Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ (அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்!
(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்! PDF Print E-mail
Sunday, 01 March 2020 19:15
Share

(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்!

வெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் ஜமாஅத் உலமா சபையின் "ஹிக்மத்" இல்லாத அணுகுமுறை!

கூழாங்கல்லை வைரமென்று நினைத்து ஏமாறும், மதிப்புமிக்க ஆலிம்களின் நிலை இந்தளவு கீழிறங்கியிருக்க வேண்டாம்.

ஆலிம்கள் அரசியலில் இன்னும் அப்பாவிகளாகவே இருப்பது வேதனையான விஷயமே!

ரஜினி அரசியல்வாதி அல்ல, நடிகர் மட்டுமே! அரசியல்வாதியாக (வாழ்க்கையில்) நடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர், அவ்வளவே!

ரஜினி, அரசியலில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பது போன்ற நிலை ஆலிம்களுக்கு ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆலிம்களின் மதிப்பை அல்லாஹ் காப்பாற்றுவானாக.

ரஜினி, தானாக  உலமாக்களை அழைக்க வாய்ப்பில்லை, அவரை இயக்குகின்ற கூட்டத்தின் யோசனையாகத்தான் இருக்கமுடியும் என்று எப்படி அனுமானிக்கக்கூட தெரியாமல் போனார்கள் என்பது ஆச்சரியம்!    பி.ஜே.பி.யின் வலையில் தானாகப்போய் மாட்டிக்கொள்ளும் செயலே அல்லாமல் வேறல்ல இது.   நம் கையை கொண்டே நம் கண்ணை குத்தும் சூழ்ச்சி என்பதைகூட புரிந்துகொள்ள முடியாமல் போனது இன்னும் வியப்பையளிக்கிறது.

ரஜினியைப்பொருத்தவரை அவர் பி.ஜே.பி.யால் ஆட்டிவைக்கப்படும் ஒரு பலூன் பொம்பை. பத்துவருடங்களுக்குமுன் இருந்த ரஜினியின் செல்வாக்கு இப்போது அவருக்கு இல்லை. ஊடகங்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஊதி பெருக்கவைக்கப்படும் பலூன் தான் இன்றைய ரஜினி. அவரிடம் எந்த கொள்கையும் இல்லை. எம்.ஜி.ஆரைப்போல் மக்களுக்கு உதவும் எண்ணமுள்ள மனிதரும் அல்ல அவர்.

அரசியலுக்கு சற்றும் லாயக்கற்ற அவரை சில அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவு அவருக்கு இன்னும் இருப்பதாக ஊடகம் கட்டிவிட்ட மாய பிம்பத்தில் அவர்களும் ஏமாறுகிறார்கள். புதிதாக இப்போது ஆலிம் சமூகமும் ஏமாளியாக தயாராகிவிட்டது. 

தமிழர்களின் எந்த ஒரு நல்லதுக்காகவும் அவர் துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. ஆனால் ஊடகங்கள் அவர் மூச்சுவிட்டாலும் அதை செய்தியாக்கி அவரது போலியான பிம்பத்தை உண்மைப்போல் காட்டி மக்களை ஏமாற்றுவதையே ஊடக தர்மமாக வரித்துக்கொண்டு விட்டனர்.

சினிமா படத்தில் கதாசிரியர் எழுதிகொடுத்த வசனங்களைப் பேசி அனுபவப்பட்டவர் சில மேடைகளில் சில வசனங்களை பேசுவது ஒன்றும் புதியதல்ல, அது அவர் அறிவாளி என்பதற்கான சான்றுமல்ல. ஆனால் நாட்டை நாசப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் ஊடகங்கள் அவரை அறிவாளியாக சித்தரித்து தங்கள் பையை நிரப்பிக்கொள்கின்றன. இதுதான் உண்மை.

ஆலிம்களின் இந்த சந்திப்பு, உயிரைக்கூட துச்சமாக நினைத்துப் போராடும் வீர மங்கைளின் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் ஆபத்து உண்டு. அவர் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதால் போராட்டம் திசைதிருப்பப்படும் ஆபத்தே அதிகம்.  

ஆலிம்களே நல்லது செய்யாவிட்டாலும் தீமைக்கு துணை புரியாதீர்கள். ரஜினி RRS-ன் அங்கத்தினர் இல்லையென்றாலும் அவர் அவர்களுக்கு அடிமை அவர். RSS-ஆல் ஆட்டுவிக்கப்படும் பம்பரமே ரஜினி என்பதை எவ்வாறு மறந்தீர்கள்?

