி அறிவீர்களா...? அது போல, உங்கள் தேவையையும் நீங்கள் அறிந்திராத யாரோ ஒருவரின் எங்கோ செய்யும் செயலின் மூலம் இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும்.

அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனுக்கு தான் எது செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை என்று எப்போதும் ஒரு ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கிறது. மனஉளைச்சல் அதிகமாக கல்லூரியில் விடுப்பு எடுத்துக் கொண்டு, தான் தங்கியிருந்த விடுதியில் சொல்லிக் கொண்டு நகர்ப்புறத்தை விட்டும் பல மைல் தள்ளி இருக்கும் தன் வீட்டிற்கு செல்கிறான்.

தாய் தந்தை சகோதர சகோதரிகள் என ஒன்று கூடி சிரித்து மகிழ அப்போது தான் அவன் மனம் கொஞ்சம் இலேசாகிறது. அந்த நேரத்தில் அவர்களோடு சிரித்து பேசி கொண்டிருந்த அவன் தாத்தா சடாரென மயக்கமுற்று கீழே விழ அங்கே நிலவிக் கொண்டிருந்த அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒரு நொடியில் உடைந்து சட்டென பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

தந்தை உட்பட அனைவருமே பதற்றத்தில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றுவிட அந்த இளைஞன் தன்னை சுதாரித்துக் கொண்டு மயங்கி விழுந்த தாத்தாவின் அருகில் சென்று அவரை மல்லாக்கப் படுக்க வைத்து தான் கல்லூரியில் கற்றுக் கொண்ட CPR சிகிச்சையை அளிக்கத் தொடங்குகிறான்.

உணர்ச்சி பிரவாகத்தில் செயலற்று நிற்கும் தந்தையை விளித்து ஆம்புலன்ஸை அழைக்கச் சொல்கிறான். ஆம்புலன்ஸ் வரும்வரைக்கும் அவன் தான் கற்ற அனைத்து முதலுதவி முறைகளையும் முயன்று தனது தாத்தாவை காப்பாற்ற தொடர்ந்து போராடுகிறான். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட அதில் வந்த மருத்துவர்கள் தாத்தாவின் இதயதுடிப்பை பரிசோதித்து விட்டு, அந்த முதியவர் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் அந்த சூழலின் இறுக்கத்தில் இறுக்க இவனுக்கு தான் எத்தனை முயற்சித்தும் தனது தாத்தாவை காப்பற்ற முடியாமல் போய் விட்டதே, இந்த செயலுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லையே, என்ற எண்ணமும் சேர்ந்துவிட தான் செய்யும் எந்த செயலாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணம் மேலும் வலுப்படுகிறது. எவ்வளவோ முயற்சித்தும் எல்லாமே வீணாகி விட்டதே, ஏன் என் எல்லா செயலுமே தோல்வியாகவே முடிகிறது. என்னால் எனக்கும் பலனில்லை. பிறருக்கும் பலனில்லை என்று அவன் மனம் என்னென்னவோ நினைத்து அவனை தாழ்வு மனப்பான்மையில் துவள வைக்கிறது.

ஓரிரு தினங்களில் வீடு சற்று நிதானப் பட இவனும் ஒரு இயலாமையோடே கல்லூரிக்குச் செல்ல தயாரகிறான். அப்போது அவனுக்கு விடை கொடுக்க வரும் அவன் தந்தை அவன் கைகளை பிடித்துக் கொண்டு சொல்கிறார். “மகனே, உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். தாத்தா மயங்கி விழுந்த அந்த நேரத்தில் நான் முற்றிலும் செயலற்றுப் போயிருந்தேன். நீ மட்டும் அன்று இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கு எந்த முதலுதவியும் என்னால் செய்திருக்க முடியாது. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், எனது தந்தையை தகுந்த முதலுதவி அளிக்காமல் இறக்க விட்டு விட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி என்னை வாழ்நாளெல்லாம் நிம்மதி இழக்க செய்திருக்கும்.

அது என்னை உயிரோடு கொண்டிருக்கும். நீ இங்கிருந்து உன்னால் ஆன முயற்சிகளெல்லாம் எடுத்த பின்பும் அது வெற்றி அடையாமல் அவர் நம்மை விட்டும் பிரிந்த போது, இது தான் அவர் விதி அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என என்னால் சூழலை ஏற்றுக் கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய மனபாரத்திலிருந்து நீ என்னை காப்பாற்றி இருக்கிறாய் தெரியுமா என நெகிழும் தந்தையை ஆரத் தழுவும் போதுதான் அவனுக்கு அவனது இத்தனை வருட கேள்விக்கான விடை புலப்படுகிறது.

தான் செய்த செயல் தன் தாத்தாவிற்கு பலனளிக்காதது போல் தெரிந்தாலும் அது தன் தந்தைக்கு சிறந்த பலனை அளித்திருக்கிறது என்பது அவனுக்குப் புரிகிறது. தான் இதுவரை செய்த எந்த ஒரு செயலும் வீணாகப் போகவில்லை, அவை எங்கோ யாருக்கோ ஏதோ ஒரு வகையில் நன்மையாக இந்த பிரபஞ்சத்தால் கொண்டு சேர்க்கப் பட்டிருக்கும். என்னும் தெளிவு வர, இதுவரை அவனை அழுத்தி வந்த மன பாரமும் இறங்குகிறது.

பொதுவாக ஏதாவது ஒன்றை தவறாக செய்யும் போது அதன் விளைவு உடனே தலையில் தட்டும். ஆனால் நன்றாக செய்யக் கூடிய ஒன்றின் பலன் தெரிவதற்கு நாள் செல்லலாம். நீங்கள் செய்த ஒரு நல்ல செயல் உங்களுக்கோ அல்லது செய்தவருக்கோ நீங்கள் எதிர்பார்த்த பலன் தராவிட்டால் அது மறைமுகமான பலனை அது தந்திருக்கலாம், ஏதோ நடக்க இருந்த ஒரு தீங்கை தடுத்திருக்கலாம் அல்லது உங்கள் இருவரை விட உங்கள் உதவி தேவையான யாரோ ஒருவருக்கு அதன் பலன் சேர்ந்திருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்கள் நல்ல செயல்களை யாராலும் தடுக்க முடியாது.

அது போல் உங்களுடைய தேவைகளையும், அதை பூர்த்தி செய்யக் கூடிய தகுந்த நபர் யாரோ ஒருவரின் செயல்களைக் கொண்டு இந்த பிரபஞ்சம் நிறைவு செய்யும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கான உதவி கிடைக்காவிட்டால் நீங்கள் சோர்ந்து விடாமல் நேர்மறையான சிந்தனையோடு அதை எதிர் நோக்கி இருப்பீர்கள் இந்த பிரபஞ்சமும் அதை உங்களுக்கு எங்கிருந்தாவது கொண்டு வந்து சேர்க்கும். வேரில் பாய்ச்சும் நீர் தானே கிளையில் பூக்கிறது.

Amour De Soi Dr.Fajila Azad
Exclusive Counseling & Hypnotic Healing Center International Life Coach & Hypnotist
+919842071712, +971 52 6732739

முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
00971 50 51 96 433