Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும்
வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும் PDF Print E-mail
Friday, 24 April 2020 19:27
Share

வான்மறை குர்ஆன் இலக்கும் எதிர்பார்ப்பும்

     அப்துர் ரஹ்மான் உமரி      

இயற்கை நியதி ஒன்று உள்ளது. காரிருள் சூழ்ந்து கவிழ்ந்து விடுகையில் அதன் நெஞ்சை கிழித்துக் கொண்டு ஒளிக்கதிர் ஒன்று உதயமாகின்றது. இருள்களை அகற்றி சூழலை ஒளிமயமாக ஆக்குகின்றது.

மனிதகுல வரலாற்றில் ஒளியின் வெளிச்சத்தின் மிகப்பெரிய வெள்ளப்பிரவாகம் 14 நூற்றாண்டு களுக்கு முன்னால் ஒரு ரமழான் மாதத்தின் நிறைவில் சங்கை பொருந்திய இரவொன்றில் தோன்றியது. நானிலம் முழுக்க அநீதமும் சீர்குலைவும் நிறைந்து காணப்பட்ட பொழுது அது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன." (அல்குர்ஆன்:   அர்ரூம்: 30,41)

நிலப்பரப்பில் மட்டுமன்றி நீர்ப்பரப்பிலும் சீர்குலைவு நிரம்பி விட்டிருந்தது. படைத்த உண்மையான இறைவனை விட்டுவிட்டு தானே கற்பித்துக் கொண்ட பொய்க்கடவுளர்களையும், மனோ இச்சைகளுக்கு இறையாண்மை உரு கொடுத்தும் மனிதன் வணங்கிக் கொண்டிருந்தான்.

இறைத்தூதர்கள் மூலமாகவும் இறைவாக்கினர்கள் மூலமாகவும் விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியான இறைவன் அனுப்பி வைத்திருந்த வழிகாட்டுதல்களை அடியோடு இந்த மனிதன் தொலைத்துவிட்டிருந்தான். அதன் விளைவாக எங்கு பார்த்தாலும் இருளும் வழிகேடும் கவிழ்ந்துகிடந்தன. நெருப்பையும் நிலத்தில் முளைத்த மரங்களையும் நீரையும் கல்லையும் - மிருகங்களையும் கூட விட்டு வைக்காமல் வணங்கிக் கொண்டிருந்தான் மனிதன்.

சமூக வாழ்க்கையை பொருத்தவரைக்கும் மண்ணுக்குள் அடங்குகின்ற மதிப்பற்ற மனிதர்களே மற்ற மனிதர்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களாகவும் நடமாடும் தெய்வங்களாகவும் இறையாண்மை பெற்ற வணக்கத்திற்குரிய அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களாக பீடங்களில் வீற்றிருந்தார்கள். விருப்பம்போல் தங்கள் கைகளை அங்கும் இங்கும் அசைத்து கைப்பொம்மைகளைப்போல் மனித இனத்தையே இயக்கி வந்தார்கள்.

நன்மைகள் யாவும் சுவடுதெரியாமல் அடையாளம் இழந்துபோய் விட்டிருந்தன. தீமைகளோ பெருத்துக் கொழுத்து விண்முகட்டை தொட்டுநின்றன. இனம், தேசம், மொழி, கோத்திரம் போன்ற சிலைகள் மிகப்பிரமாதமாக வழிபடப்பட்டன. சத்தி யத்தையம், வாய்மையையும், நீதியையும், சமத்து வத்தையும் ஓரிறை வணக்கத்தையும் எதிர்பார்த்து மனித குலம் முழுக்க ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்டதோர் உலகத்தில்தான் இறைவனின் தேர்வுக்கு உரித்தாகிய ஓர் ஆன்மா, மானுட குலம் முழுமைக்குமாக சிந்தித்த ஒரு தூய உள்ளம் நல் மனிதர் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்களை திறந்தார்கள்.

எங்கு பார்த்தாலும் அநீதம், அட்டூழியம், அரா ஜகம், கொடுங்கோன்மை, வல்லாட்சி, ஏகாதிபத் தியம். ஏறெடுத்துப்பார்த்தால் தீமையின் கோரமுகம். கீழே குனிந்து பார்த்தால் வழிகேட்டின் இருட்டுச் சேறு. திகைத்து தடுமாறி நின்றார் அந்த மனிதர்.

"அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்." (அல்குர்ஆன் 93:7)

பொய்க் கடவுளர்களின் மறுக்கும் கலகக்காரராகவும் ஓரிறைவனைத் தேடுகின்ற உண்மை அடிமையாகவும் திகழ்ந்தார் அவர். இயற்கையின் கரங்கள் அவரை தாலாட்டி நாற்பது ஆண்டுகள் அவரை பயிற்றுவித்தன. விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிமையாளனான ஓரிறைவன் மனிதகுலத்தின் மறுவாழ்விற்காக மனிதத்தின் மறு உயிர்ப்பிற்காக அந்த நல் மனிதரை ஓர் இரவில் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த மண் உலகிற்கான தன்னுடைய இறுதித்தூதர் இவர் என பிரகடனப்படுத்தினான்.

ஹிரா குகையில் அமர்ந்து ஓரிறைவனைத் தேடி வழிபாட்டில் இலயித்திருந்தார் அவர். ஓரிறைவ னின் புறத்திலிருந்து ஒரு தூதர் வானவர் கோமான் - நேர்மையின் வடிவம் - அல் அமீன் அவருக்கு முன்பாக தோன்றினார். வழிபாட்டில் இலயித்திருந்த அந்த அடியாரை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். இறுக்கக் கட்டினார் வையகத்திற்கும் விண்ணகத்திற்கும் உரிமையாளனிடம் (ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ளு) இருந்து தான் கொணர்ந்த முதல் இறைச் செய்தியை-வஹியை எடுத்துச் சொன்னார்.

"ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறை வனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டி யிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓது வீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெ ரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தான்." (அல்குர்ஆன் 96:1-5)

வழிகேட்டு இருள்களுக்கு சாவுச் செய்தி வந்து விட்டது. தாஃகூத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. ஓரிறைவனின் இறுதி வழிகாட்டுதல் இதோ தொடங்கி விட்டது. ஏறத்தாழ 23 ஆண்டுகள் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இறை வழிகாட்டுதல் நிறைவு பெற்றது. ஒளியின் பெரும்களஞ்சியம் ஒன்று மனித குலத்திற்கு கிடைத்தது. அந்த ஒளிக்களஞ்சியத்திலிருந்து தொடராக கிளம்புகின்ற ஒளிக்கற்றைகள் கியாமத் நாள் வரைக்கும் மனித குலத்தை சூழ்ந்து நின்றன. வெளிச்சம் இதோ! வாய்மை இதோ! என சுட்டிக் கட்டுகின்ற திசைகாட்டியாக மாறின. வழிகாட்டலின் வாசலை நோக்கி கைகாட்டிகளாக கியாமத் நாள் வரைக்கும் நின்றது அந்த ஒளிக்கற்றை!

"இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடை யையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட் டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாமை உங்களு டைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன்." (அல்குர்ஆன் 5:3)

இன்று முதல் வஹி இறக்கியருளப்பட்டு முஹம் மதுவின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) இறைத்தூது நிறைவுற்று ஏறத்தாழ பதினான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. பாரெங்கும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பின்பற்றுகின்ற மக்கள் இந்நன்னாளை ஆண்டு தோறும் நினைவுகூருகிறார்கள். இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பிரிக்கின்ற எல்லைக்கோடாக அந்நாள் திகழுகின்றது. அந்நாளிலிருந்துதான் மனித குல வரலாற்றில் இரு பேரொளி பிரளயங்கள் தோன்றின. ஒன்று ஈடு இணையில்லா வான்மறை குர்ஆன், இன்னொன்று இந்த உலகிற்கே அருட் கொடை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.


இறைவன் படைத்த இந்தப் புவியுலகில் மனித னின் அடிப்படைத் தேவைகள் இரண்டு வகைப்படு கின்றன. ஒன்று அவன் உடல்சார்ந்த பொருளியல் தேவைகள், இன்னொன்றோ அவனுடைய ஆன்மீகம் சார்ந்த ஒழுக்கம், சமூக வாழ்வு தொடர்பான தேவை.

இறைவன் மிகமிக அற்புதமாக பரிபாலனம் செய்யக்கூடியவன். நிறைவான ஒழுங்கில் மனிதனின் இவ்விரு தேவைகளையும் அவன் பூர்த்திசெய்தான். வாழ்க்கையின் சுவையை அப்போதுதான் மனிதன் முழுமையாக நுகரமுடியும். நேர்க் குறிக்கோளுக்காக மிகச்சீரான பாதைகளில் அவன் பயணிக்கமுடியும். மிக அழகிய வடிவத்தில் இவ்விரு தேவைகளையும் இறைவன் நிறைவுசெய்தான்.

உடலியல் பொருளியல் தேவைகளை முழுமைப் படுத்துவதற்காக விண்ணகத்திலும் வையகத்திலும் எண்ணற்ற ஆற்றல்களை வசப்படுத்திக் கொடுத்தான். தேடித் தேடி ஆராய்ந்து ஆராய்ந்து அவற்றை கண்டறிவதிலும் சரியாக பயன்படுத்துவதிலும் மனிதனின் இந்த தேவைகள் யாவும் முழுமை அடைகின்றன.