'அவர்' அழைத்தாராம்... இவர்கள் உடனே போய் சந்தித்தார்களாம். எவ்வளவு பெரிய இழுக்கு! இங்கு முன்னால் ஜமா அத்துல் உலமாவின் தலவரும், நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிருமான S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத்  (ரஹ்மதுல்லாஹி அலைஹி)    அவர்களின் அணுகுமுறை நினைவுக்கு வருகிறது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ரோமிலிருந்து போப்பான்டவர் சென்னைக்கு விஜயம் தரும் நிகழ்ச்சியில் மற்ற மதகுருமார்களைப்போல் S.R.S.ஹஜ்ரத் அவர்களும் கலந்துகொள்ளும்படி அழைப்பு வருகிறது. ஹஜ்ரத் அவர்கள் வர இயலாது என்பதை அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சரே அழைக்கிறார், எவ்வளவு பெரிய வாய்ப்பு! ஏன் தவர விடுகிறீர்கள்? என்று நட்புகள் கேட்கும்போது ஹஜ்ரத் அவர்கள் சொன்ன பதில் ஒவ்வொரு ஆலிமுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஓர் படிப்பினை.

ஆம், S.R.S.ஹஜ்ரத் சொன்னார்கள்; "போப் அந்த நிகழ்ச்சி அரங்கிற்குள் வருகை புரியும்போது முதலமைச்சர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பார்கள், நானும் எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரும்போதுகூட எழுந்து நிற்க இஸ்லாமில் அனுமதி நமக்கில்லை எனும்போது சாதாரண மனிதரான போப் வருகை புரியும்போது நான் எப்படி எழுந்து நிற்க முடியும்? அதன் காரணாகவே அங்கு செல்வதை தவிர்த்தேன்" என்றார்கள். ஆலிம்களின் கண்ணியத்தை உயர்த்திய S.R.S. ஹஜ்ரத் அவர்கள் எங்கே? இவர்கள் எங்கே?

எதை செய்யவேண்டுமோ அதை எந்த ஒரு ஆலிமும் செய்யத்தவறிக் கொண்டே இருக்கின்றீர்கள். ஆம், இஸ்லாமிய சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு ஒரு அடிகூட எடுத்துவைக்க மறுக்கின்றீர்கள். அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும், இயக்கங்களையும் ஒன்றாக அழைத்து பேசுவதற்கான யோசனைகூட இதுவரை உங்கள் எவரிடமும் தோன்றாதது இஸ்லாமிய சமூக மக்கள் செய்த பாவமோ என்னவோ தெரியவில்லை.

முஸ்லிம் சகோதரர்கள் அனைவரையும் அரவணைத்து பேசுவதில் என்ன தயக்கம், தடங்கள் இருக்கமுடியும் உண்மையான முஃமினுக்கு? "உங்களது வெற்றி நீங்கள் ஒன்றுபடுவதில் மட்டுமே உள்ளது. அதில் மட்டுமே உங்கள் வெற்றியும் உள்ளது." இறைவேதத்தின் வழிகாட்டுதலை உங்களுக்கு நான் புரியவைக்கவேண்டிய அவசியமில்லை. அதில் கறைகண்ட நீங்கள் அதில் செயல்படுத்துவதில் மட்டும் முனைப்பு காட்ட மறுப்பது நியாயம் தானா?

அ(க்)கீதா வேறுபாடுகளியெல்லாம் தள்ளிவைத்துவிட்டு உண்மையான அக்கரையுடன் த.மு.மு.க. TNTJ., ம.ஜ.க.  STPI. இன்னுமுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் அழைத்து ஒன்றுகூடிப் பேசுங்கள். உங்கள் ஈகோவை நடுக்கடலில் தூக்கி வீசுங்கள். உண்மையான சமூக அக்கரையுடன் செயல்படவேண்டிய நேரமிது. இல்லையென்றால் நீங்களனைவரும் மக்களை காப்பாற்றத்தவறியவர்களாக மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் தலைகவிழ்ந்து நிற்கும் நிலைக்கு ஆளாகும் கைசேதம் உண்டா இல்லையா?

இறைவேதத்தின், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை பெற்ற சமூகம், வழியிருந்தும் குருடனிடம் வழிகேட்பது வினோதமாக இருக்கிறது.

தெள்ளத்தெளிவான வழிகாட்டுதல் இருந்தும், அதை செயல்படுத்தாமல், சொர்ப்பொழிவு ஆற்றுவதிலும் அரசியல்வாதிகளைப்போல் ஆக்கரோஷமாக பேசுவதாலும் எந்த பலனும் கிட்டப்போவதில்லை. எந்த ஒரு தெளிவான வியூகமும் அமைக்கத்தெரியாத உங்களின் பலவீனமே நமது இஸ்லாமிய பெண்களை இன்று போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது என்பதை எண்ணி இனியாவது திருந்தி அனைத்து முஸ்லிம்களையும் ஓரணியில் அமைக்க முயற்சி எடுங்கள்.   இல்லையென்றால் இன்று ஷாஹின் பாக்கில் போராடும் அறிவார்ந்த பெண்களிடம் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

நமது ஒற்றுமை மட்டுமே இறை உதவியுடன் வெற்றியை நமக்களிக்கும் என்பதை நூறு முறையல்ல, ஆயிரம் முறை சொல்லிக்கொள்கிறேன். அல்லாஹ் துணை புரிவான்.

-M.A.Mohamed Ali