Home இஸ்லாம் கட்டுரைகள் கொரோனா வைரஸை பொறுமையுடன் எதிர்கொள்வோம்!
கொரோனா வைரஸை பொறுமையுடன் எதிர்கொள்வோம்! PDF Print E-mail
Friday, 27 March 2020 07:35
Share

கொரோனா வைரஸை பொறுமையுடன் எதிர்கொள்வோம்!

      அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)     

கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் பீதியில் உரைந்துள்ளது. அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிட்டுள்ளது.  அதிகமான உயிரிழப்புக்களை உண்டு பண்ணி, மனித மனங்களை அப்படியே உசுப்பி விட்டுள்ளது.

இவ்வாறான சோதனைகளிருந்து மீள்வதற்கு இஸ்லாம் மிக அழகாக வழிகாட்டுகிறது. அதன் சோதனைகள் எமது நெஞ்சைத் தொட்டு, சிந்தனையில் பதிந்து, தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹுத்தஆலா இவ்வுலகை சோதனைகளும் நோய்களும் நிறைந்த களமாகவே ஆக்கியுள்ளான். நாம் இங்கு சந்திக்கின்ற அனைத்து வித இழப்புக்களுக்கும் இன்னல்களுக்கும் மகத்தான கூலியையும் நற்பேற்றையும் இன்னொரு மகத்தான நிரந்தர, அழிவற்ற வாழ்விற்காக சித்தப்படுத்தி வைத்துள்ளான்.

உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே! அவனது அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை. இதை நாம் முழுமையாக ஈமான் கொள்ள வேண்டும். ஆனால், மனிதன் கடலிலும் தரையிலும் அவன் மேற்கொள்கின்ற தவறுகளால் பல இழப்புகளைச் சந்திக்கின்றான்.

"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:155,156)

கொரோனா வைரஸை பொறுமையுடன் எதிர்கொள்வோம்!

      அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)     

– حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ – وَاللَّفْظُ لِشَيْبَانَ – حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- அ عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ .

ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸுஹைப், ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 7692)

முழு உலகையும் சூழ்ந்து பரவி அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்றுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இலட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் நொந்திருக்கின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் தேவைகளைக் கவனிக்கவோ தமது ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை காட்டவோ முடியாத அளவு நோய்த் தொற்று அச்சத்தினால், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

சிலர் விரக்தி மனநிலையில் காணப்படுகின்றனர். அன்றாடம் உழைத்து உண்போர் நிலைமையோ இன்னும் பரிதாபமாக உள்ளது. இவர்களது உடனடி அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாம் கரிசனையுடன் நடந்து கொள்வதோடு மட்டும் நின்று விடாது, அவர்களது உளவியல் ஆரோக்கியத்திலும் கவனம் எடுக்க வேண்டியது எமது கடமையாகும். நோயினால் அவதியுறும் அனைவரும் சுகம் பெற்று உன்னத நிலைக்கு மீண்டு வருவதற்கு வைத்திய முறைமைகளோடு அவர்களது உள ஆரோக்கியமும் மிக அவதானமாகக் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