அதே போன்று மனிதனின் ஆன்மீக, ஒழுக்க, சமூக தேவைகளை முழுமைப்படுத்துவதற் காக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தன்னுடைய வழிகாட்டுதல்களை இறக்கி அருளினான்.

இறைத்தூதர்கள் அலைஹிமுஸ்ஸலாம் வாயிலாக மனிதர்களுக்கு அவ்வழிகாட்டுதல் வந்து சேர்ந்தது. வெறும் வழிகாட்டுதல் மட்டுமல்ல, இறைத்தூதர்களின் வாழ்க்கை அந்த வழிகாட்டுதலுக்கு உருவம் கொடுத்து நகமும் சதையுமாக உயிரோடு உலகிற்கு முன்னால் காட்டியது.

இப்படி, மனிதகுலம் தம்முடைய வாழ்க்கை பய ணத்தை இருட்டில் அல்ல, ஒளியில்தான் தொடங்கி இருக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனின் வழிகாட்டுதல் நேரான பாதையை நோக்கி தொடர்ந்து சீராக வழிகாட்டிக்கொண்டே இருந்திருக்கின்றது. இந்த மண்ணுக்கு வந்த முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ் ஸலாம் இறைவனின் முதல் நபியாக இருந்தார். இறைவன் தன்னுடைய இந்த வழிகாட்டுதலை முழுமை செய்து, நிறைவுபடுத்தி, கடைசி வழிகாட்டுதலை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளினான்.

இந்த வழிகாட்டுதல் குர்ஆன் வடிவில் இன்றும் நிலைத்து நிற்கின்றது. மனித குலத்திற்கு வழி காட்டுவதற்காக இறுதித் தீர்ப்பு நாள் வரைக்கும் உலகு அழியும் நாள் வரைக்கும் இது நிலைத்து நிற்கும். குர்ஆன் முன்வைக்கின்ற கருத்தாக்கத்தை சாராம்சத்தை கீழே காணலாம்.

1) இந்த உலகம் இறைவனின்றி இல்லை. அதனை ஒருவன் படைத்திருக்கிறான். அவன்தான் அதற்கு முழு உரிமையாளன், எஜமானன், அதிபதி, ஆட்சியாளன். எல்லா பொருட்களின் மீதும் அவனுடைய ஆளுமை செயல்படுகின்றது. உலகை இயக்குகின்ற உண்மையான ஆட்சியாளனாக அவனே திகழு கிறான். எல்லா அருட்கொடைகளும் அவனால் வழங்கப்பட்டவையே. அவனுடைய அதிகாரம் யாவற்றையும் சூழ்ந்தது, வரம்பற்றது, வகைதொகையற்றது.

உலகத்தில் இருக்கின்ற அனைத்து பொருட்களை யும் படைத்தவனாகவும் உரிமையாளனாகவும் அவன் திகழுவதைப் போலவே மனிதனைப் படைத்தவனாகவும் மனிதனின் உரிமையாளனாகவும் மனிதனின் ஆட்சியாளனாகவும் திகழுகிறான்.

இந்த உண்மையான உரிமையாளன் ஒரு வரை முறைக்கு உட்பட்டு ஒரு சில அதிகாரங்களை சுதந் திரமாக எப்படி வேண்டுமானாலும் செயல் படுத்திக் கொள்ளலாம் என மனிதனுக்கு வழங்கி இருக்கிறான். இந்த பூமியில் அவனை தன்னுடைய பிரதியாக கலீஃபாவாக ஆக்கி இருக்கிறான். மற்றெல்லா உயி ரினங்களையும் படைப்பினங்களையும் மனிதனுக்கு கட்டுப்படக் கூடியவையாக ஆக்கி இருக்கிறான்.

2) தன் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கிலாஃபத் என்னும் பிரதிநிதிப் பொறுப்பை சரியாகவும் சீராகவும் நிறைவேற்றுவதற்காக அதற்கு தகுதி உள்ளவனாகவும் அருகதை உள்ளவனாகவும் மாற்று வதற்காக உண்மையான உரிமையாளன் தன்னுடைய வழிகாட்டுதலை தொடர்ந்து மனிதனுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய வழிகாட்டுதல் நெடுநெடுவென்ற நேரான பாதையை-சிராத்துல் முஸ்தகீமை நோக்கி சுட்டுகின்றது. முழு உலகமும் அவனுக்காக! அவன் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்காக! அவனோ ஓர் இறைவனுக்காக! என்பது அவனுக்கு உணர்த்தப் பட்டுள்ளது.

