Home கட்டுரைகள் அரசியல் திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு?
திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு? PDF Print E-mail
Thursday, 27 February 2020 07:42
Share

திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு?

     முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.     

[ தடுப்பு முகாம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

"நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, படுத்தால் ஆறடி போதும்'' எனும் பாடல் வரிகளுக்கேற்ப, படுக்க ஆறடிகூடக் கிடையாதாம்.

படுக்க ''நான்கு அடி''தானாம். கால் நீட்டிப் படுக்க இயலாதாம்.

இதுதான் தடுப்புக் காவல் மையத்தின் நிலை என அங்கு தொல்லையை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள பெண் கூறுகிறார்.

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகர் மன்றத்தில் இந்தியாவின் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?

ச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மது கண்டனம் தெரிவித்துள்ளார்?

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்தது?

ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவின் அதீத தலையீட்டால் அத்தீர்மானம் நிறைவேற்றாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விளைவுகளும் கோரமுகமும் தெரியாமலா ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது?

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, வக்கீல்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சேர்ந்து போராட்டம் செய்கிறார்கள்?

இச்சட்டத்தின் ஆழம் புரியாமலா பல்வேறு நாடுகளிலுள்ள படித்த அறிஞர்களும் இளைஞர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்?

இச்சட்டத்தின் கொடுமை புரியாமலா, டெல்லியின் ஷாஹீன்பாக் எனுமிடத்தில் இரண்டு மாதங்களாக முகாமிட்டு பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?]

 திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு?

     முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.     

இந்திய நாட்டில் இது வரை வாழ்ந்து வருகின்ற ஒவ்வொருவரும், "நான் இந்தியன்தான்' என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்ற வினோதமான ஒரு சட்டத்தை இந்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் (2019) இயற்றியுள்ளது.

அன்று முதல் மக்கள் அந்தக் கருப்புச் சட்டத்திற்கெதிராக நாடு முழுவதும் போராடி வருகின்றார்கள். இந்திய நாடு முழுவதும் மட்டுமல்ல, பிற நாடுகளில் இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டத்தின்மூலம் அவர்கள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, பிற நாட்டு அதிபர்களும் இச்சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்கள்; தம் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மக்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தப் போராட்டத்தை வீரியமிழக்கச் செய்வதற்கான உள்ளடி வேலைகளையும் தில்லுமுல்லுகளையும் செய்து கொண்டிருக்கிறது அரசு. அத்தோடு போராட்டக்காரர்களை வெளிப்படையாகவே சுட்டுக் கொல்கிறது; அமைச்சர்கள் சிலரை ஏவி நாயைச் சுட்டுக் கொல்வதைப் போல் சுட்டுக் கொல்வோம் என்கிறது; போராட்டக்காரர்களைப் பகிரங்கமாகவே அச்சுறுத்தி வருகிறது.

மேலும் இது இந்திய மக்களைப் பாதிக்காது; இந்திய முஸ்லிம்களை அறவே பாதிக்காது என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அவ்வப்போது பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டிருக்கிறார். உள்துறை இணையமைச்சர் மூலம், "என்ஆர்சி-யை நாடு முழுக்கச் செயல்படுத்துவது குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவே இல்லை'' என்று அறிக்கைவிடச் செய்கிறார். ஆனால் சட்டத்தை முன்மொழிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படியானால் எப்படியும் இச்சட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்பதுதானே அரசின் நோக்கம்?