எனவே, இத்தகைய பாரதூரமான நோய்த் தொற்று நிலைமைகளில் நாம் எத்தகைய உளப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்? என்பது பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டமே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் பீதியில் உரைந்துள்ளது. அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிட்டுள்ளது. பாரதூரமான உயிரிழப்புக்களை உண்டு பண்ணி, மனித மனங்களை அப்படியே உசுப்பி விட்டுள்ளது. இவ்வாறான சோதனைகளிருந்து மீள்வதற்கு இஸ்லாம் மிக அழகாக வழிகாட்டுகிறது. அதன் சோதனைகள் எமது நெஞ்சைத் தொட்டு, சிந்தனையில் பதிந்து, தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹுத்தஆலா இவ்வுலகை சோதனைகளும் நோய்களும் நிறைந்த களமாகவே ஆக்கியுள்ளான். நாம் இங்கு சந்திக்கின்ற அனைத்து வித இழப்புக்களுக்கும் இன்னல்களுக்கும் மகத்தான கூலியையும் நற்பேற்றையும் இன்னொரு மகத்தான நிரந்தர, அழிவற்ற வாழ்விற்காக சித்தப்படுத்தி வைத்துள்ளான். இழப்புகளின் போது இடிந்து, துவண்டு விடாது நிலையான மறுமைப் பேற்றை அடைந்துகொள்ள ஓர் இறை விசுவாசியின் வாழ்வில் பொறுமைப் பண்பும் மனத்திடமும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நமது பகுத்தறிவைப்பயன்படுத்தி காரண காரியங்களோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு, இறை உதவியையும் மன்னிப்பையும் வேண்டி பொறுமையின் மூலம் நாம் மீண்டு, உன்னத நிலையை அடைய முடியும்.

உலகில் மனிதர்கள் பலவிதமான இழப்புக்கள், துன்பங்கள், இன்னல்கள் நோய்கள் போன்றவற்றைச் சந்திக்கின்றார்கள். இவை, நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வருவதில்லை. அழிவுகளும் தாக்கங்களும் அனைவருக்குமே ஏற்படுகின்றன. அதேபோல், வறுமை, நோய், துன்பம் என்பனவும் எத்தகைய பாகுபாடுமின்றி அனைவரையும் அடைகின்றன. ஏன்? அது காபிர் – முஸ்லிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது.

நபிமார்களின் வரலாற்றை ஆராயும் போது, அங்கே அவர்கள் நோய், கஷ்டம், துன்பம், வேதனை, இம்சை போன்றவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தூதுத்துவப் பணியைப் புறக்கணித்து, எதிர்த்து நின்றவர்களும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள். சில நபிமார்களும், நல்லவர்களும் கூட கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது தூய பணியை எதிர்த்து நின்ற கொடூர புத்தி கொண்ட பிர்அவ்ன், ஹாமான், அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களும் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, துயரங்கள், நோய்கள் அனைவரையும் அடையும் என்ற ஓர் உண்மையை இவ்வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

கொரோனோ வைரசும் அனைவரையும் சேர்த்தே பாதித்துள்ளது. எனவே, இதுபோன்ற இன்னல், சோதனை போன்ற உலகியல் நிகழ்வுகளை வைத்துப் பாதிக்கப்பட்டவர்களை தீயவர் என்று கூறுவது இஸ்லாம் அனுமதிக்காத நிலைபாடாகும்.

நோய்த் தொற்றால் இறந்தவர்களில் எத்தனையோ பேர் பச்சிளம் பாலகர்கள் நல்லவர்கள் இருக்கலாம். அதே போல், இவ்வழிவு நல்லவர்கள்-தீயவர்கள், முஸ்லிம்-காபிர் என்ற வேறுபாடுகளைக் கடந்து, ஒவ்வொரு நாட்டிலும் பல வீடுகளின் கதவுகளை தட்டியுள்ளது. எனவே, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அல்லாஹ்வினால் தண்டனைக்குட்பட்டவர்கள் என்று உதாசீனப்படுத்திப் பேசிவிடமுடியாது. இழப்புக்குள்ளாகி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் நல்லவர்கள், அறப்பணி புரிந்தவர்கள். அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று நாம் எண்ணினால், இழிவாகப் பேசினால், இதைவிடப் பாரதூரமாக சோதிக்கப்பட்ட நபிமார்களையும் இழிவுபடுத்திய பட்டியலில் தான் நாம் சேர்க்கப்படுவோம்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நல்லவன்-கெட்டவன் என்று தீர்மானிக்கப்பட்டு, கூலி வழங்கப்படுகின்ற ஒரு நாள் அல்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தான் உண்மை நிலை வெளிப்படும். இவர்கள் பற்றித் தீர்ப்புக் கூறியவனை விட சில போது, தீர்ப்பளிக்கப்பட்டவன் சிறந்தவனாக அங்கு நிறுத்தப்படலாம். ஒவ்வொரு மனிதனும் அவனது எண்ணம், செயற்பாடுகளுக்கு ஏற்றவாறே கூலி வழங்கப்படுவான். மனித மனங்களின் நிலை பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆகவே, இவ்வாறான கோர நிகழ்வுகளை வைத்து உலகில் யாரும் யாருக்கும் தீர்ப்பு வழங்கிட முடியாது. இதில் பாதிக்கப்பட்டு, பரிதவித்து நிற்கும் எம் சகோதர நெஞ்சங்களின் உணர்வுகள் கொச்சைப் படுத்தப்பட்டு விடக்கூடாது. அவர்களுக்கு ஆறுதலும், அரவணைப்பும், உந்துதலும் அளிப்பது எமது கடமையாக உள்ளது.

