Home கட்டுரைகள் குண நலம் மாணவர்கள் தரும் விபரீத பாடம் - Dr. ஃபஜிலா ஆசாத்
மாணவர்கள் தரும் விபரீத பாடம் - Dr. ஃபஜிலா ஆசாத் PDF Print E-mail
Friday, 14 February 2020 08:01
Share

மாணவர்கள் தரும் விபரீத பாடம்

    Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

[ உலகிலேயே அதிக அளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. இங்கு 2011-2015க்குள் சுமார் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.]

உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள். அவர்களுக்கு நீங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் அன்பை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை திணித்து விடாதீர்கள் என்கிறார் கலீல் ஜிப்ரான்.

பாருக்குள்ளே சிறந்த நாடாம் நம் பாரத திருநாட்டில், ஒரு மணித்துளிக்கு ஒரு மாணவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸின்’ அறிக்கையைப் படிக்கும் போது, கலீல் ஜிப்ரான் சொன்னதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

உலகிலேயே அதிக அளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. இங்கு 2011-2015க்குள் சுமார் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இது 2016-2017 இல் இன்னும் அதிகரித்துள்ளது எனபுள்ளி விபரங்களுடன் red alert தந்து National crime records bereau(NCRB) விடும் எச்சரிக்கை நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற திகைப்பையே தருகிறது.

இந்த விபரீதங்களுக்கெல்லாம் முதன்மைக் காரணம் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், படிப்பின் பளுவும், பரிட்சை பயமும், பதற்றமும், தோல்வியும் தரும் மன அழுத்தமுமே என்று ஆய்வுகள் அறிக்கை விடுவது நிச்சயம் நாம் மேலோட்டமாக படித்து விட்டு கடந்து செல்வதற்கல்ல.

சென்ற வருடம் பீகாரில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட “அமன் குமார்” என்ற மாணவன் தன் பெற்றோருக்கு எழுதி விட்டு சென்ற, “என்னை மன்னித்து விடுங்கள் என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை “ என்ற கடிதம் இந்த ஆய்வுகளின் அழுத்தமான உண்மையை நம் மனதில் இறுத்துகிறது.

இந்தக் கடிதமும் தற்கொலையும் கடைசியாக இருக்கட்டும். இது இனி உலகிற்கு ஒரு பாடமாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே இதோ, இந்த வருடம் “அர்ஜுன் பரத்வாஜ்” என்ற மாணவன், முக நூலில் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டே, மும்பை ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து குதித்து தன் உயிரை முடித்துக் கொள்கிறான். தேர்வில் அவன் அடைந்த அடுக்கடுக்கான தோல்வியும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே தன் மகனை இந்த விபரீத முடிவு எடுக்க செய்தது என அழுது புரண்ட அவன் தந்தையை அங்கு தேற்றுவார் இல்லை.

பரீட்சை, தோல்வி என உழலும் மாணவன், தான் தோற்றுவிட்டோமே , தன்னால் தன் குடும்பத்திற்கே அவமானமாகிவிட்டதே, என பலவாறு மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு உந்தப் படுகிறான். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் வைக்கப்படும் அதிகப் படியான எதிர்பார்ப்பும் காரணம் என்ற அதிர்ச்சியைத் தருகிறது 2016 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட இன்னும் பல ஆய்வுகள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தைப் பற்றி அக்கறை எடுக்கும் அதே நேரம் அவர்கள் மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சுகாதரத் துறையில் மனநலத்திற்கான ஒதுக்கீடு இந்தியாவில் வெறும் 0.06% மட்டுமே உள்ளது. இது மற்ற நாடுகளை விட 87% குறைவானது, இது மாற்றப் பட வேண்டும் என குரல் கொடுக்கிறது உலக சுகாதர நிறுவனம்(WHO)

எப்போதுமே, நோய் தீர்ப்பதினும் நோய் வராமல் தடுப்பதே மேல் அல்லவா.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?!

எங்கே தவறு நேரிடுகிறது?!

ஆழ்ந்து யோசிக்கையில் ஏனோ, பிறந்த நாள் விழா ஒன்றில் நடந்த பலூன் ஊதும் போட்டி தான் நினைவிற்கு வருகிறது.

பல விதமான பலூன்களை பார்க்கிறோம். மற்ற பலூனின் அளவை விட நம்முடையது பெரிதாக வேண்டும் என்றோ அல்லது அதே அளவு வேண்டும் என்றோ நினைத்து நம் கையில் உள்ள பலூனை முடிந்த மட்டும் ஊதுகிறோம். நுரையீரலில் இருந்து காற்றை உந்தி, உதடுகள் இரண்டும் குவித்து, விழிகள் தெறிக்க கன்னங்கள் உப்பி மூச்சை நிறுத்தாமல் ஊதுகிறோம்.

நம் முயற்சி சரி, நம் எண்ணம் சரி, ஊதுகிறோமே அந்த பலூனின் அளவைப் பார்த்தோமாஸ?! இந்த சிறிய பலூன் எத்தனை கொள்ளும் என்று யோசித்தோமா? நம்முடைய உந்துதலில் ஊத ஊத அது பெரிதாகுவதைப் பார்க்கும் பெருமிதத்தில்ஸ நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்தோமா? அந்த பலூனின் கொள்ளளவை விட அதிகமாக ஊதினால் அது வெடித்து விடுமே என்ற துடிப்பு எழுந்ததா?! நான்.., என் திறமை என்று நினைக்கிறோமே, பலூன்.., அதன் தனித்தன்மை, அதன் கொள்ளளவு என்று ஏன் பார்க்க மறுக்கிறோம்.

என் மூச்சுக்காற்றை எல்லாம் உட்செலுத்தி, நுரையீரல் அழுந்த, கன்னங்கள் கடுக்க, புருவங்கள் உயர, கண்கள் பிதுங்க, உச்சி மண்டையில் சுளீர், சுளீர் என்று வலி எழுந்த போதும் விடாமல் ஊதினேனேஸ உன்னை இன்னும், இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று துடித்து, துடித்து ஊதினேனேஸ உனக்கு அது ஏன் புரியவில்லை என்று நம் முற்சிக்கு படியாமல் வெடித்து சிதறும் பலூனை பார்த்து பின் ஏன் கதறுகிறோம்.

ஊத, ஊத அழகாய் அற்புதமாய் பெரிதாகிக் கொண்டே வந்த பலூனை, இழுத்த இழுப்புக்கெல்லாம், விரிந்து கொண்டே வந்த அந்த பலூன் வெடிக்கும் வரை ஊதியது நம் தவறாஸ முயன்று, முயன்று முடியாமல் வெடித்து சிதறிய அந்த பலூனின் தவறா?

பெரும்பாலும் இந்த பலூனின் நிலை தானே ஒரு மாணவனின் எதார்த்த நிலையாக இருக்கிறது. இதை சரியான முறையில் புரிந்து கொண்டால், வெடிக்காத வீரிய பலூன்களால் நம் வீடும் நாடும் விழாக் கால தோரணம் கொள்ளுமே!ஆவன செய்வோமா?!

Dr.Fajila Azad faj

(International Life Coach – Mentor – Facilitator)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it FB:fajilaazad.dr youtube:FajilaAzad