இதற்கிடையே இந்தக் கருப்புச் சட்டத்தின் வீரியத்தையும் பாதிப்புகளையும் அறியாத அப்பாவி முஸ்லிம்கள் சரியான முறையில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லைதானே? என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள். ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இயலாதவாறுதான் இந்தக் கருப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தற்போது நம்மிடம் உள்ள எந்த ஆதாரமும் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தகுதியான சான்றாக ஆகாது. நம்முடைய பெற்றோரும் தாத்தாவும் இங்கேதான் பிறந்தார்கள் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்தை நாம் நிரூபிக்க வேண்டும். சொத்துப் பத்திரம் உள்ளவர்கள் இதை நிரூபித்துவிடுவார்கள். மற்றவர்களெல்லாம் நிரூபிக்க முடியாமல் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டியதுதான். இச்சட்டமும் சில ஆண்டுகளுக்குத்தான். பின்னர் வேறு ஒரு சட்டம் இயற்றப்படும். தப்பித்துக்கொண்டவர்களெல்லாம் பிடிக்கப்படுவார்கள். இதுதான் இந்த ஃபாசிச அரசின் சதித்திட்டம்.

"முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டும்'' என்று பகிரங்கமாக அறிவிக்க முடியாது என்பதால்தான் இந்தக் கிடுக்கிப்பிடிச் சட்டம். இதிலிருந்து முஸ்லிம்கள் யாரும் தப்ப முடியாது. தொடக்கத்தில் சில இலட்சம் முஸ்லிம்களை மட்டும் குடியுரிமை இல்லாதவர்கள் என அறிவித்து, அவர்களை மட்டும் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பின்னர் உங்கள் குடும்பத்தில் யாராவது தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்களா? என்றொரு வினாவைத் தொடுத்து, ஆம் என்றால் உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறி அழைத்துச் செல்வார்கள். அவருக்குக் குடியுரிமை இல்லாதபோது உங்களுக்கு மட்டும் எப்படி வரும்? என்று கேட்டு அவர்களையும் தடுப்பு முகாம்களில் அடைப்பார்கள். இதுதான் அவர்களின் படிப்படியான திட்டம்.

சிலர் உரிய ஆவணங்களைக் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் அல்லவா? என்று யோசித்து, தம் ஆவணங்களைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்தோ பரிதாபம்! அவர்கள் இன்னும் அஸ்ஸாம் மக்களின் ஆவணங்களைப் பார்க்கவில்லை போலும்! அவர்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அப்படி இருந்துமே பத்தொன்பது இலட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தடுப்பு முகாம்களுக்கு ஏற்றிச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.

முப்பது ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய ஸனாவுல்லா என்பவருக்குக் குடியுரிமை இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அலீ அஹ்மதுவின் தம்பி மகன் குடும்பத்தினருக்குக் குடியுரிமை இல்லை.

அஸ்ஸாம் மாநில முன்னாள் துணை முதல்வர் சையது அன்வாரா என்பவருக்குக் குடியுரிமை இல்லை.

இவர்களிடமும் தக்க ஆதாரம் இல்லையா? அதனால்தான் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதா? ஆவணங்களைத் தயார் செய்வோர் சிந்திக்க வேண்டாமா?

இதற்கிடையில் தடுப்பு முகாம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

"நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, படுத்தால் ஆறடி போதும்'' எனும் பாடல் வரிகளுக்கேற்ப, படுக்க ஆறடிகூடக் கிடையாதாம்.

படுக்க நான்கடிதானாம். கால் நீட்டிப் படுக்க இயலாதாம்.

இதுதான் தடுப்புக் காவல் மையத்தின் நிலை என அங்கு தொல்லையை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள பெண் கூறுகிறார்.

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகர் மன்றத்தில் இந்தியாவின் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?

ச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மது கண்டனம் தெரிவித்துள்ளார்?

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்தது?

ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவின் அதீத தலையீட்டால் அத்தீர்மானம் நிறைவேற்றாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விளைவுகளும் கோரமுகமும் தெரியாமலா ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது?

இச்சட்டத்தின் விளைவுகள் தெரியாமலா, வக்கீல்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சேர்ந்து போராட்டம் செய்கிறார்கள்?

இச்சட்டத்தின் ஆழம் புரியாமலா பல்வேறு நாடுகளிலுள்ள படித்த அறிஞர்களும் இளைஞர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்?