”யார் ஒரு முஃமினுடைய இவ்வுலகத் துயரங்களில் ஒரு துயரத்தை நீக்கிவிடுகிறாரோ அவருக்கு மறுமை நாளின் துயரங்களில் ஒரு துயரத்தை அல்லாஹ் நீக்கிவிடுகிறான். இன்னும், யார் கஷ்டப்படும் ஒருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவரது விசயங்களை இலகுபடுத்துகிறான். மேலும், யார் ஒரு முஸ்லிமின் (குறையை) மறைக்கிறோரோ அல்லாஹ் அவரின் (குறையை) இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி புரியும் காலமெல்லாம், அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே! அவனது அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை. இதை நாம் முழுமையாக ஈமான் கொள்ள வேண்டும். ஆனால், மனிதன் கடலிலும் தரையிலும் அவன் மேற்கொள்கின்ற தவறுகளால் பல இழப்புகளைச் சந்திக்கின்றான்.

ஆழமான ஈமானினால் இதயம் நிரம்பியவன் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, தனக்கு ஏற்பட்ட இழப்புக்காக, பொறுமையை மேற்கொண்டு, இன்னொரு உன்னத இலட்சியத்தை நோக்கி இன்முகத்தோடு மெல்ல நகர்கின்றான். காபிர் அதிர்ந்து போகின்றான். முஃமின் துன்பத்திலும் சிரிக்கின்றான். இங்கு தான் ஈமானுக்கும் குப்ருக்குமிடையிலான பிரிகோடு மிகத் தெளிவாக வெளித்தெரிகிறது. நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ் இந்தப் பேருண்மையைத் தான் தெளிவுபடுத்துகின்றது.

“ஓர் இறை விசுவாசியின் விடயம் ஆச்சரியமானது. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவுதான். இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்கு, தீமை ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸுஹைப் இப்னு ஸினான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நோயினால் துன்பம் ஏற்படும்போது, முஃமினின் உளப்பண்பு எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்பதை மிகத் துல்லியமாக நபியவர்கள் இங்கு உணர்த்தியுள்ளார்கள். இந்த நோய் அச்ச சூழ்நிலையில் ஈமானிய உணர்வுடனும் உயிர்த்துடிப்புடனும் உறுதி குலையாது, சத்திய வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதுவே ஈமானியப் பண்பு என்றும் சிலாகித்துள்ளார்கள்.

பொறுமை, எல்லா நிலையிலும் மனிதன் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களில் மிக முக்கியமானது. அத்தோடு உலக வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்த்தி, ஏக்கம், ஏமாற்றம், திடீர் அச்ச சூழ்நிலைகள், உணவுத் தட்டுப்பாடு, நோய் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து ஒரு முஸ்லிமைப் பாதுகாப்பது அவன் கடைப்பிடிக்கும் பொறுமைப் பண்பே.