இறைவனுக்கு கட்டுப்பட்டவனாக இறைவனின் உண்மையான அடிமையாக திகழ வேண்டும். அதுதான் அவனுடைய வேலை! அவனுக்கு இடப்பட்ட பணி! தன் வாழ்க்கை முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு அவன் வாழவேண்டும்.

இந்த உலக வாழ்க்கை உண்மையில் ஒரு பரிசோதனையாக திகழுகின்றது. அதில் மனிதன் தேர்ந் தெடுக்க வேண்டிய பாதை தன்னுடைய எண்ணங் கள் முழுவதையும் இறைவனின் திருப்திக்குப் பின்னால் செலுத்துவது மட்டுமே!

அவனுடைய திருப்தியையும் அவனுடைய பொருத்தத்தையும் அடைவதற்காக தன்னிடம் இருக் கின்ற யாவற்றையும் செலவிடுவது மட்டுமே!

இந்தப் பாதையை இந்த வழிமுறையை தேர்ந் தெடுத்துக் கொண்டவர்கள், வெற்றி பெற்று ஈடேற்றத்தை அடைந்து விடுகிறார்கள். தற்காலிகமான இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு வருகின்ற உண்மையான உயிர் வாழ்க்கை, நிரந்தர மான ஓய்வு, நிலைத்திருக்கின்ற நிம்மதி, சாவில்லாத பெரு வாழ்வை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்த பாதையை புறக்கணித்து வேறு பாதையில் காலெடுத்து வைத்தவர்கள், வெற்றியை இழந்து நிரந்தரத் தோல்வியை தொடங்குகிறார்கள். அடுத்து வருகின்ற சாவற்ற நிரந்தர வாழ்வில் நரகத்தை அவன் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்.

3) இவ்விஷயங்கள் யாவும் ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுக்கு உணர்த்தப்பட்டு வந்துள்ளன. இந்த உணர்வுகளும் இந்த செய்திகளும் அவனுடைய அகத்தில் ஆரம்ப நாள் கொண்டே பதியப் பட்டுள்ளன. அதனை மீட்டெடுத்து அவனுக்கு நினைவு படுத்துவதற்காகவும் இறைவனின் பாதை இதுதான் என, பாதையில் கொட்டிக்கிடக்கின்ற கண்டதையும் அகற்றி, தெளிவுபடுத்தி நேர்ப்படுத்து வதற்காகவும்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மது ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் வரை ஏராளமான எண்ணற்ற இறைத்தூதர்களை அல்லாஹுத் தஆலா அனுப்பிக் கொண்டிருந்தான்.

வாய்மையை அடையாளம் காணுகின்ற, உணர் ந்து கொள்கின்ற, அதன் அடிப்படையில் வாழ்க்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அமைத்துக் கொள்கின்ற அறிவையும் பக்குவத்தையும் ஒருபுறம் மனிதனுக்கு அவன் கொடுத்திருந்தான்
.
இன்னொரு புறம் பார்த்தோமென்றால் நிகரற்ற இணையற்ற எண்ணற்ற அற்பணிப்புகளை செலுத்தி மனிதகுலத்தை இந்த நேர்வழியில் நெலுத்துவதற்கு இறைத்தூதர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லான்மாக்கள் யாவரும் கடுமையாக முயற்சித் திருக்கிறார்கள்.

நிலப்பரப்பு எங்கினும் ஒவ்வொரு சமூகத்திலும் இறைவின் தூதர்கள் வந்திருக்கிறார்கள். பொன்னான இந்த பெயர்ப்பட்டியலில் இறுதியாக முஹம்மது அரபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் திகழ்கிறார்கள். முழு உலகத்திற்குமான இறைவனின் தூதராக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். எல்லா காலத்திற்கும் உரிய தூதராக அனுப்பப்பட்டார்கள்.
.
அல்லாஹ்வின் மாபெரும் மார்க்கத்தை அதாவது இஸ்லாமை மக்களுக்கு முன்னால் எடுத்துச் சொன்னார்கள். இதற்கு முன்பு வந்த அனைத்து இறைத் தூதர்களும் எடுத்துக்சொன்னார்களே அதே இஸ்லாம்தான் அது!
.
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய அழைப்பை ஏற்று இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஒப்புக்கொண்டு இறைவனின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முன்வந்தவர்கள் ஓர் உம்மத்தாக சமூகமாக மாறினார்கள். இப்போது இந்த உம்மத்தின் மீது பொறுப்பு கூடிவிட்டது.

source:   https://www.facebook.com/syed.umari.7/posts/1262039267333799