Home இஸ்லாம் கட்டுரைகள் ஈமானை பலப்படுத்துவது எப்படி?
ஈமானை பலப்படுத்துவது எப்படி? PDF Print E-mail
Saturday, 22 August 2009 15:02
Share

[ யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடைய ஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும். ]

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்:

(நபியே!) ''ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்'' என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 8, ஸூரத்துல் அன்ஃபால் வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்:

8:2 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.

8:4 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம்9, ஸூரத்துத் தவ்பா வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்:

9:124 ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால்,''இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?''என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.

9:125 ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 3, ஸூரத்துல் ஆல இம்ரான் வசனங்கள் 190-195 ல் கூறுகிறான்: -

3:190 நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

3:191 அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து,''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!''(என்றும்)

3:192 ''எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!'' (என்றும்;)3:193

''எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்;''எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!''(என்றும்;)

3:194 ''எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்;

''உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்''(என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

யார் ஒருவர் அளவற்ற அருளாளனின் எண்ணிலடங்காத அத்தாட்சிகளைத் தேடி, அவற்றைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து, தெளிவு பெற்று அவனின் நுண்ணறிவாற்றலைக் கண்டு வியந்தவராக இவைகள் அனைத்தையும் இறைவன் வீண் விளையாட்டுக்காக படைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறாரோ அப்போது அந்த நம்பிக்கை நிச்சயமாக அவருடைய ஈமானையும் அதிகரிக்கும்.

யார் ஒருவர் நிற்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக அவன் நமக்கு அளித்திருக்கும் அளவற்ற நிஃமத்துக்களை, அருள்களை பற்றி சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்த முயல்கிறாரோ அப்போது அது அவருடைய ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

அடுத்ததாக ஒருவருடைய இதயத்தில் இறை நினைப்பை அதிகரித்து ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்து நம்மை இறைவனுக்கு மிக நெருக்க மாக்கி வைக்கும் மிக மிக முக்கியமான செயல் என்ன வெனில்,

மிகுந்த சிரத்தையுடன் அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாளனாகிய அல்லாஹ் நமக்கு வழிகாட்டியாக அருளிய அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அது கூறும் நல்லுபதேசங்களைப் பின்பற்றி அது விலக்கும் செயல்களை விட்டும் விலகியிருத்தல் ஆகும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 89 ல் கூறுகிறான்:

16:89 மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 14, ஸூரத்து இப்ராஹீம் வசனங்கள் 1-2 ல் கூறுகிறான்:

14:1 அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).

14:2 அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.

வெறுமனே சில குர்ஆன் ஆயத்துக்களை ஓதுவதாலோ அல்லது பொருளறியமல் சில துஆக்களைக் கேட்பதாலோ ஒருவருடைய தீமையான காரியங்கள் அவரைவிட்டும் அகலாது, மேலும் அவைகள் அவருடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கவோ செய்யாது.

ஆனால் யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக் கொண்டவராக அவர் தன்னுடைய இறைவனின் சீரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறாரோ அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல்களும் மன்னிப்பும் கிடைக்கும். மறுமையில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆனால் இது ஒருவர் உண்மையாகவே அதிக சிரத்தையுடன் முயற்சி செய்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இறைவழியில் முழுமையாக அர்பனித்துக் கொண்டால் மட்டுமே மறுமையில் நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நேர்வழியை அடைவதற்கு வழிவகுக்கும்.

ஒருவரை அவர் தொடர்ந்து தவறுகள் செய்வதிலிருந்தும் தடுக்கக் கூடிய சக்தி எதுவென்றால் அவர் எந்நேரமும் தக்வா (இறையச்சமுடன்) இருப்பதுவேயாகும். அதாவது தவிர்க்க முடியாத நாளில் நம்மைப் படைத்த இறைவன் முன்னே நிறுத்தப்படுவோம், அவனுடைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நாம் இவ்வுலகில் தீய செயல்கள் புரிந்தால் தண்டணை கிடைக்கும் என்ற அச்சத்துடன் எப்போதும் நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக அது நம்முடைய வாழ்க்கையை சீராக்கி, வாழ்நாள் முழுவதும் மறுமை வாழ்வுக்கு தேவையான நற்கருமங்களைச் செய்வதற்கு அது நம்மைத் தூண்டும்.

இந்த இறையச்சமே இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல்களை செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கும்.

நிச்சயமாக அது மனிதர்களின் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வதற்காக மனிதர்களைப் படைத்த இறைவன் அருளிய அருள் மறையாம் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அதன் படி வாழ முயற்சிப்பதே ஆகும்.

யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடைய ஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும்.

''Jazaakallaahu khairan'' சுவனத்தென்றல்