இறை விசுவாசத்தைத் தன் இதயத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்வில் எல்லாவேளைகளிலும் பொறுமைப் பண்பு அதிக முக்கியத்துவத்தைப் பெறுவதோடு, அதனை முக்கிய வணக்க வழிபாட்டு அம்சமாகவும் இஸ்லாம் எடுத்தியம்புகிறது. முஸ்லிமுடைய இகபர இன்பத்திற்கு மூல முகாந்திரமாய் நின்று, அவனை வழி நடாத்திச் செல்லும் ஓர் ஒளி விளக்காகவே பொறுமை திகழ்கிறது. “பொறுமை என்பது பிரகாசமாகும்” (முஸ்லிம்) என்ற நபிமொழி, வாழ்வில் துன்ப இருள் சூழ்ந்து கொள்ளும்போது, பொறுமை ஒளியை விளக்காக்கி, அவனை முன்னோக்கி நகர வழிகாட்டுகின்றது.

ஓர் இறைவிசுவாசியைப் பொறுத்தவரை, பொறுமை எனும் பன்பு அவன் தன்னுடைய வாழ்க்கையை உன்னத ஓர் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஓர் ஒளி விளக்காகவே ஆக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுமையை, இயக்கும் கலங்கரை விளக்காக ஏற்காது விட்டால், தனது வாழ்க்கைப் பாதையில் தோல்வியைச் சந்திப்பதோடு, அல்லாஹ்வின் முன்னிலையில் கைசேதத்திற்கு உள்ளாக நேரிடும்.

உண்மையாக, உறுதியாக அல்லாஹ்வை விசுவாசித்தவன் துன்ப-துயரங்களைக் கண்டு விரண்டோடக் கூடாது. துவண்டு விடவும் கூடாது. எல்லா நிலையிலும் பொறுமையுடன் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில், வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்வதில் வெற்றியடைய வேண்டும். வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், வலிகள், இழப்புக்கள் உறுதியற்ற உள்ளத்தைச் சுமந்தவனை, பொறுமைப் பண்பு அற்றவனை நடைப்பிணமாக ஆக்கிவிடும். ஆனால், பொறுமையுடன் அல்லாஹ்வின் அருட் பாக்கியங்களை ஆசை வைப்பவனுக்கு மட்டும் அல்லாஹ் சுபசோபனம் அளிக்கிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155,156)

இன்று மக்கள் உணவுக்காகவும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் முன்டியடிக்கின்றார்கள். மருந்துப் பொருட்களுக்காக காத்துக் கிடக்கின்றார்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் நாடுகள் பல அநியாயமாக வல்லாதிக்கவாதிகளால் தாக்கப்படும் போது, இதே நிலையை பல்லாயிரம் சிறுவர்கள் முதியவர்கள் , பெண்கள் போன்ற பலர் அவர்களது நாடுகளில் இதே நிலையை அனுபவித்தார்கள். இன்று, கொரோனா வைரஸ் அவர்களின் வலியை உலகிலுள்ள அனைவரையும் நன்கு உணர வைத்துள்ளது. அவர்களது வலியை உலகம் கண்ட கொள்ள மறுத்தது. இப்போது, அனைவரும் வேதைப்படும் போது, அவர்களின் கஷ்டங்களை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு பயம், நோய், பசி, பட்டினி என்பன ஏற்படும் போதும், பாரிய அனர்த்தங்களாலும் எதிரிகளாலும் செல்வம், வீடு, சொத்து போன்றவை அழிந்து போனாலும், நேசித்த உறவுகளின் உயிர் பறிக்கப்பட்டாலும் பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு நற்செய்தி உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே, நாம் ஓர் உண்மையை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் உலகில் பிறக்கும் போது, எதுவும் இல்லாமல் வந்தோம். அல்லாஹ் நமக்கு அனைத்து அருட்களையும் அதிகமாகவே தந்தான், அனுபவித்தோம். இப்போது, சோதிக்கப்படுகின்றோம். இதைப் பற்றி எதிர் விசாரணை செய்வதற்கு எமக்கு அதிகாரம் இல்லை. எனவே, நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொறுமை செய்வோம். துணிச்சல் மிக்க, பொறுமையின் சிகரமாக விளங்கிய ஒரு பெண்மணியின் பின்வரும் செயற்பாடு எமது கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.

“அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் (சிறு குழந்தை) கடும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். குழந்தையின் உயிர் பிரிந்தது. அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வீடு வந்ததும், என் மகன் என்ன செய்கிறான்? என்று (மனைவி) உம்மு ஸுலைமிடம் கேட்டார். அவர்தான் குழந்தையின் தாய். அதற்கவர், குழந்தை முன்பைவிட நிம்மதியாக இருக்கிறது என்று கூறிவிட்டு இரவு உணவை அவருக்கு வைத்தார். அவர் உணவருந்தினார். பின்னர் தன் மனைவியுடன் உறவு கொண்டார். பின்னர் அவர் ஓய்வெடுத்தார். குழந்தையை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்றார் உம்மு ஸுலைம். காலையில் எழுந்ததும் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று விபரத்தைக் கூறினார். அதற்கவர்கள் இரவில் நீங்கள் இருவரும் உறவு கொண்டீர்களா? என்று கேட்டார்கள். ஆம்! என்றார் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு. (அப்படியாயின்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் பாலிப்பானாக! (அதன் மூலம் சிறந்த குழந்தையை வழங்குவானாக) என்று பிரார்த்தித்தார்கள்.

பின்னர் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். உடனே அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு பேரீத்தம் பழங்களோடு குழந்தையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்க, ஆம்! பேரீத்தம் பழங்கள் உள்ளன என்றபோது, அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்து தங்கள் வாயில் மென்று குழந்தையின் வாயில் புகட்டிய பின்னர் குழந்தையை அசைத்தார்கள். அத்தோடு குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்”. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

இது ஒரு புரட்சிகரமான, பொறுமையின் இமயத்தில் நின்று செயற்பட்ட, ஓர் உன்னதமான பெண்மணியின் நடவடிக்கை. இன்றைய தாய்மார்களுக்கு உம்மு ஸுலைமிடம் நிறைய கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன.

இத்தகைய பொறுமையாளர்களைப் பற்றியே அல்லாஹ் பின்வருமாறு வியந்துரைக்கின்றான்.

அவர்கள், தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள், தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள், நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதியென்னும்) நல்ல வீடு இருக்கிறது. (அல்குர்ஆன் 13:22)

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் கஷ்டங்களைக் கண்டு அஞ்சிப் பதுங்கி விடாத, இறை நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு, அல்லாஹ்வின் பக்கம் மீள வேண்டும். முஸ்லிமாக வாழ்கின்ற போது, கஷ்டங்களும் கடுமையான இழப்புக்களும் ஏற்படவே செய்யும். இது, இஸ்லாமிய வரலாறு தரும் பாடம். இறை விசுவாசி சோதனைகளையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ளாமல் அல்லாஹ்விடத்தில் வெற்றி பெற்றிட முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

நிச்சியமாக அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். உண்மையுரைப்பவாகளையும் இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சியமாக நன்கு அறிவான் (அல்குர்ஆன் 29:2-3)

ஒரு முஃமின் வாழ்வு சோதனை மிக்கதே. பொறுமைப் பண்பு அவனை வாழ்வின் தடுமாற்ற நிலையிலிருந்து விடுவித்து சீரிய, நேரிய வாழ்வின் பக்கம் அவனை அழைத்துச் செல்கின்ற ஓர் உயர்ந்த சாதனமாக உள்ளது. அத்தோடு, துன்பங்களின் போது, அவன் தீய முடிவுகளை எடுத்து, தனது வாழ்வைத் தானே அழித்து விடாது, தடுத்து நிறுத்திக் காப்பாற்றுகின்ற ஒரு பலமான கேடயமாகவும் அமைகிறது.