இச்சட்டத்தின் கொடுமை புரியாமலா, டெல்லியின் ஷாஹீன்பாக் எனுமிடத்தில் இரண்டு மாதங்களாக முகாமிட்டு பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத்தான் இத்தகைய இனச் சுத்திகரிப்பு வேலையைச் செய்யத் துணிகிறார்கள் இந்த அக்கிரமக்காரர்கள். இலங்கையில் புத்த பிக்குகள் முஸ்லிம்களைக் கொன்றொழித்த நிகழ்வை மறக்க முடியுமா? சீன அரசு உய்கூர் முஸ்லிம்களைத் தடுப்புக் காவல் மையத்தில் வதை செய்வதை மறக்க முடியுமா?

இஸ்ரேல் ஃகாஸா முஸ்லிம்களை இலட்சக் கணக்கில் கொன்றதையும், தொடர்ந்து அக்கிரமங்கள் செய்து வருவதையும் மறக்க முடியுமா? பர்மாவில் புத்த பிக்குகள் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமையை மறக்க முடியுமா? இப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அநாதைகளாக, நாடோடிகளாக ஆக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. யாரெல்லாம் முஸ்லிம்களை அழிக்கின்றார்களோ அவர்களைத் தம் நாட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதும் அவர்களை அவர்களின் நாட்டிற்கே சென்று சந்திப்பதும்தான் நம் பிரதமரின் தலையாய பணி.

குடியுரிமைப் பதிவேட்டில் நம் பெயர் இடம்பெறவில்லையானால் நமக்கு எந்த உரிமையும் கிடைக்காதா? பாஸ்போர்ட்கூடக் கிடைக்காதா? என்று சிலர் அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தால் வேறு ஏதேனும் நாட்டிற்காவது சென்றுவிடலாமே என்பது அவர்களின் எண்ணம். ஆம். எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டுவிடும். முதன்முதலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும். பின்னர் ஒவ்வொன்றாக மறுக்கப்படும்.

தற்போதே பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது நாட்டின் குடியுரிமையை இழந்தபின் எந்த உரிமைதான் கிடைக்கும். உரிமைகள் மறுக்கப்பட்டு மனதளவில் சிதைக்கப்பட்டு, கடைநிலை மக்களாக நடத்தப்பட்டு, வாழும் சடலங்களாகத் திரிய விடுவார்கள். அப்போது முஸ்லிம்கள் தம் இறைநம்பிக்கை (ஈமான்) உடைய ஆற்றலையும் இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அத்தகைய வேளையில்தான் அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை மனிதன் சொல்லத் தொடங்குவான்.

அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் (மற்றொரு மனிதரின்) மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, அதன்மீது அவர் படுத்துப் புரண்டவாறு "அந்தோ! நான் இந்த மண்ணறையில் இருப்பவரது இடத்தில் இருக்கக் கூடாதா'' என்று கூறாத வரை உலகம் அழியாது. இ(வ்வாறு அவர் செய்வ)தற்கு, அவர் (வாழ்க்கையில்) சந்திக்கும் சோதனையே காரணமாக இருக்குமே தவிர, மார்க்கம் காரணமாக இருக்காது. (இப்னுமாஜா: 4027) வதை முகாமின் கொடுமையை அனுபவிப்போரின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளே வெளிப்படும்.

ஆட்சியாளர்கள் குடியுரிமைப் பதிவேடு எனும் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள். முன்னுக்குப்பின் முரணாக மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். எப்படியாகிலும் அதைச் செயல்படுத்தவே எத்தனிப்பார்கள். இவர்களின் நெஞ்சங்களில் மறைத்து வைத்துள்ள வஞ்சங்களைச் செயல்படுத்தவே முயல்வார்கள். "இறைவா! இவர்களின் ஆட்சியை அடியோடு அழித்தொழிப்பாயாக!'' என்று பிரார்த்தனை செய்வதே நம் கையில் எஞ்சியுள்ளது.

source: https://hadi-baquavi.blogspot.com/2020/02/blog-post_51.html