இறை நிராகரிப்பாளர்களின் வாழ்வு அர்த்தமற்றது. அவர்கள் பிறந்ததற்காக வாழ்கின்றார்கள். முஃமின் அவ்வாறானவன் அல்லன். அவன் உலகில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய பொறுப்புக்களைச் சுமந்தவன். அவன் அத்தனை சோதனைகளையும் வெற்றி கொண்டு அல்லாஹ்விடம் கூலியைப் பெற வேண்டும். நாங்கள் முஃமின்களாக இருப்பதால் தான் எம்மை அதிகம் சோதனைகள் ஆட்கொள்கின்றன.

முஃமின்களாக இருந்த அனைவரும் சோதிக்கப்பட்ட வரலாற்றையே அல்குர்ஆன் அதிகமாகக் கூறுகின்றது. இறை மறுப்புக் கோட்பாட்டில் மூழ்கியிருந்த போது, அதனைத் தடுத்த எமது முன்னோர் அதிகமாகவே சோதனைக்குட்பட்டுள்ளனர். அதன் போது பொறுத்தவர்களுக்குக் கூலியும் நிறைவாக வழங்கப்படவுள்ளது என்று வாக்களிக்கப்பட்டும் உள்ளது.

“அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.” (அல்குர்ஆன் 76:12)

உலக வாழ்வின் யதார்த்தத்திலிருந்து கண்களை இறுக்கி மூடிக்கொள்பவன் இவ்வாறான இடர்கள் எதிர்ப்படும் போது, தட்டுத் தடுமாறுகிறான். எனவே, கவலையாலும் அச்சத்தாலும் துவண்டு விடாது ஈமானியப் பலத்துடன் தைரியமாக முகம் கொடுக்க வேண்டியவன் மூலையில் முடங்கிவிடக்கூடாது. உண்மையான முஃமின் கோழையாக இருக்க மாட்டான். அவனது பொறுமைக்காகவும் மன உறுதிக்காகவும் அல்லாஹ் கணக்கின்றி கூலி வழங்குகின்றான்.

“(நபியே) நீர் கூறும் ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள். இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது. பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சியமாகக் கணக்கின்றி பெறுவார்கள்.” (39:10)

எனவே, முஃமின் தனக்கு உலகில் நலவு ஏற்பட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி பாராட்டுகிறான். அவனைத் துதித்துப் பிரார்த்தனை செய்கின்றான். இவன் செற்பாடு கண்டு அல்லாஹ் ஆனந்தம் அடைந்து, அருள் வாசல்களைத் திறந்து விடுகிறான். அதே போல், துன்பம் ஏற்பட்டால் பொறுமை செய்து, அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்று உறுதியாக நம்புகிறான். அப்போதும், அல்லாஹ் அடியானுக்கு அவனது உறுதிக்காகவும் ஈமானிய பலத்திற்காகவும் கூலி வழங்குகிறான்.

முஃமினானவன் தனக்கு இழப்பும் சோதனையும் ஏற்படும்போது, அல்லாஹ்வின் பக்கம் மீண்டு தனது பாவங்களுக்காக ‘தவ்பா’ செய்கிறான். அல்லாஹ்வின் கருணைகள் அவன் மீது சொரிய ஆரம்பிக்கின்றன. இவ்வுயரிய பண்பை ஈமான் இல்லாதவர்களிடம் காண முடியாது. இதன்படிதான் நாம் தெளிவுரைக்காக எடுத்த ஹதீஸில் நபியவர்கள் “முஃமினின் விடயம் ஆச்சரியமானது” என்று கூறினார்கள்!

சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒருவர், அவற்றைத் தாங்கிக் கொண்டு சாதனை படைக்கும் போது, அவரது இறை நம்பிக்கை புடம்போடப்பட்ட தங்கமாகத் தூய்மை அடைகிறது. இத்தகைய நிலை ஈமானிய இதயங்களுக்கே உரித்தானது. சிலபோது, நோய்த் தொல்லையிலிருந்து விரைவாக விடுபடுவது சிரமம் நிறைந்ததாகவும் ஆகிவிடுகிறது. இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து நாம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியது எமது கடமையாகவுள்ளது.

அன்றாடம் உழைத்து உண்பவர்கள் ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளதால் அவர்களுக்கு உணவளித்து, எல்லாவகையிலும் உதவுவது மார்க்கக் கடமையாகும். மற்றவர்களது கஷ்டங்களை நீக்கும் போது, நமது கஷ்டங்களை அல்லாஹ் நீக்கி அருள்வான்.

அத்தோடு, நோயை நீக்குபவன் அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உரிய மருத்துவம் செய்வதோடு அவனிடம் அதிகம் பிரார்த்தனை புரிய வேண்டும்.

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

நாம் எத்தகைய தீமை செய்தவர்களாக இருந்தாலும் அவனிடமே பிரார்த்திப்போம்! ஏனெனில் யூனுஸ் நபி பிரார்த்தனை செய்து அதை அல்லாஹ் அங்கீகரித்ததை அல்குர்ஆன் கற்றுத் தந்துள்ளது.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ

”உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே, நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (அல்அன்பிய்யா 87-88)

நோயாளியை நலம் விசாரிப்பது மார்க்கக் கடமை என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதை தற்போதைய நிலையில் வைத்திய ஆலோசனைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும்.

اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹ்வே! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! (ஆதாரம்: புகாரி 6743) என்று பிரார்த்திப்போம்.

நோயாளியின் உடலில் கையை வைத்து بِاسْمِ اللهِ என்று மூன்று தடவை கூறி விட்டு

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 4082)

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்   எனக் கூறலாம். (ஆதாரம்: புகாரி 3616)

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ

இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! (ஆதாரம்: புகாரி 5671, 6351)

நோய்த் தொற்றுக்கு உள்ளான மக்களில் பலர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தனிமைப்படுத்தல், எவரையும் உள்ளத்தால் பாதிப்படையவே செய்யும். இதனால் பலர் விரக்தி நிலையிலேயே இருப்பர். நொந்து போயுள்ள இத்தகைய உள்ளங்களுக்கு ஒத்தடம் நிச்சியமாகத் தேவையாக உள்ளது. அதுவே, உடனடித் தேவையாகவும் உள்ளது.

எனவே, உதவியாளர்களும் உறவினர்களும் அத்தியாவசிய சேவையாற்றுவேறும் வைத்திய சேவை செய்வோரும் அவர்களது உடனடித் தேவைகளுக்கு உதவி புரிந்து விட்டோம் என்று மட்டும் நினைத்துவிடாது, மருத்துவ முறைமைகளுடன் மனதாலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களுடன் மருத்துவ ஆலோசனைப்படி இடைவெளியைப் பேணுவதோடு, உளவளத் துணையும் வழங்கவேண்டும்.

இஸ்லாத்தின் நெறி நின்று நோயாளர்களுக்கு ஆறுதல் அளிப்பது மாபெரும் ஆரோக்கிய நிலையை நிச்சியம் ஏற்படுத்தும். அத்தகைய ஒரு பணியையும் நிச்சியம் செய்து எமது சகோதர மனித உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுப்போம்! பழைய நிலைக்கு அவர்களை மீட்டெடுப்போம்!! அல்லாஹ்வே நோயைச் சோதனையாகத் தருபவன் . அவற்றை நீக்கி குணப்படுத்துபவனும் அவனே! எனவே, உலகைப் பீடித்துள்ள இந்த கொடூர கொரோனா வைரஸை பொறுமையோடு உரிய முறையில் எதிர்கொண்டு, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அதிலிருந்து அவனது பாதுகாப்பைப் பெறுவோம்.

source: http://www.islamkalvi.com/?p=123829